‘கேளடி கண்மணி’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’, ‘சத்தம் போடாதே’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குநர் வசந்த் S.சாய்.
இவர் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு தற்போது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் பார்வதி திருவோத்து, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – வசந்த் S.சாய், தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீசித்ரா டாக்கீஸ், கதை – அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன், இசை – இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு – ‘Wide Angle’ ரவிஷங்கர், N.K.ஏகாம்பரம், படத் தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனர் – மகி, மார்ஷல், ஆடியோகிராபி – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு – நிகில்.
இந்தப் படம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்றது. தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல திரைப்படங்களுக்கும் நேர்ந்த கதிதான் இந்தப் படத்திற்கும் கிடைத்துள்ளது.
இதனால் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளரும், இயக்குநருமான வசந்த். இந்தப் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.