Friday, April 12, 2024

தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘ஜெகமே தந்திரம்’ படத்தின் வெளியீடு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஜெகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிஸ் ஓடிடி தளத்தில் வெளியாவது அவரது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இத்திரைப்படத்தை YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

மேலும், சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன், செளந்தர்ராஜா, தீபக் பரமேஷ், தேவன், வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், ராமச்சந்திரன் துரைராஜ், ராஜு பாய், சரத் ரவி, ஜெர்மைன், தன்வீர் கான், நேசந்த் பெர்னாண்டோ, முத்துக்குமார், அஷ்வந்த் அசோக்குமார், ரூபன் நாதன், ராபர்ட் மெக்ரா, கைரன் மெக்கிவர்ன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் – ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ் சஷிகாந்த் & ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் சக்கரவர்த்தி இராமசந்திரா, ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன்,
கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – எம் செரிஃப், பாபா பாஸ்கர், ஒலி வடிவமைப்பு – விஷ்ணு கோவிந்த், ஸ்ரீசங்கர், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – முத்துராமலிங்கம், ஆடை வடிவமைப்பு – D.பிரவீன் ராஜா, ஒப்பனை: ஏ.சபரி கிரீசன், விளம்பர வடிவமைப்பு – டியூனி ஜான் (24 AM), மக்கள் தொடர்பு – நிகில் முருகன், எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ்.

இந்த ‘ஜெகமே தந்திரம்’ படம் ‘சுருளி’ எனும் கேங்க்ஸ்டர் தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும்.. தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்பதை சொல்லும் படமாகும்.

2018 பிப்ரவரி மாதம்தான் இத்திரைப்படத்தின் முதல் கட்ட அறிவிப்பு வெளியானது. ஆனால், அப்போது தனுஷ் பல்வேறு படங்களின் படப்பிடிப்பில் மாட்டிக் கொண்டதால் இத்திரைப்படம் ஒரு வருட காலத்திற்கும் மேலாக தள்ளிப் போய் 2019 ஆகஸ்ட் மாதம்தான் படப்பிடிப்புக்கே தயாரானது.

2019 செப்டம்பரில் இங்கிலாந்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற்றது. 2020-ம் ஆண்டின் துவக்கத்தில் இந்தப் படம் முடிவடைந்தாலும் வெளியாவதற்குள் கொரோனா பாதிப்பு வந்துவிட பெட்டிக்குள் முடங்கிப் போனது.

கடைசியாக இந்தப் படத்தை சென்ற மாதம் வெளியிடுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நடிகர் தனுஷூம் தயாரிப்பாளர்களிடத்தில் இந்தப் படத்தைத் தியேட்டரில் வெளியிடும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கேட்ட என்.ஓ.சி. சான்றிதழை இந்தப் படத்தின் தயாரிப்பாளரால் தர முடியவில்லை. படத்தைத் தியேட்டருக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதற்கு முன்பாகவே இத்திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தேதி முடிவாகிவிட்டதால் தயாரிப்பாளரால் எதுவும் செய்ய முடியவில்லை.

முடிந்தவரையிலும் போராடிப் பார்த்த படத்தின் நாயகன் தனுஷ் “என்னமோ செஞ்சுக்குங்க…” என்று சொல்லிவிட்டு குடும்பத்தினருடன் அமெரிக்கா பறந்துவிட்டார்.

இப்போது இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

சிம்புவின் ரசிகர்கள் ‘ஈஸ்வரனை’ தியேட்டரில் கொண்டாடி தீர்த்துவிட்டதால், அதேபோல் நாமும் தனுஷின் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த தனுஷின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

வழக்கம்போல இந்த ஏமாற்றத்தை சிம்பு ரசிகர்கள் கிண்டல் செய்து டிவிட்டரில் எழுத.. பதிலுக்கு தனுஷ் ரசிகர்களும் சிம்புவைக் கிண்டல் செய்ய.. இன்றைக்கு டிவிட்டரில் இதுதான் டிரெண்டாகியிருக்கிறது.

இந்த நேரத்தில் இன்றைக்கு ‘ஜெகமே தந்திரம்’ படத்தின் டீஸரும் வெளியாகியிருக்கிறது. இந்த டீஸரைக்கூட நடிகர் தனுஷ் டிவிட்டர் மற்றும் முகநூலில் ஷேர் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியாவதால் ஒரே நேரத்தில் பல மொழிகளில் 190 நாடுகளில் 204 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடையவுள்ளது.

- Advertisement -

Read more

Local News