நேற்றுதான் பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டருடன் வெளியானது. இன்னும் 24 மணி நேரம்கூட ஆகவில்லை. அதற்குள்ளாக இன்று காலை அவர் நடிக்கும் இன்னொரு புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தமிழ்த் திரையுலகத்தில் ஆரம்பக் காலத்தில் நடன இயக்குநராக இருந்து வந்த பிரபுதேவா பின்பு திடீர் ஹீரோவானார். சில வருடங்கள் கழித்து நடிப்பையும் தாண்டி இயக்குநரானார் பிரபுதேவா. அதில் பல வெற்றிகள் கிடைத்தன. பிறகு தொடர் தோல்விகளும் கிடைத்தன. உடனே அங்கிருந்து விலகி மீண்டும் நடிப்புக்கு வந்தார். அவரது நடிப்பில் தற்போது ‘பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில்தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இயக்குநரான சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் அந்தப் படத்திற்கு பூஜை போட்டு, படப்பிடிப்பையும் தொடங்கி நேற்றுதான் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு ‘பொய்க்கால் குதிரை’ என பெயர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைக்கு அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறார் பிரபுதேவா. இன்று தொடங்கிய பிரபுதேவாவின் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறவர் இயக்குநர் கல்யாண். அவர் வெறும் கல்யாண் அல்ல; ‘அதிர்ஷ்டக்கார கல்யாண்’ என்று தமிழ்த் திரையுலகத்தில் சொல்கிறார்கள்.
சினிமாவில் சில இயக்குநர்களுக்கு ஹிட் கொடுத்தாலுமே அடுத்தப் பட வாய்ப்பு அமையாது. சிலர் தோல்விகளை மட்டுமே தருவார்கள். ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தின் அட்வான்ஸ் அவர் கையில் இருக்கும். இயக்குநர் கல்யாண் இது போன்ற அதிர்ஷ்டக்காரர்தான்.
அவர் இயக்கிய ‘கத சொல்லப் போறோம்’, ‘குலேபகாவலி’, ‘காத்தாடி’, ‘ஜாக்பாட்’ என்ற நான்கு படங்களுமே வெற்றி பெறவில்லை. இதில் ‘குலேபகாவலி’யில் பிரபுதேவாதான் ஹீரோ. இப்போது இந்தப் படத்தில் மறுபடியும் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் பிரபுதேவா, நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கல்யாண், தயாரிப்பாளர் அபிஷேக் பிள்ளை மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.