பாலியல் வன்முறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க, ‘பாலியல் கல்வி வேண்டும்; பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும்’ என்கிறது இன்று வெளியாகி இருக்கும் வி 3 (தமிழ்த்) திரைப்படம்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலகாலமாகவே பேசி வருகிறார்கள். அவர்கள், “பலர், ‘உடலுறவு கொள்வது எப்படி என்பதை சொல்லிக்கொடுப்பதே பாலியல் கல்வி’ என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். து தவறு. உடலில் ஏற்படும் மாற்றங்களை விளக்கி, அதனால் பதின்வ வயதில் ஏற்படும் மனக்குழப்பங்களை போக்குவதே பாலியல் கல்வி. இது அவசியமே” என்கிறார்கள்.
இந்த வி 3 திரைப்படம் சொல்லும் இன்னொரு விசயம்.. பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது.
இந்தியாவில் இத்தொழில் சட்டப்பூர்வம் ஆக்கப்படவில்லை;
அதே நேரம், ‘உரிய வயதுவந்த பெண், சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அது குற்ற நடவடிக்கை ஆகாது. காவல்துறை தலையிடக் கூடாது’ என கடந்த (2022) மே மாதம், உச்ச நீதிமன்றத்தின் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா அமர்வு தீர்ப்பு அளித்து உள்ளது.
‘பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது தவறு’ என்ற குரல் ஒங்கி ஒலிக்கிறது. இவர்கள், “பாலியல் பலாத்காரங்கள் தொடர்வதற்கு ஆபாச திரைப்படங்கள், செல்போன் படங்கள் போன்றவையே முக்கிய காரணங்கள். தவிர குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பது என்பதும் அரிதாகவே இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்யாமல், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கிவிட்டால் பலாத்காரங்கள் நடக்காது என்பது தவறான கருத்து.
தவிர, இத்தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பெண்களை அடிமைப்படுத்தி அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி சம்பாதிப்பவர்களுக்கே சாதகமாக முடியும். பாலியல் தொழிலில் எவரும் விரும்பி ஈடுபவதில்லை.. வறுமையாலும், கடத்தி வரப்பட்டு கட்டாயத்தினாலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆகவே பாலியல் தொழிலாளிகளின் வறுமையைப் போக்க நடவடிக்கை எடுத்து மாற்று வழி ஏற்படுத்துவதும், கடத்தலை தடுப்பதுமே சரியான நடவடிக்கை” என்கிறார்கள்.
‘பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும்’ என்பவர்களும் உண்டு. இவர்கள், “பாலியல் பலாத்காரங்கள் தொடர்வதற்கு ஆபாச திரைப்படங்கள், செல்போன் படங்கள் போன்றவையே முக்கிய காரணங்கள். தவிர குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பது என்பதும் அரிதாகவே இருக்கிறது என்பதெல்லாம் உண்மையே. இவை சரி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களில் விரும்புபவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதும், கடத்தலை முற்றிலும் தடுப்பதும் அவசியமே.
அதே நேரம் எதார்த்த நிலையை உணர வேண்டும்.
இந்தியாவில் ஆறு லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளி விபரமே கூறுகிறது; உண்மையில் இவர்களது எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும்.
இவர்கள் குறித்த கணக்கெடுப்பு முறையாக இல்லை.. ஆகவே இவர்களில் பலருக்கு ரேசன் கார்டு, ஆதார் கார்டு போன்றவை இல்லை. இதனால் இவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யவும் வாய்ப்பு இல்லை.
ஒரு புறம் காவல்துறை மறுபுறம் ரவுடிகள் என பந்தாடப்படுகிறார்கள்.
மேலும் பாலியல் தொழிலின் ஊடே போதை பொருள் – ஆயுதக் கடத்தல் போன்றவை நடக்கின்றன. இவற்றை பிரித்தறிய முடியாமல் போகிறது.
இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மாற்று வேலைகளை ஏற்பாடு செய்வது என்பது நடந்தால் நல்லதே. ஆனால் அது முற்றிலுமாக நடக்குமா என்பதை சிந்திக்க வேண்டும். அதே நேரம் இத்தொழிலை சட்டப்பூர்வமாக்கிவிட்டால் அந்த தொழிலாளிகளுக்கு உரிமைகள் கிடைக்கும். கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை எளிதில் கண்காணிக்க முடியும்” என்கிறார்கள்.
தங்கள் தொழிலை சட்டப்பூர்வமாக்கி பாதுகாப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என பாலியல் தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தியதும் உண்டு. இது குறித்து ஊடகங்களில் (மிகக் குறைவாகவே) விவாதங்கள் நடந்திருக்கிறது.
இந்நிலையில், இது குறித்து முதன் முறையாக (திரைப்படத்தில்) வி 3 படம், பேசி இருக்கிறது.
அந்த வகையில் கவனிக்கப்பட வேண்டிய திரைப்படம்.