18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் ரஜினி, கமல்!

ரஜினி  நடிக்கும் ஜெயிலர், கமல் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே சமயத்தில் திரைக்கு வருவது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

கடந்த மாதம் பொங்கல் பண்டிகையில் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்குமாரின் ‘துணிவு’ படங்கள் ஒரே நேரத்தில்  திரைக்கு வந்தன.

இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி ரஜினிகாந்தின் சந்திரமுகி கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில்  திரைக்கு வந்தன. இதில் சந்திரமுகி படம் பெரிய வெற்றி பெற்றது.

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீசாகப் போவதாக வெளியாகி உள்ள தகவல் இருவரின் ரசிகர்களையும் உற்சாகமடைய வைத்து உள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பு 70 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷங்கர் இயக்குகிறார். இதில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.