ஒரு வாழ்க்கை வரலாற்றைப் பேசும் திரைப்படத்தில் ஒரு நடிகர் நடிக்கும்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
அப்படியான எதிர்பார்ப்புகளை மாஸ் சண்டைக் காட்சிகளை வைத்து பூர்த்தி செய்தால் படத்தின் எதார்த்தம் கெட்டுவிடும். வரலாற்றை அப்படியே எடுத்தால் படம் டாக்குமென்ட்ரி ஆகிவிடும். மிகக் காத்திரமாக திரைக்கதை அமைத்தால் மட்டுமே இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியும்.
இந்த ‘சூரரைப் போற்று’ படத்தில் அப்படியான மாஸ் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
அடித்தட்டு நிலையில் வாழும் மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தானான நெடுமாறன் என்ற சூர்யா, எப்படி சுற்றமும் சமூகமும் போற்றும்படியான விமான சேவையை அமைக்கிறார் என்பதுதான் கதை.
‘டெக்கான் ஏர்லைன் நிறுவனர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் சூரியா நடிக்கிறார்’ என்ற செய்தி வரும்போதே எதிர்பார்ப்பு எகிறியது. அந்த எதிர்பார்ப்பிற்கு துளியும் வஞ்சனை செய்யாமல் அசத்தி இருக்கிறார் சூர்யா.
சமீப ஆண்டுகளாக அவருடைய படங்களில் ஒரேவிதமான மாடுலேசன் அவரது பாடி லாங்வேஜில் தெரிகிறது என்ற விமர்சனத்தை இப்படத்தில் அடித்து நொறுக்கி இருக்கிறார் சூர்யா. மிகத் தேர்ந்த நடிப்பு. கங்ராட்ஸ்!
சூர்யாவிற்கு அடுத்து…. ஏன் சில இடங்களில் சூர்யாவையே தூக்கிச் சாப்பிடுகிறார் அபர்ணா பாலமுரளி. சூர்யாவை காதலனாக.. கணவனாக… அவர் ஏற்கும் தருணங்கள் எல்லாம் ‘வாவ்’ ரகம்.
வில்லனாக வரும் பரேஷ், நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் காளி வெங்கட், கருணாஸ், ‘பூ’ ராமு என படத்தில் சிங்கிள் ஷாட் கேரக்டர்களும் படத்துடன் பக்காவாக மிங்கிள் ஆகிறார்கள்.
படத்தில் சும்மா எட்டிப் பார்க்கும் ஒரு அட்மாஸ்பியர் கேரக்டரும் ஸ்கோர் பண்ணுகிறது. இது திரைக்கதை ஆசிரியரின் அபார டச்.
ஒரு சாதாரணன் சரித்தரம் படைக்கும் வழக்கமான மோட்டிவேசன் கதை மாதிரி தெரிந்தாலும், படத்தில் பல எதார்த்தங்களை பட் பட் என போட்டு உடைத்துள்ளார் இயக்குநர்.
ஒரு எளியவன் வலியவன் முன் போட்டியிட்டாலோ.. வாழ நினைத்தாலோ அதற்கு அதிகாரத்தின் துணை கொண்டு வலியவன் என்னவெல்லாம் செய்வான் என்ற உண்மையை மிக அற்புதமாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் ஆகப் பெரும் பலமாக ஜீவி பிரகாஷுன் பின்னணி இசையும், பாடல்களும் இருக்கின்றன. ஒளிப்பதிவு மதுரை சோழவந்தான் கிராமத்தையும் அதன் அழகியலையும் அழகாக காட்டியதோடு.. விமான ஓடுதளங்களையும் துல்லியமாக பதிவு செய்துள்ளது.
படத்தின் வசனங்கள் எல்லாமே நறுக்குத் தெறித்தாற் போல செம்ம ஷார்ப். கணவன் மனைவி இடையே உள்ள சிறுசிறு ஈகோ, அவர்களுக்குள் உள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றை மிகச் சிறப்பாக படமாக்கியுள்ளார் சுதா கொங்கரா.
படத்தின் ஆழமான விசயங்கள் நீர்த்துப் போகக் கூடாது என்பதற்காக சில கமர்சியல் விசயங்களை சேர்ப்பது இயல்புதான். சில இடங்களில் சில காட்சிகளில் சின்ன சின்ன தொய்வு இருந்தாலும் ‘சூரரைப் போற்று’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம்.
காரணம், இப்படம் அந்த அளவுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை படம் பார்ப்பவர்களிடத்தில் விதைத்திருக்கிறது.
படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!