Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

“மெகா இயக்குநர் ஷங்கர் நன்றி மறந்தவர்..” – ஸ்டில்ஸ் ரவியின் குமுறல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“தமிழ்த் திரையுலகின் மெகா இயக்குநரான ஷங்கர் நன்றி மறந்தவர்…” என்று குமுறியுள்ளார் புகைப்படக் கலைஞரான ஸ்டில்ஸ் ரவி.

அவர் இது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் இயக்குநர் பவித்ரனின் 2 திரைப்படங்களுக்கு புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினேன். அப்போது அவரிடத்தில் இணை இயக்குநராக இருந்த ஷங்கர் எனக்கு நல்ல பழக்கம். அவர் நல்ல அறிவாளி. காமெடி சென்ஸ் உள்ளவர்.

அவர் தனியாக படங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் ஏ.வெங்கடேஷுடன் என் வீட்டுக்கு வந்து ‘ஜென்டில்மேன்’ படத்தின் கதையை என்னிடத்தில் கூறினார். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எக்ஸ்ட்ரா ஆர்டினரி கதையாக எனக்குத் தோன்றியது.

ஆனால், அதில் அதிகமாக இருந்த பிராமண பாஷையை மட்டும் குறைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினேன். தொடர்ந்து இந்தக் கதையை படமாக்கும்படி சிவஸ்ரீ பிக்சர்ஸ், தாணு ஸார், அன்பாலயா பிரபாகரன் உள்ளிட்ட பல  தயாரிப்பாளர்களிடத்தில் சிபாரிசு செய்தேன். ஆனாலும், அவர்கள் யாரும் ஷங்கரை இயக்குநராக முன் வரவில்லை.

இந்த நேரத்தில் குஞ்சுமோன் ஸாருக்கும், பவித்ரனுக்கும் இடையில் சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. பவித்ரன், குஞ்சுமோனைத் தவிர்த்துவிட்டு தனியாக படம் செய்யப் போய்விட்டார். இந்தப் பிரச்சினையைக் கேள்விப்பட்டு அவர்களுக்கிடையில் சமரசம் செய்து வைக்க நான் குஞ்சுமோன் ஸாரை சந்திக்கச் சென்றேன்.

அப்போது அவர் பவித்ரன் தன்னைவிட்டுப் போனதில் கடும் கோபத்தில் இருந்தார். பவித்ரன் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று திட்டிக் கொண்டிருந்தார். கூடவே அடுத்து ஒரு மலையாள இயக்குநர், ஒரு தமிழ் இயக்குநரை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்திருந்தார்.

இந்த நேரத்தில்தான் நான் குஞ்சுமோனிடம், ஷங்கர் பற்றிச் சொன்னேன். “ஓ.. எனக்குத் தெரியுமே.. பவித்ரன் அஸிஸ்டெண்ட்…” என்றார் குஞ்சுமோன். அப்போது, “ஷங்கரிடம் ஒரு நல்ல கதை இருக்கு. நிச்சயமாக தயாரிக்கலாம்…” என்று குஞ்சுமோனிடம் சொன்னேன். உடனேயே “ஷங்கரை வரச் சொல்லுங்க…” என்றார் குஞ்சுமோன்.

எனக்கு அடுத்த நாள் வேறொரு படத்தில் வேலை இருந்ததால் வெளியூருக்குக் கிளம்பினேன். அப்போது ஷங்கர், பவித்ரனுடன் இணைந்து அடுத்தப் படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக வெளியூர் போய்விட்டார்.

இதனால், “நீங்களே உங்களது மேனேஜரை வைத்து ஷங்கரை அழைத்துக் கதை கேளுங்கள்…” என்று குஞ்சுமோனிடம் சொல்லிவிட்டு நானும் வெளியூர் போய்விட்டேன்.

நான் சொன்னது போலவே ஷங்கர், குஞ்சுமோனை நேரில் பார்த்து ‘ஜென்டில்மேன்’ கதையைச் சொல்லியிருக்கிறார். குஞ்சுமோனுக்கும் அந்தக் கதை பிடித்துப் போய் உடனேயே ஷங்கருக்கு ஓகே சொன்னார். இப்படித்தான் அந்தப் படம் துவங்கியது. அந்தப் படத்துக்கு நான்தான் ஸ்டில்ஸ் எடு்த்தேன்.

இதற்கடுத்த படம் ‘காதலன்’. இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘கோபாலா கோபாலா’ பாடல் காட்சி வைசாக் அருகே படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் நான் ஒரே சமயத்தில் 5, 6 படங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், ஒவ்வொரு படத்திற்கும் ஷூட்டிங் துவங்கிய 1 நாள், 2 நாட்கள் கழித்துதான் வருவேன். எனக்கு அத்தனை வேலைப் பளு அப்போது.

அதேபோல் இந்தப் பாடல் காட்சியைப் புகைப்படம் எடுக்கவும் கொஞ்சம் தாமதமாக கிளம்பிச் சென்றேன். இதற்கான டிராவல் கொஞ்சம் டிரெயின், கொஞ்சம் பஸ்.. கொஞ்சம் கார்.. கொஞ்சம் படகு என்று போனதால்… என்னை அழைத்துப் போக வந்த மேனேஜரிம் “என்னப்பா இதுவே சினிமா மாதிரியிருக்கு…?!” என்றேன்.

அதை அந்த மேனேஜர் ஷங்கரிடம் போய் எப்படி, என்ன மாதிரி மாற்றிச் சொன்னார் என்று எனக்குத் தெரியாது.. அந்த ஷூட்டிங் முடிந்து திரும்பிய  பின்பு குஞ்சுமோன் ஒரு நாள் என்னை அழைத்து, “சங்கர் இனிமேல் இந்தப் படத்துக்கு நீங்கள் வேண்டாம் என்கிறார். அதனால் நீங்கள் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்கு வர வேண்டாம்..” என்றார்.

எனக்குப் பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையிலேயே நான் அப்படி கமெண்ட் அடித்ததுதான் பிரச்சினை என்றால் என்னை நேரில் அழைத்துக் கேட்டிருக்கலாம் இல்லையா..?

அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்வரையிலும் தினமும் இரவு நேரத்தில் என்னை போனில் அழைத்து.. “என்ன ஸார்.. இன்னிக்கு ஏதாச்சும் தகவல் உண்டா..? யாராவது ஒரு தயாரிப்பாளரை சொல்லுங்க…?” என்று கேட்டுக் கொண்டேயிருந்தவருக்கு இதைக் கேட்கத் தெரியாதா..!?

அந்த நாளுடன் அவருடனான தொடர்புகள் எனக்கு முற்றிலுமாக நின்று போனது. அதற்குப் பிறகு அவரை நான் நேரில் பார்க்கக் கூட இல்லை. அவரும் என்னை அழைக்கவில்லை.

நான்தான் குஞ்சுமோனிடம் அவரைப் பற்றிச் சொன்னேன் என்பதை இதுநாள்வரையிலும் ஷங்கர் வெளியில் சொன்னதே இ்ல்லை. சமீபத்தில் குஞ்சுமோன்தான் ஒரு பேட்டியில் இதைப் பற்றிக் குறிப்பிட்டார். அதனால்தான் இதெல்லாம் வெளியில் வந்தது.

இதுவரையிலும் சந்தோஷம்தான். ஆனாலும், ‘மனிதர்கள் இவ்வளவு சீக்கிரமாக நன்றி மறக்கிறார்கள்’ என்பதை என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது ஷங்கரிடமிருந்துதான்..” என்று வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் ஸ்டில்ஸ் ரவி.

- Advertisement -

Read more

Local News