நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் பீரியடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்திற்கு அடுத்ததாக, சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சூர்யா இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், சூர்யாவின் 46-வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்தியாவின் முதல் என்ஜின் எப்படி உருவானது என்பதைக் கூறும் கதை என்பதால், இப்படத்திற்கு ‘760 சிசி’ என்ற தலைப்பு வைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்தில் ஒரு பேட்டியில், சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகும் படத்தை தாம் தயாரிக்க இருப்பதாக உறுதி செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “சூர்யா சாருடன் ஒரு படம் செய்வதற்காக நான் நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் விதத்தில் அவரை நாங்கள் ஒரு புதிய கோணத்தில் காண்பிக்கபோகிறோம். இது எங்களுக்காக ஒரு முக்கியமான மற்றும் சிறந்த படம் ஆகும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.