Friday, April 12, 2024

“விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு அணியாக போட்டியிடுவதற்கு சூத்திரதாரியாக இருந்தவர் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இது குறித்து அவர் முழுமையான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்துப் பேசும்போது, “விஷால் எனது நெடுநாளைய நல்ல நண்பர். அடுத்தவர்களுக்கு ஓடிப் போய் உதவி செய்யும் குணமுள்ளவர். அவருடன் பழகும் நண்பர்கள் யார், என்ன சொன்னாலும் நம்பிவிடுவார். பிறகு அவர்களாலேயே சிக்கலில் மாட்டிக் கொள்வார். இப்படித்தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வந்தபோது விஷால் அதில் நிற்பதாகவே இல்லை. அவர் ஒரு அணி அமைத்து அந்த அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதாகத்தான் முதலில் அவருடைய திட்டம் இருந்தது.

இது குறித்து பல முறை அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் வேனில் அமர்ந்து மணிக்கணக்காக நான் பேசியிருக்கிறேன். பின்பு அவரது அலுவலகம், என் அலுவலகம் என்று பல இடங்களிலும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

என்னை பொருளாளர் பதவிக்கு நிற்கச் சொன்னார். நானும் “ஓகே” என்று சொல்லிவிட்டேன். டி.சிவாவை தலைவர் பதவிக்கு முதலிலேயே நிறுத்தலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

திடீரென்று விஷால் தனது நண்பர்கள் பேச்சைக் கேட்டு “தலைவர் பதவியில் நான் நிற்கிறேன்…” என்றார். இதில் எனக்கு உடன்பாடில்லை. “இரட்டைக் குதிரையில் சவாரி செய்வது சரியல்ல…” என்று விஷாலிடம் சொன்னேன். விஷால் கேட்கவில்லை. அப்போ.. நானும் போட்டியிடவில்லை என்று சொல்லி விலகிக் கொண்டேன்.

பிறகு சுயேச்சையாக தனித்து நிற்கலாம் என்று கூட நினைத்து, பின்பு அதுவும் வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கிக் கொண்டேன். விஷால் அந்தத் தேர்தலில் நின்றிருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து..” என்றார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.

- Advertisement -

Read more

Local News