Friday, November 22, 2024

‘தல’ அஜீத்துடன் பணியாற்ற விருப்பம்தான். ஆனால்..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“தமிழ்த் திரையுலகத்தில் ‘தல’ என்று போற்றப்படும் அஜீத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருந்தாலும் அவருடைய படங்களில் தொடர்ந்து பணியாற்றும் கலைஞர்களெல்லாம் என்னுடைய தம்பிமார்கள் என்பதால் அதில் தலையிடுவதற்கு எனக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது..” என்று அடக்கத்துடன் கூறுகிறார் தமிழ்ச் சினிமாவின் மூத்த புகைப்படக் கலைஞரான ஸ்டில்ஸ் ரவி.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“அஜீத்துடன் எனக்கு அதிகமாகப் பழக்கமில்லை. இரண்டு முறைகள்தான் அவரை சந்தித்திருக்கிறேன். அவருடைய படங்களில் நான் பணியாற்றவும் இல்லை.

ஆனால் அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய பழகும் தன்மை, உதவி செய்யும் குணம்.. அடக்கமான பண்பு இதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அறிந்திருக்கிறேன்.

என்னுடைய சக புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான பாலமுருகன் ஒரு சம்பவத்தை என்னிடம் சொன்னார்.

ஒரு நாள் ஒரு படப்பிடிப்பில் அஜீத் அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் அமர்ந்த இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் தள்ளி நின்றபடியே ஒரு தொழிலாளி தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து பேசிக் கொண்டிருந்தார்.

அவருடைய அம்மாவிடம் தனக்கு அவசியமாக பைக் தேவைப்படுவதாகவும்.. அது இல்லாமல் படப்பிடிப்புக்கு வருவதும், போவதும் மிகவும் சிரமமாக இருப்பதாகவும்.. அந்த பைக் வாங்குவதற்கு கொஞ்சம் பணம் தன் கையில் இருப்பதாகவும், மீதிப் பணத்தை அம்மா அனுப்பி வைத்தால் தான் வாங்கிவிடுவேன் என்றும் தன் அம்மாவிடம் அவர் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பேச்சு அஜீத்தின் காதுகளில் விழுந்துவிட்டது. அவர் எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவிவிட்டு எழுந்து போய்விட்டார். திரும்பவும் சாயந்தரம் ஷூட்டிங் முடிந்த பின்பு திடீரென்று ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு புத்தம் புது பைக் ஒன்று வந்திறங்கியது.

அது அந்தப் பையன் ஆசை, ஆசையாக தன் அம்மாவிடம் போனில் கேட்டுக் கொண்டிருந்த பைக். அந்தத் தொழிலாளியை அழைத்த அஜீத் அவரிடம் பைக்கின் சாவியைக் கொடுத்து என் அன்பளிப்பா வைச்சுக்க என்று சொல்லிக் கொடுத்தாராம்.

இதை பாலமுருகன் என்னிடம் சொன்னதும், என்னால் நம்பவே முடியவில்லை. இந்த அளவுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ள நடிகரோடு இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இப்போதும் இருக்கிறது.

சென்னையில் அஜீத்தை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், அவரை துபாயில் இரண்டு முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் துபாயில் எனது மகள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, பக்கத்தில் இருந்த பூங்காவில் அஜீத் நடித்த ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கேள்விப்பட்டவுடன் நான் நேரில் சென்று பார்த்தேன். அப்போது அஜீத் என்னிடம் வந்து ஸார் என்று கை கொடுத்து. ‘எப்படி இருக்கீங்க..? என்ன பண்றீங்க..?’ என்று அக்கறையாக விசாரித்தார். மனதுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

நான் தமிழ்ச் சினிமாவில் அனைத்துக் கலைஞர்களுடனும் புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஆனால் அஜீத்துடன் மட்டும்தான் எடு்க்க முடியாமல் இருந்தது. அதனால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள நேரம் கேட்டிருந்தேன்.

ஒரு நாள் திடீரென்று போனில் அழைத்து “உடனே வர முடியுமா…?” என்றார். அப்போது வெளியில் இருந்த நான் அவசரமாக வீ்டடுக்கு ஓடோடி வந்து கேமிராவை எடுத்துக் கொண்டு அவரைப் பார்க்கப் போனேன். நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன். அந்தச் சந்திப்பு மனதுக்கு நிறைவாக இருந்தது.

அவருடைய படங்களில் இப்போது தொடர்ச்சியாகப் பணியாற்றும் புகைப்பட கலைஞர்கள் அனைவரும் எனக்கு நன்கு தெரிந்த சக கலைஞர்கள் என்பதால் அவரிடத்தில் வாய்ப்பு கேட்க எனக்குச் சங்கடமாக இருந்தது. அதனால் கேட்கவில்லை.

கொஞ்சம் வயதானாலோ.. ஒரு துறையில் மூத்தவராக இருந்தாலோ இதுதான் பிரச்சினை.. இதில் ‘கலைமாமணி’ விருது வேறு வாங்கிவிட்டேன். அதனால் ‘ரொம்ப மூத்தவர்’ என்று சொல்லி இண்டஸ்ட்ரியில் மரியாதையுடன் நடத்துகிறார்கள்.. இந்த மரியாதையும், சந்தோஷமுமே போதும் என்று நினைக்கிறேன்..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.

- Advertisement -

Read more

Local News