ஆதித்த கரிகாலன் கொலைக்குக் காரணம் குந்தவை – மதுராந்தகர்?: டி.வி.சோமு

0
570 views
Advertisement

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், மணிரத்னம் இயக்கத்தில் வரும் 30ம் தேதி திரைப்படமாக வருகிறது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் எ ராஜராஜ சோழன் வரலாற்றை பலரும் அலசி ஆராயந்து வருகிறார்கள்.

இதில் முக்கியமானது, பொ.செ. என்கிற ராஜராஜனின் அண்ணன் ஆதித்ய கரிகாலனை கொன்றது யார் என்கிற ஆராய்ச்சி.

இவனை, பாண்டிய நாட்டு ஆபத்துவிதிகளான ரவிதாசன் உள்ளிட்டோர் நயவஞ்சகமாக கொன்றதாக கல்கி எழுதி இருக்கிறார்.

இது தவறு என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

அதற்கு முன் சுருக் ஆக ஒரு விசயத்தை பார்த்து விடுவோம்.

மதுராந்தகன்தான் சோழ நாட்டின் அரசனாக வேண்டியவன். சூழல் காரணமாக சுந்தர சோழன் அரசனாகி விட்டான். அதோடு, தனது மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டமும் சூட்டிவிட்டான்.

இந்த நிலையில்தான் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான்.

கல்கி தனது பொன்னியின் செல்வன் நாவலில், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள், ஆதித்த கரிகாலனை கொன்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பார்.

ஆனால் உண்மை அதுவல்ல.

ஆதித்தன் குறித்த கல்வெட்டு, அனந்தீசுவரம் சிவாலயத்தில் இன்றும் இருக்கிறது. இந்த அனந்தீசுவரம் சிவாலயம், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள உடையார்குடியில் உள்ளது.

இக்கோயிலின் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் குறிப்பிட்ட கல்வெட்டு இருக்கிறது.

அதில், “ ஆதித்த கரிகாலனை துரோகிகள் கொன்றுவிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கறது.

“பாண்டியர்கள் எதிரிகள். அவர்கள் கொன்றிருந்தால் எதிரிகள் என குறிப்பிட்டு இருப்பார்கள். கொலை செய்தவர்கல் துரோகிகள் என்று குறிப்பிட்டதன் மூலம், இதில் ஈடுபட்டவர்கள் சோழர்களே என்பது உறுதியாகிறது” என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.

அதுமட்டுமல்ல, சுந்தர சோழருக்குப் பிறகு மன்னராக வந்த மதுராந்தகர் ஒரு காரியம் செய்தார். அதாவது, ஆதித்த கரிகாலனை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ரவிதாசனுக்கு பஞ்சவர்மன் பிரும்மித்திராயன் என்ற பட்டத்துடன் பெரும் பதவி அளித்தார்.

இதை வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் தம் “சோழர் வரலாறு” (The Cholas) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதை கல்கியும் அறிந்திருக்கிறார்.


அதற்காகத்தான், தனது நாவலில் மதுராந்தருக்கு இரட்டை வேடம் கொடுத்திருக்கிறார். அதாவது நல்ல மதுராந்தகன்.. கெட்ட மதுராந்தகன்.. இப்படி!

இன்னொரு புறம், ராஜராஜனின் தமக்கையும் ஆதித்த கரிகாலனின் தங்கையுமான குந்தவையை நாம் அறிவோம். இவளது கணவன் வந்தியத்தேவன். ஆதித்த கரிகாலனை கொன்றதாக இவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

ஆகவே, குந்தவைக்கும் ராஜராஜனுக்கும் இக்கொலையில் தொடர்பிருக்குமா என்கிற ஐயமும் எழுகிறது.

ராஜராஜன் ஆட்சிக்கு வநதபிறகு வந்தியத்தேவன் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.

அதோடு ஆதித்தன் கொலையில் ஈடுபட்ட ரவிதாசன் உள்ளிட்டோரை ( சகோதரர்கள்) நாட்டை விட்டு வெளியேற்றுகிறான். பட்டத்து இளவரசனை கொன்றவர்களுக்கு இதுதானா தண்டனை என்கிற கேள்வியும் எழுகிறது.

அதே நேரம், ரவிதாசன் அந்தணன் என்பதால் கடுமையான தண்டனை வழங்கப்பட வில்லை என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே ராஜராஜனின் இன்னொரு முகத்தையும் அறிவது அவசியம்.

உத்தமச்சோழனுக்குப் பிறகு அவனது மகன், அரசானக விரும்பவில்லை. சோழ நாட்டில் கோவில்களை நிர்வகித்து வந்தான். அவன்மீது ஊழல் குற்றம் சுமத்தி மரண தண்டனை அளித்தான் ராஜராஜன்.

தமையன் ஆதித்தனை கொன்றவர்களுக்கு நாடு கடத்தல் தண்டனை மட்டும்தான். ஆனால் ஊழல் புகாருக்கு ஆளானவருக்கு மரண தண்டனை.

இதற்குக் காரணம், தனது மகனு ராஜேந்திரனுக்கு உத்தம சோழனின் மகன் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காத்தான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இன்னொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டும்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில், பெரிய – சிறிய என இரண்டு பழுவேட்டரையர்கள் இருப்பார்கள். ஆனால் வரலாற்றில் ஒரே பழுவேட்டரையர்தான்.

மதுராந்தகனுக்கு டபுள் ஆக்ட் கொடுத்தது போல, இவர்களுக்கும் டபுள் ஆக்ட் கொடுத்துவிட்டார் கல்கி.

காரணம் தலைகீழ்.

அதாவது பழுவேட்டரையர் வம்சமே சோழர்களுக்கு ஆதரவாக இருந்தது. உயிரையும் தந்தது. தவிர நந்தினி என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி, அவளை மோகம் கொண்டு பெரிய பழுவேட்டரையர் அலைவதாக காண்பித்துவிட்டார் கல்கி.

அதாவது, ஆதித்தனின் கொலையில் பழுவேட்டரையருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற யூகத்தை ஏற்படுத்த விரும்பினார் கல்கி. ஆகவே வரலாற்றில் இருக்கும் ஒரு பழுவேட்டரையர் இரண்டாகி விட்டார்கள் பொன்னியின் செல்வன் நாவலில்.

அதாவது ஆதித்த கரிகாலன் கொலையில் குற்றமே சாட்ட முடியாத பழுவேட்டரையரை சந்தேகத்துக்கு உள்ளாக்கி விட்டார்.

ஆதித்த கரிகாலன் கொலையில் ஈடுபட்டிருக்க கூடும் என ( நியாயமான) சந்தேகத்துக்கு உரிய மதுராந்தகரை நல்லவர் ஆக்கிவிட்டார்.

வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் நாவலில் சுவாரஸ்யத்துக்காக சிலவற்றை சேர்க்கலாம். ஆனால் வரலாற்றையே மாற்றிவிட்டார்.


பொன்னியன் செல்வன் பிரம்மாண்டமான படம். ரசிக்கலாம். இதை வரலாறு என எண்ணிவிட வேண்டாம்.