Friday, April 12, 2024

ரஜினிக்கு சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஒன்றாகக் கொடுத்த ‘தர்மதுரை’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1991-ம் வருடம் பொங்கல் தினத்தின்று வெளியான திரைப்படங்களில் ஒன்று ‘தர்மதுரை’. ரஜினி, கவுதமி, நிழல்கள் ரவி, வைஷ்ணவி, சரண்ராஜ், விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இயக்குநர் ராஜசேகர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

ஆனால் உண்மையில் இந்தப் படத்தின் துவக்கத்தின்போது இது வேறொரு கதையுடன் உருவானதாம். இது பற்றி இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ராசி கலாமந்திர் எஸ்.ராமநாதன் கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினி, மஞ்சுளா, ரமேஷ் அரவிந்த், செந்தில் ஆகிய நடிகர்களோடு இத்திரைப்படம் முதலில் துவங்கியுள்ளது. அப்போது படத்தின் பெயர் ‘காலம் மாறிப் போச்சு’.

இந்தப் படத்தின் முதல் 10 நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் திடீரென்று தயாரிப்பாளரை அழைத்த ரஜினி “நாம இப்போ எடுத்துக்கிட்டிருக்கு கதைல என்னால ஒன்றி நடிக்க முடியலை.. 4, 5 நாள்ல கேரக்டராவே மாறிடலாம்ன்னு முயற்சி செஞ்சேன். முடியலை. இப்ப ஷூட்டிங்கை நிறுத்திருங்க.. ஒரு பத்து நாள் கழிச்சு பார்க்கலாம்…” என்றாராம்.

மீண்டும் 5 நாட்கள் கழித்து தயாரிப்பாளரை அழைத்த ரஜினி ஒரு வீடியோ கேஸட்டைக் கொடுத்து, “இந்தப் படத்தைப் பார்த்திட்டு உங்க கருத்தைச்  சொல்லுங்க…” என்றாராம். அந்தப் படம் 1989-ம் ஆண்டு விஷ்ணுவர்த்தனின் நடிப்பில் வெளியான ‘தேவா’ என்ற கன்னடத் திரைப்படம்.

அந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளருக்கு அந்தப் படத்தின் கதைப் பிடித்துப் போக, ரஜினியிடம் வந்து “இந்தக் கதை நல்லாயிருக்கு ஸார்…” என்று சொல்லியிருக்கிறார். “அப்போ இந்த கேஸட்டை இயக்குநர்கிட்ட கொடுத்து பார்க்கச் சொல்லுங்க…” என்றாராம்.

இயக்குநரான ராஜசேகரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, “இந்தக் கதை நல்லாயிருக்கே…” என்று சொல்லியிருக்கிறார். உடனேயே ரஜினி தயாரிப்பாளரிடம், “இதுவரையிலும் எடுத்த 10 நாள் ஷூட்டிங் செலவை நானே ஏத்துக்குறேன். அதை அப்படியே தூக்கிப் போட்டிருங்க. நாம இந்தக் கதையை புதுசா செய்வோம்..” என்றாராம்.

அப்படித்தான் இந்தத் ‘தர்மதுரை’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. மீண்டும் புதிய நட்சத்திரங்களை புக் செய்து படப்பிடிப்பைத் துவக்கியிருக்கிறார்கள்.

ஆனால் 1991 பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டதால் ரஜினி இரவு, பகலாக இந்தப் படத்திற்கு நடித்துக் கொடுத்தாராம். ஒரு சமயம் 72 மணி நேரம் தொடர்ந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம் ரஜினி.

இந்த அளவுக்கு ரஜினி இன்வால்வ்மெண்ட்டை காட்டி உருவாக்கிய இந்த ‘தர்மதுரை’ திரைப்படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோதும் இதே கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் வெற்றி ரஜினிக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் மிகப் பெரிய சோகத்தையும் கொடுத்தது.

ரஜினியின் மிக நெருங்கிய நண்பராக இருந்த இந்தப் படத்தின் இயக்குநரான ராஜசேகர் இந்த ‘தர்மதுரை’ படத்தின் 100-வது நாள் விழா நடைபெற இருந்த அதே தினத்தன்றுதான் திடீரென்று காலமானார்.

இந்த வகையில் ரஜினியாலேயே மறக்க முடியாத ஒரு படமாக ‘தர்மதுரை’ அமைந்துவிட்டது.

- Advertisement -

Read more

Local News