Thursday, April 11, 2024

சர்தார் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“வரும் காலங்களில் என்றைக்காவது ஒரு நாள் உலகப் போர் மீண்டும் மூளுமானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்” என்று வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல், பொருளாதாரா ஆய்வாளர்கள் அனைவரும் அறுதியிட்டு கூறுகிறார்கள்.

ஏனெனில் இந்த உலகத்தின் புவியியல் அமைப்பியல் அப்படித்தான் உள்ளது. ஒரு நாட்டில் உருவாகும் நதி பாய்ந்தோடி பல நாடுகளை வளம் செழிக்க வைக்கிறது. அந்த நதியை ஒரே நாட்டிலேயே அடைத்து வைக்கப் பார்த்தால் போர் வெடிக்காதா..? அப்படியொரு சூழல் வரத்தான் போகிறது என்று எச்சரிக்கிறார் இந்த ‘சர்தார்’ படத்தின் இயக்குநரான மித்ரன்.

‘விஜயபிரகாஷ்’ என்னும் கார்த்தி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். நேர்மையாகவும், துடிப்பாகவும், விழிப்பாகவும் இருக்கும் ஒரு இளைஞர். அதே நேரம் கொஞ்சம் விளம்பர விரும்பி. தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவதை விரும்புவர்.

அப்படியொரு வேலையில் இருக்கும்போது ஒரு பெண் சம்பந்தப்பட்ட தேசத் துரோக வழக்கினை கையில் எடுக்கிறார். விசாரணையில் அந்தப் பெண் மீது எந்தத் தவறும் இல்லை. சுகாதாரமான நீருக்காக அந்தப் பெண் தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு என்று அனைவரையும் தனி மனுஷியாக எதிர்த்து வருவதை அறிகிறார் கார்த்தி.

இதன் தொடர்ச்சியாய் நாட்டில் இருக்கும் நீர் வளத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அதன் மூலம் கோடி, கோடியாய் கொள்ளையடிக்க ஒரு கும்பல் ஆளாய் பறப்பதை அறிகிறார் கார்த்தி. இதன் பின்னணியில் மத்திய உளவுத்துறையும், பக்கத்து நாடுகளும் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார் கார்த்தி.

கூடவே இந்தப் பிரச்சினையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு உளவாளி இருப்பதையும் அறிகிறார் கார்த்தி. அந்த உளவாளி யார் என்பதை அவர் அறிய முற்படும்போது அதிலிருந்து மீளவே முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் கார்த்தி.

அந்தத் தண்ணீர் மாஃபியா கும்பலுடன் சம்பந்தப்பட்டிருக்கும் வில்லனுக்கும், அந்த உளவாளிக்கும் என்ன சம்பந்தம் என்பது உட்பல பல கிளைக் கதைகளுடன் இந்தப் படம் நகர்ந்து இறுதியில் அனைத்திற்கும் விளக்கம் சொல்கிறது திரைக்கதை.

‘சர்தார்’ என்னும் சந்திரபோஸ், காவல் ஆய்வாளர் விஜய பிரகாஷ் என்று இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. இன்ஸ்பெக்டரைவிடவும் சர்தார்’தான் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். அவருடைய தேசப் பற்றுக்கு நாம் ஒரு சல்யூட் அடிக்க வேண்டிய கட்டாயமும் படத்தைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.

அந்த முதிர்ச்சியான வயதுக்குரிய கை நடுக்கம், சற்றே தளர்ந்த உடல் மொழி, ஆனாலும் அதே வேகத்துடன் சண்டையிடும் சாகசம்.. ஒரு உளவாளிக்கு உள்ள சமயோசிதப் புத்தி.. என்று பலதையும் தன் நடிப்பில் காண்பித்திருக்கிறார் ‘சர்தார்’ கார்த்தி.

கூத்து நடனத்திலும், ரஜிஷா விஜயனுடனான காதல் காட்சிகளும் இன்ஸ்பெக்டர் கார்த்தி அல்லாமல் வேறொரு இளைஞரை கண் முன்னே காண்பித்திருக்கிறார் கார்த்தி.

வில்லனாக பாலிவுட்டின் சங்கி பாண்டேவை இறக்குமதி செய்திருக்கிறார்கள். அந்த முகத் தோற்றமும், உடல் மொழியும் வில்லனாகக் காண்பித்தாலும் டப்பிங் குரலும், ஒத்துப் போகாத தன்மையும் கொஞ்சம் கண்ணிலும், காதிலும் படுகிறது.

ஒரு நாயகியான ராஷி கண்ணா திரைக்கதையை நகர்த்துவதற்காகவே வந்திருக்கிறார். ரஜிஷா விஜயன் பிளாஷ்பேக் காட்சிகளில் நம் மனதைத் தொட்டுவிடுகிறார். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தலையைக் கொடுத்திருக்கும் லைலாவின் கதாப்பாத்திரம்தான் கதையின் மையப் புள்ளி. பெரிதாக நடிப்பென்று இல்லையென்றாலும் கண்களைக் கவர்ந்திருக்கிறார்.

லைலாவின் மகனாக வரும் சிறுவன் ரித்விக்கின் காட்சிகளையும், இன்ஸ்பெக்டர் கார்த்தியின் பிளாஷ்பேக் காட்சிகளையும் இணைத்துக் காட்டும் அந்த சிறிய காட்சி சிறப்பு. ஆனால் சிறுவன் ரித்விக் பேசும் பல வசனங்கள் அவனது வயதுக்கு மீறியவை என்பதையும் நாம் சொல்லித்தான் தீர வேண்டும்.

குடும்பத்துக்கே தெரியாமல் ராணுவ உளவாளியாகப் பணியாற்றுபவன், சொந்த அப்பாவாலேயே வீட்டில் ஒதுக்கப்படுவது போன்ற காட்சியமைப்புகள், நாம் பெரிதும் அறிந்திராத இது போன்ற உளவுத் தொழில் செய்பவர்களின் வாழ்க்கைப் பிரச்னையை எடுத்துக் காட்டுகின்றன.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளில் அதிரடியாகக் கோணங்களை மாற்றி, மாற்றி காட்டி அசத்துகிறது. ‘சர்தார்’ கார்த்தியின் சண்டைக் காட்சிகளை அதிகம் ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறார் சண்டை இயக்குநர்.  குறிப்பாக பங்களாதேஷ் ஜெயில் சண்டை மற்றும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் மிக சிறப்பு.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘ஏறு மயிலேறி’ பாடலும், நடனமும் நம்மை ஈர்க்கவே செய்திருக்கிறது. பின்னணி இசையிலும் அடித்து ஆடியிருக்கிறார்.

உளவாளிகளின் நிலையில்லாத வாழ்க்கை ஒரு புறம், நாட்டில் ஓடும் தண்ணீர் மொத்ததையும் கையகப்படுத்த நினைக்கும் உலகளாவிய மாபியா கும்பல் இன்னொரு புறம் என்று இரண்டு விஷயங்களைப் பற்றி இந்தப் படத்தில் பேசியிருக்கிறார் இயக்குநர் மித்ரன். நாட்டில் நடந்துவரும் தண்ணீர் அரசியல் குறித்து ஆராய்ச்சி செய்து கண்டறியாமல் வெறுமனே செய்தித் தாள்களை மட்டுமே வைத்து காட்சிகளையும், வசனங்களையும் எழுதியிருக்கிறார் இயக்குநர்.

பிரச்சினை தண்ணீர் வளத்தை சுரண்டுவது பற்றியதா.. அல்லது நல்ல குடிதண்ணீர் வேண்டும் என்பதா என்ற குழப்பத்தையும் உண்டு பண்ணியிருக்கிறார் இயக்குநர். இரண்டுக்குமே சம அளவில் காட்சிகளை வைத்திருப்பதால் நாம் இரண்டையுமே கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

குடும்பம், மனைவி, குழந்தையையெல்லாம் விட்டுவிட்டு நாட்டுக்காக தேசப் பற்றோடு தன் பெயரைக்கூட வெளியிடாமல் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பது கொடுமையான திரைக்கதை. இந்த ‘சர்தார்’ இந்த அளவுக்கான தேசபிமானி என்றால் நாம் ஆச்சரியப்படத்தான் வேண்டும்.

மற்றபடி விறுவிறுப்பான திரைக்கதையும், கார்த்தியின் அலுப்பில்லாத நடிப்பும் இந்த ‘சர்தாரை’ பார்த்தே தீர வேண்டிய பட லிஸ்ட்டில் சேர்த்துள்ளன.

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News