Friday, April 12, 2024

சினிமா வரலாறு-58 – நடிகையை மாற்றச் சொன்னதால் பட வாய்ப்பை இழந்த எஸ்.வி.ரங்காராவ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகம் திரையிலே எத்தனையோ அப்பாக்களை சந்தித்திருக்கிறது என்றாலும் எஸ்.வி.ரங்காராவிற்கு நிகரான ஒரு அப்பாவை இன்றுவரை சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. அன்று முதல் இன்றுவரை தமிழ் சினிமாவின் அன்பான அப்பா என்றால் அது எஸ்.வி.ரங்காராவ் மட்டுமே.

அப்பா வேடங்கள் மட்டுமின்றி அக்பர், பீஷ்மர், தட்க்ஷன், துரியோதனன், கடோத்கஜன், அரிச்சந்திரன், இரண்யன், கம்சன், கீசகன், நரகாசுரன், ராவணன், யமன் என்று எத்தனையோ புராண பாத்திரங்களையும், சரித்திர பாத்திரங்களையும் ரங்காராவ் ஏற்றிருந்தாலும், அவர் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றிருப்பது ‘படிக்காத மேதை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘அன்னை, மிஸ்ஸியம்மா’ ஆகிய படங்களில் அவர் ஏற்ற பாத்திரங்கள்தான்.

தனது பன்னிரண்டாவது வயதில் மேடை ஏறிய ரங்காராவிற்கு அதற்குப் பிறகு அவர் கல்லூரி படிப்பை முடிக்கும்வரை நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்லூரியில் படித்த நாட்களில் அவர் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருந்தது நாடகத்திலும் திரைப்படங்களிலும் நடிக்கின்ற கனவுகள்தான்.

பட்டப் படிப்பு முடிந்ததும் தீயணைப்புத் துறையில் உயர் அதிகாரியாக வேலைக்கு சேர்ந்தார் ரங்காராவ். அங்கே பணியாற்றும்போது எத்தனையோ தீ விபத்துக்களை தண்ணீர் ஊற்றி அணைத்த அவரால் தன் மனதில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நடிப்பு ஆர்வம் என்னும் தீயை மட்டும் அணைக்கவே முடியவில்லை.

அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில்தான் ‘வருதினி’ என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது. அடுத்த நிமிடமே தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு படப்படிப்பில் கலந்து கொள்ள சேலத்துக்கு பயணமானார் ரங்காராவ்.

பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்ற அந்தப் படம் 1947-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கிய ரங்காராவின் உறவினரான பி.வி.ராமானந்தம், அந்தப் படத்திலே கதாநாயகனாக நடித்த ரங்காராவ் ஆகிய இருவரைத் தவிர வேறு எவர் நினைவிலும் அப்படம் இல்லை.

கதாநாயகனாக ஜொலிக்காத ரங்காராவ் வில்லன் வேடத்தில் நடித்தால் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறுவார் என்று பி.ஏ.சுப்பாராவ் என்ற தயாரிப்பாளருக்குத் தோன்றவே தனது ‘பல்லட்டூரி பில்லா’ என்ற தெலுங்குப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார். அந்தப் படம்தான் என்.டி.ராமாராவ் அறிமுகமான முதல் படம். அது மட்டுமின்றி என்.டி.ராமாராவும், ஏ.நாகேஸ்வரராவும் இணைந்து நடித்த முதல் படமாகவும அந்தப் படம் அமைந்தது.

மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தும் தனது தந்தை திடீரென்று இறந்துவிட்டதால் ரங்காராவால் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குறிப்பட்ட நாளில் இவர் வராததால் இவருக்கு அழைப்பு விடுத்த சுப்பாராவே அந்தப் பாத்திரத்தில் நடித்தார்.

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்ற பழமொழிக்கேற்ப எஸ்.வி.ரங்காராவைத் தேடி வந்தது ‘பாதாள பைரவி’ படத்தில் மந்திரவாதியாக நடிக்கின்ற வாய்ப்பு.

எஸ்.வி.ரங்காராவ் என்ற ஆற்றல் மிக்க அற்புதமான நடிகரை ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரை உலகிற்கும் அடையாளம் காட்டிய திரைப்படமாக ‘பாதாள பைரவி’ அமைந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

‘பாதாள பைரவி’யைத் தொடர்ந்து ‘பெல்லி சேசி சூடு’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்ற பெயரில் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாரான இரு மொழிப் படத்தில் ஒரு ஜமீன்தாரின் வேடத்தில் நடித்தார் எஸ்.வி.ரங்காராவ். அந்தப் பாத்திரத்தில் அவரது நடிப்பும், உடல் மொழியும் படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது.

நாகி ரெட்டியும், சக்ரபாணியும் இணைந்து தயாரித்த ‘பாதாள பைரவி’, ‘பெல்லி சேசி சூடு’ ஆகிய இரு படங்களில் நடித்த பிறகு ரங்காராவின் திரையுலக வாழ்க்கை ஏறுமுகமாகவே அமைந்தது.

அதற்குப் பிறகு நாகி ரெட்டி, சக்ரபாணி ஆகிய இருவருக்கும் செல்லப் பிள்ளையானார் ரங்காராவ். “அவர்கள் இருவரும் பிலிம் இல்லாமல்கூட படம் எடுப்பார்கள். ஆனால் ரங்காராவ் இல்லாமல் படம் எடுக்க மாட்டார்கள்” என்று அவர்களது நிறுவனத்தில் பணியாற்றியவர்களே கூறுகின்ற அளவிற்கு விஜயா-வாகினி படங்களில் தவறாமல் இடம் பெற்றார் ரங்காராவ்.

விஜயா-வாகினியின் அடுத்த தயாரிப்பான ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் ஜமுனாவின் தந்தையாக நடித்திருந்தார் அவர். அதுவரை அப்பாவாக மட்டும் இருந்த எஸ்.வி.ரங்காராவ் அந்தப் படத்திற்குப் பிறகுதான் ‘அன்புள்ள அப்பா’வானார் என்று சொல்லலாம்.

1947-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான ரங்கராவிற்கு திருப்பு முனை ஆண்டாக 1957-ம் ஆண்டு அமைந்தது. அந்த ஆண்டில்தான் ரங்காராவ் கடோத்கஜனாக நடித்த ‘மாயா பஜார்’ திரைப்படம் வெளிவந்தது. இன்றைய தலைமுறையினருக்கும் அறிமுகமான நடிகராக ரங்காராவ் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அந்தப் படத்திலே அவர் ஏற்றிருந்த கடோத்கஜன் வேடம்தான்.

‘மாயா பஜார்’ படத்தில் கிருஷ்ணராக நடித்தவர் என்.டி..ராமராவ். கிருஷ்ணர், ராமர் போன்ற புராண வேடங்களில் நடிப்பதில் ஈடு இணையற்று விளங்கிய என்.டி.ராமாராவ் ‘மாயா பஜார்’ படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்கும்போது முதலில் அவ்வளவாக அந்தப் பாத்திரத்தில் ஈடுப்பாட்டோடு நடிக்கவில்லை.

ஆகவே, அந்தப் பாத்திரத்தில் அவர் ஈடுபாட்டோடு நடிப்பதற்காக வித்தியாசமான ஒரு உத்தியைக் கையாள அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான நாகி ரெட்டியும், சக்ரபாணியும் முடிவு செய்தனர்.

அவர்கள் ஏற்பாட்டின்படி கிருஷ்ணர் வேடத்தில் படப்பிடிப்பு தளத்திற்குள் என்.டி.ராமராவ் காலடி எடுத்து வைத்ததும் ஆண்டவனுக்கு காட்டுவது போல அவருக்கு ஒரு பூஜாரி தினமும் கற்பூர ஆரத்தி எடுக்கத் தொடங்கினார். அதன் விளைவாக நாட்கள் செல்லச் செல்ல நடிப்பில் மட்டுமின்றி நிஜத்திலேயே கிருஷ்ணராக அவர் மாறிவிட்டார் என்கிறார் ரங்காராவ்.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக எண்ணற்ற படங்களில் நடித்த சரோஜாதேவி தான் எஸ்.வி.ரங்காராவின் மகளாக அதிகமான படங்களில் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ‘சபாஷ் மீனா’.

அவர்கள் இருவரும் தந்தையும் மகளுமாக நடித்த படங்களில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு திரைப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’. தன்னுடைய மகள் மீது அளவில்லா பாசத்தைக் காட்டும் தந்தையாக அந்தப் படத்திலே வாழ்ந்திருந்தார் ரங்காராவ். விஜயா வாகினி தயாரிப்புகளில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அந்தப் படம் அமைந்தது.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயா வாகினி தயாரித்த படம் ‘எங்க வீட்டுப் பெண்.’ விஜயா புரோடக்ஷஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘சவுகார்’ படத்தின் தமிழ்ப் பதிப்புதான் ‘எங்க வீட்டுப் பெண்’. ‘சவுகார்’ என்ற பாத்திரத்தில் சவுகார் ஜானகி அறிமுகமான அந்தப் படத்தைத் தமிழில் தயாரித்தபோது அந்தப் பாத்திரத்தில் நடிக்க நாகிரெட்டியும், சக்ரபாணியும் விஜய நிர்மலா என்ற நடிகையைத் தேர்ந்தெடுத்து இருந்தனர்.

அந்தப் படத்திற்கு முன்னால் ‘பார்கவி நிலையம்’ என்ற படத்தில் பிரேம் நசீருக்கு ஜோடியாக நடித்திருந்தார் விஜய் நிர்மலா. தமிழ்ப் படத்திற்காக அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னாலே அவருக்கு மூவி டெஸ்ட் எடுத்துப் பார்த்தபோது அவர் தமிழில் பேச தடுமாறுவது நாகிரெட்டிக்கும் சக்ரபாணிக்கும் தெரிந்தது. ஆகவே அவருக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு தமிழாசிரியர் நியமிக்கப்பட்டார்.

‘எங்க வீட்டுப் பெண்’ படப்பிடிப்பில் முதல் காட்சியாக எஸ்.வி.ரங்காராவும், விஜய் நிர்மலாவும் நடித்த காட்சியைப் படமாக்கினார் நாகிரெட்டி. அந்தப் படத்தை அவர்தான் இயக்கினார் என்றாலும் என்ன காரணத்தாலோ படத்தின் டைட்டிலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. சாணக்யாவின் பெயர்தான் டைட்டிலில் ‘டைரக்டர்’ என்று இடம் பெற்றிருந்தது.

“ஸ்டார்ட் சவுண்ட், கேமரா ஆக்ஷன்” என்று நாகி ரெட்டியார் குரல் கொடுத்தவுடன் விஜய் நிர்மலாவிற்கு ஏற்பட்ட படபடப்பில் அவரால் வசனத்தை சரியாகப் பேச முடியவில்லை.

“பல்லி மாதிரி இருக்கும் இந்தப் பெண்ணை எல்லாம் கதாநாயகியாகப் போட்டால் சரியாக வருமா..? உடனே இந்த பெண்ணை மாற்றிவிட்டு வேறு பெண்ணை போட்டு படம் எடுக்கின்ற வழியைப் பாருங்கள்” என்று சற்று உரக்கவே சொல்லிவிட்டு அந்த செட்டின் ஓரத்தில் இருந்த ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்துவிட்டார் ரங்காராவ்.

“அந்தப் பெண் நடிக்கின்ற முதல் தமிழ்ப் படம் இதுதான். தமிழ் மொழியிலே பேசி அந்தப் பெண்ணிற்கு பழக்கம் இல்லை என்பதால் படபடப்பாக இருக்கிறாள். இரண்டு மூன்று நாட்கள் நடித்தால் சரியாகிவிடும்” என்றெல்லாம் நாகி ரெட்டி, ரங்காராவிடம் எவ்வளவோ சொல்லிய பிறகும் விஜய நிர்மலாவோடு மீண்டும் நடிக்க ரங்காராவ் ஒப்புக் கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து முதல் நாள் படப்பிடிப்பு ஒரு காட்சி கூட படமாகாமல் ரத்தானது.

முதல் நாளே இப்படி என்றால் படத்தை முடிப்பதற்குள் என்னென்ன பிரச்னைகள் வருமோ என்று பயந்த நாகி ரெட்டி தனது நண்பரான சக்ரபாணியிடம் ஆலோசனை நடத்தினார்.


“நடிகர்கள் மாற்றம் இல்லாமல் படப்பிடிப்பைத் தொடர்வது என்பது தற்கொலைக்கு சமம்” என்றார் அவர். அவருடைய கருத்தை ஏற்றுக் கொண்ட நாகி ரெட்டி விஜய் நிர்மலாவை மாற்றவில்லை. அதற்குப் பதிலாக ரங்காராவை படத்திலிருந்து நீக்கிவிட்டு எஸ்.வி.சுப்பையாவை அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

நாகிரெட்டி-சக்ரபாணி ஆகிய இருவருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்த ரங்காராவின் திரையுலக வாழ்க்கையில் நேர்ந்த விபத்து என்றுதான் அந்த சம்பவத்தை சொல்ல வேண்டும்.

இப்பேர்ப்பட்ட ரங்காராவையும் பின்பு ஒரு காலத்தில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் நேருக்கு நேராக கடுமையாக விமர்சித்தார் ஒரு பிரபல நடிகர்.

அவர் யார் என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News