Friday, April 12, 2024

ராக்கி – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு கதை. அதே நேரம் விஷுவலில் உலகத் தரத்திற்கு சவால் விடும் மேக்கிங்கில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ராக்கி என்ற டைட்டிலிலும் படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரோமோஷன் வீடியோக்கள் எல்லாமே இதுவொரு பக்கா கேங்க்ஸ்டர் படம் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியது. மேலும் படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதும் உண்மை. 

நட்சத்திரக் காதலர்களான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்கள் என்பது  கூடுதல் எதிர்பார்ப்பிற்கு காரணம். ஏன் என்றால் தற்போது ‘கூழாங்கல்’ என்ற தமிழ்ப் படம் ஆஸ்கர்வரை சென்றது நினைவிருக்கலாம். அந்தப் படத்தின் தயாரிப்பும் நயன் விக்கி கூட்டணியே! அதனால் ராக்கியும் ராயலாக இருக்கும் என்று நம்பிப் போனால்..?

படத்தின் நாயகன் ராக்கி ஒரு கொலை செய்ததினால் 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியில் வருகிறான். அவன் கொலை செய்தது இன்னொரு தாதாவான பாரதிராஜாவின் மகனை. அதனால் அவனை பலி வாங்க பாரதிராஜா துடிக்கிறார்.

உறவென்று சொல்லிக் கொள்ள ராக்கிக்கு தங்கை மட்டுமே மிச்சம் இருக்கிறாள். அவளை பார்த்து ராக்கி மகிழும் தருணத்தில் பாரதிராஜா டீம் ராக்கி கண் முன்னாடியே அவனது கர்ப்பிணியான தங்கையைத் துள்ளத் துடிக்க கொள்கிறார்கள். ரத்தம் தெறிக்க நரம்பு புடைக்க வெறியாகும் ராக்கி. பாரதிராஜாவைப் பழி தீர்க்கப் புறப்படுகிறான். தீர்த்தான என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

சில ஹாலிவுட் கொல வெறி படங்களைப் பார்த்தால் திரையெங்கும் ரத்தம் தெறிக்கும். அப்படியொரு ரத்த வாடை இந்த ராக்கி’ படத்திலும். ஹீரோவில் துவங்கி குட்டி குட்டி ஆர்ட்டிஸ்ட்வரைக்கும் ரத்தம் பார்க்கிறார்கள் படத்தில். அதனால், இப்படம் குழந்தைகளுக்கான படமல்ல என்பது முதல் அறிவுறுத்தல்.

ராக்கியாக வசந்த் ரவி நடித்துள்ளார். நடிப்பைப் பொறுத்தவரை இப்படம் அவருக்கு நல்ல அடையாளம்தான். சோகம் தாங்கிய கண்களும், வன்மம் நிரம்பி முகமுமாக மிரட்டி இருக்கிறார். “உங்கம்மா உன்னை ஏன் பெத்தா தெரியுமா?” என்று அவர் வில்லன் டீமை கேட்கும் போதெல்லான் அட பின்றாரே எனச் சொல்லத் தோன்றுகிறது. வெல்டன் வசந்த் ரவி.

இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சமீபகாலத்தில் நடித்த கேரக்டரில் இது உருப்படியான கேரக்டர். சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில்கூட அப்படியொரு வில்லனத்தனம். அசத்தி இருக்கிறார். குறிப்பாக ஹீரோவிடம் அவர் கட்டப் பஞ்சாயத்து செய்யும் காட்சியில் நடிப்பின் உச்சம்.

ஏனைய கேரக்டர்களில் பெரிதாக ரிஜிஸ்டர் ஆகும் அளவில் யாரும் இல்லை என்றாலும் யாரும் நடிப்பதில் குறை வைக்கவில்லை.

படத்தின் உண்மையான ஹீரோ கேமராமேன்தான். ஒவ்வொரு ப்ரேமிங்கும் அவ்வளவு அழகாக இருக்கிறது. DI-யில் கேமராமேன் உட்கார்ந்து DI டீமை பெண்டு நிமித்தி வேலை வாங்கியிருப்பார் போல. அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது படத்தின் கலரிங். இது பக்கா மர்டர் மிஸ்டரி படம் என்பதை ஒவ்வொரு ஷாட்டும் உணர்த்துவது ரசனை. ப்ளாக்&வொயிட் கலர் கூடுதல் பலம். இசை அமைப்பாளரும் படத்திற்கு நல்ல பூஸ்டர். பின்னணி இசையில் ஒரு திரில்லர் படத்திற்கான டெம்போ இருக்கிறது

படத்தில் பேசப்பட்டிருக்கும் விசயங்கள்தான் சாமானிய ரசிகனுக்கு புரியுமா என்ற கேள்வி எழுகிறது. ஈழத்தில் இருந்து வந்திருக்கும் ஹீரோ இப்படி அறமற்ற வழியில் நடக்கிறார். கொலை செய்கிறார். சின்னக் குழந்தை முன்பாககூட ரத்தக் காட்டேரி போல் நடந்து கொள்கிறார். பின் ஹீரோவை எப்படி ஆடியன்ஸ் பாலோ பண்ண முடியும்..?

மேலும் இவ்வளவு ரத்தக் களறியாக ஒரு படத்தைத் தந்து அதன் மூலம் இந்த சமூகத்திற்கு இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

அன்பை போதிக்கும் படங்கள் மட்டுமே தேவை என்று சொல்லவில்லை. கொலையும் வன்முறையும் நம்மை சீரழிக்கும் என்பதை அழுத்தமாகவாவது சொல்லிருக்க வேண்டும் அல்லவா? ராக்கி அதைச் சரியாக செய்யவில்லை.

அதே சமயம் இப்படியொரு வித்தியாசமான கதை சொல்லலும் அட்டகாசமான மேக்கிங்கும் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது என்பதிலும் மாற்றமில்லை.

RATING : 3 / 5

- Advertisement -

Read more

Local News