Friday, April 12, 2024

பயணிகள் கவனிக்கவும் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2019-ம் ஆண்டு மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தைதான் தமிழில் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை ஆஹா ஓடிடி’ தளத்திற்காக ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இயக்கியிருக்கிறார்.

சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்வு குறித்தும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

காது கேளாமல், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான விதார்த் ஒரு கல்லூரியில் நூலகராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியான லட்சுமி சந்திரமெளலியும் இவரைப் போலவே மாற்றுத் திறனாளிதான். இவரும் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு பையன், பெண் என்று இரண்டு குழந்தைகள். பையன் பள்ளியில் படிக்கிறான். கூடவே ஒரு கால்பந்து அணியில் விளையாடி வருகிறான். கொஞ்சம் முன் கோபி. பெண்ணும் பள்ளியில் படிக்கிறாள்.

இன்னொரு பக்கம், கருணாகரன் துபாயில் இருந்து விடுமுறையில் சொந்த ஊர் திரும்புகிறார். தான் பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் மனதுக்குள்ளேயே காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இந்தத் திருமண நிச்சயத்தார்த்தமும் முடிந்து, கல்யாணத்திற்குத் தேதியும் குறித்துவிட்டார்கள்.

இந்த நேரத்தில் விதார்த்தின் மகளுக்கு திடீரென்று நிமோனியா காய்ச்சல் வருகிறது. மருத்துவமனையில் 2 நாட்கள் மகள் அருகில் இருந்து கவனித்துக் கொண்ட விதார்த், மெட்ரோ ரயிலில் வீடு திரும்புகிறார். அப்போது களைப்பின் காரணமாக ரயிலிலேயே தூங்கிவிடுகிறார்.

இதே ரயிலில் அந்த நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்த கருணாகரன், இதைப் பார்த்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து தான் இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் போடுகிறார். அந்த வாட்ஸ் அப் குரூப் அட்மின், அந்தப் புகைப்படத்தை தனது பேஸ்புக் மற்றும் இண்ஸ்டாகிராம், மற்றைய சமூக வலைத்தளங்களில் போடுகிறார்.

இது உடனடியாக வைரலாகிறது. விதார்த் குடித்துவிட்டு மெட்ரோ ரயிலில் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் படுத்திருந்ததாகச் சொல்லி அவரைக் கடுமையாகத் திட்டியும், விமர்சித்தும், கண்டித்தும் கமெண்ட்டுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் இடுகிறார்கள்.

இதனால் சக மாணவர்களின் கேலிக்கு ஆளாகிறான் விதார்த்தின் மகன். 2000 ரூபாய்க்கு ஷூ வாங்கி வந்த அப்பாவிடம் ஆத்திரப்படுகிறான் மகன். விதார்த்திற்கு கொஞ்சம் தாமதமாகத்தான் உண்மை நிலை தெரிகிறது.

விதார்த் வேலை செய்யும் கல்லூரியிலும் அவரை சில நாட்கள் கல்லூரிக்கு வர வேண்டாம் என்று சொல்லியனுப்புகிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் அவரை நோக்கி கேலிகளும், கிண்டல்களும் பறந்து வருகின்றன. இந்தப் புகைப்படம் கிளப்பிய செய்தியினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் விதார்த்.

இந்த நேரத்தில் எதைப் பற்றியும் கவலையில்லாமல் தன் கல்யாண வேலையில் தீவிரமாக இருக்கிறார் கருணாகரன். விதார்த்தின் நிலையறிந்த அவர் குடியிருக்கும் வீட்டு ஓனரின் மகள் தான் வேலை செய்யும் செய்தி நிறுவனம் வாயிலாக விதார்த்தின் உண்மை நிலையை உலகத்திற்குத் தெரியப்படுத்துகிறார்.

இப்போது விதார்த்தின் கதை தலைகீழாக மாறுகிறது. பலரும் விதார்த்தை காவல்துறையில் புகார் கொடுக்கச் சொல்கிறார்கள். இதன்படி விதார்த்தும் புகார் கொடுக்கிறார்.

கருணாகரனுக்கு இது தெரிய வர அதிர்ச்சியாகிறார். போலீஸார் தன்னைக் கைது செய்துவிடுவார்களோ.. துபாய்க்கு தான் திரும்பிப் போக முடியாதோ என்று பயப்படுகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான கதை.

கண்டிப்பாக விதார்த் இந்தப் படத்திற்காக பல விருதுகளை பெறுவார். காது கேளாத, வாய் பேச முடியாத இந்தக் கேரக்டருக்காக ஒரு மாதமாக பயிற்சியெடுத்து நடித்திருக்கிறார். அபாரம்..!

ஒரு சதவிகிதம்கூட குற்றம் குறை சொல்ல முடியாதபடிக்கு தனது சைகை மொழி நடிப்பைக் காண்பித்திருக்கிறார் விதார்த். அந்த குறைபாடு உள்ளவர்களின் இயல்புத் தன்மையின்படியே மற்றைய குணச்சித்திரங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார் விதார்த்.

வீட்டில் அன்பான அப்பா.. பாசமுள்ள குடும்பத் தலைவர்.. சிறப்பான ஊழியர்.. சிநேகத்துடன் பழகும் நண்பர் என்று தனது அனைத்துவித நடிப்புகளையும் ஒருங்கே காட்டியிருக்கிறார் விதார்த். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.

கிளைமாக்ஸ் காட்சியில் மன்னிப்பதுதான் சிறந்த தண்டனை என்பதை அவர் சைகையில் வெளிப்படு்த்தும் காட்சியில் நம் மனதும் லேசாகிறது. தெய்வங்கள் எங்கேயும் இல்லை. இங்கேதான் மனித ரூபத்தில் வாழ்கிறது என்பதைச் சொல்லாமல் தனது சைகை நடிப்பிலேயே காட்டியிருக்கிறார் விதார்த்.

கருணாகரன் தன்னுடைய  மிகச் சிறந்த நடிப்பை இதில் காண்பித்திருக்கிறார். எதையும் அலசி, ஆராயாமல் எடு்த்தேன், கவிழ்த்தேன் என்று முடிவெடுத்து புகைப்படத்தை போஸ்ட் செய்துவிட்டு பின்பு இவர் படும் அல்லல்தான் படத்தின் உயிர் நாடி.

படம் பார்க்க வந்தவர்கள் அனைவரையும் ஒரு நிமிடம் இதை போஸ்ட் செய்யலாமா என்று யோசிக்கும் அளவுக்கு தனது பயந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார் கருணாகரன். இடைவேளைக்குப் பின்னான அவரது காட்சிகள் அனைத்திலும் பிரேம் பை பிரேம் கருணாகரன் காட்டும் பயம்தான் படத்தின் பலமே..!

லட்சுமி பிரியாவும் இதே மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் தனது நடிப்பையும் செவ்வனே செய்திருக்கிறார். எந்தக் கோலத்தில் இருந்தாலும் தானும் சீரியலில் மூழ்கும் சாதாரண பெண் என்பதைக் காட்டும்விதத்தில் இருக்கும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சும் ஒரு சுவாரஸ்யம்தான்.

இவர்களின் பையனாக நடித்தவர் சிறப்பாக நடித்திருக்கிறார். நிச்சயமாக நல்லதொரு எதிர்காலம் அந்தப் பையனுக்குக் காத்திருக்கிறது.

படத்தில் நடித்திருக்கும் மற்றையவர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பைத்தான் காண்பித்திருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டரான பிரேமின் கேரக்டர் ஸ்கெட்ச் வித்தியாசமானதுதான். ஆனால் லாஜிக் இல்லாதது. ‘கவிதாலயா’ கிருஷ்ணன் விதார்த்தின் பையனுக்கு புத்திமதி சொல்லி விதார்த்துடன் சேர்த்து வைக்கும் காட்சி மிக யதார்த்தம்..!

பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு இது மீடியம் பட்ஜெட் படம் என்பதைக் காட்டுகிறது. குறையில்லாத டோனில் கலர் செய்திருக்கிறார்கள். 2 பாடல்கள் கேட்கும் அளவுக்கு இருக்கிறது. பின்னணி இசையை கொஞ்சம் குறைவாக்கி காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

மலையாளப் படத்தின் ரீமேக் என்பதால் தமிழுக்கேற்றாற்போல் வசனங்களை மட்டுமே மாற்றியமைத்திருக்கிறார்கள். திரைக்கதையின் வசீகரமே இந்தப் படத்தின் வெற்றியைச் சொல்கிறது.

பஞ்ச் வசனம் பேசி, பறந்து பறந்து அடித்து.. வீராவேசமாக கொலை, கொலையாய் கத்தி… படம் பார்க்க வந்தவர்களை பயமுறுத்தி, தூங்குபவர்களையும் எழுப்பிவிட்டு, தியேட்டருக்கு வந்த அனைவரின் நிம்மதியையும் கெடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அடுத்த முதலமைச்சர் கனவில் இருக்கும் அனைத்து ஹீரோக்களும் அவசியம் இ்ந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

ஹீரோ என்கிற அடையாளப் பெயரையும் தாண்டி ஒரு நடிகன் கதாபாத்திரத்திற்கேற்ப எப்படிப்பட்ட நடிப்பைக் காண்பிக்க வேண்டும் என்பதையாவது இந்தப் படத்தின் மூலமாக தெரிந்து கொள்ளட்டும்.

இந்தப் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை தமிழக சினிமா ரசிகர்கள் அனைவருமே பார்த்தாக வேண்டும்..!

Aha OTT தளத்தில் வெளியாகியுள்ளது..!

மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 4 / 5

- Advertisement -

Read more

Local News