ரன்பீர் கபூரின் ‘அனிமல்’:  ராஷ்மிகாவின் லுக் வெளியீடு

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் கைகோத்துள்ளார். இப்படத்துக்கு ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ப்ரீ டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் இறுதிகட்ட பணிகள் தாமதமானதால் டிசம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அவரது கதாபாத்திர பெயர் ‘கீதாஞ்சலி’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’அனிமல்’ படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனில் கபூரின் கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டிருந்தது.