பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ படம் ஓடிடியில் வெளியாகிறது

பிரபுதேவா நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழில் விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக நிறைய படங்களில் நாயகனாக நடித்து வருபவர் பிரபுதேவா. இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார்.

பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த பொன் மாணிக்கவேல் படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகின்றன. பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கு இந்தப் படத்தின் மீதிருக்கும் பைனான்ஸ் சிக்கல்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரும் இன்று வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 19-ம் தேதி இந்தப் படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் பிரபுதேவான நடிப்பில் ஏற்கெனவே ‘தேள்’, ‘யங் மங் சங்’, ‘ஊமை விழிகள்’, ‘பஹீரா’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.