ஒரு குத்துச் சண்டையை வைத்து இவ்வளவு பெரிய கும்மாங்குத்து குத்த முடியுமா என்று ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.
‘எங்க ஊரு மெட்ராஸு, நாங்கதானே அட்ரஸு’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப.. ரஞ்சித்திற்கு அடையாளம் என்றால் அது ‘மெட்ராஸ்’தான். ‘கபாலி’, ‘காலா’வில் அவர் ஒருவித அரசியல் கலந்த கமர்சியலுக்குச் சென்றிருந்தார். தற்போது இந்த ‘சார்பட்டா பரம்பரை’ மூலமாக திரும்பி வந்திருக்கிறார். அதே ‘மெட்ராஸ்’ அடையாளத்தோடு..!
1970-களில் நடந்த ஒரு வரலாற்று சார்ந்த அரசியல் நிகழ்வோடு குத்துச் சண்டையை வைத்து கதை சொல்லியிருக்கிறார்.
வடசென்னையில் குத்துச் சண்டைக்கு பயிற்சி அளிக்கும் ஒரு குரு குலமான ‘சார்பட்டா பரம்பரை’க்கு ‘ரங்கன்’ என்ற பசுபதி ஆசிரியர். சார்பட்டா பரம்பரைக்குப் போட்டியாக ‘இடியாப்ப பரம்பரை’. இந்தக் குருகுலத்திற்கு துரைக்கண்ணு ஆசிரியர். இவர்கள் இருவருக்குமிடையே போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் நாயகன் ஆர்யா எப்படி உள்ளே வருகிறார்..? அப்படி வந்தவருக்கு நேர்ந்த கதி என்ன..? என்பதுதான் படத்தின் திரைக்கதை.
படத்தில் நடித்துள்ள யாவரும் கதையோடு மிக அற்புதமாக ஒன்றியுள்ளார்கள். நடிகர்களின் தேர்விலேயே ஓர் உச்சபட்ச வெற்றியை அடைந்திருக்கிறார் பா.ரஞ்சித். சபாஷ்..!
கபிலனாக வரும் ஆர்யா மிரட்டி எடுத்திருக்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் கொஞ்சம் பிசகினாலும் படத்தோடு ஒன்ற அவர் எடுத்துள்ள முயற்சி & உழைப்பிற்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. அடுத்து நம் மனதை கொத்தாக அள்ளுகிறார் ரங்கனாக வரும் பசுபதி. மாரியம்மாவாக வரும் துஷாரா விஜயன் அட்டகாசமாக ஈர்க்கிறார். ஆர்யாவிற்கும் அவருக்குமான காட்சிகளில் எல்லாம் பொளந்து கட்டியிருக்கிறார் மாரியாத்தாவேதான். வெற்றியாக கலையரசனும், ராமனாக சந்தோஷ் பிரதாப்பும் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. ஜான் விஜய்யின் கேரக்டர் அவரது நடிப்பு போலவே அருமை. காளி வெங்கட், அனுபமா குமார் என எல்லோருமே திறம்பட நடித்துள்ளனர். முக்கியமாக ‘டான்ஸ் ரோஸ்’ என்ற பெயரில் வரும் ஓர் குத்துச் சண்டை வீர அடிப்பொலி..!
சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளன. முரளியின் கேமரா அந்தக்கால கட்டத்தை கண்முன்னே நிறுத்துகிறது. கலை இயக்குநர் ராமலிங்கத்தின் அசத்தலான உழைப்பை படமெங்கும் காண முடிகிறது. அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைப் பயிற்சி மலைக்க வைக்கிறது. திரைக்கதை, வசனத்தில் எழுத்தாளர் தமிழ் பிரபாவின் பங்களிப்பு பலமாக இருந்துள்ளது.
முன் பாதியில் மின்னல் வேகத்தில் செல்லும் படம் பின் பாதியில் கொஞ்சம் பின்னல் நடைபோடுகிறது. குறிப்பாக கலையரசனும் ஆர்யாவும் புத்திமாறிச் செல்லும் இடங்கள். மேலும் அவர்கள் தீய வழிக்குச் செல்வதற்கான காரணங்கள் அவ்வளவு சரியாகவும் இல்லை. திரைக்கதையில் இதை மட்டும் ஒரு சிறு குறையாகச் சொல்லலாம்.
மற்றபடி இதுவொரு அருமையான எக்ஸ்பீரியன்ஸை தரக் கூடிய படம் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டாம்.