ஆந்திராவின் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தமிழ்நாட்டில் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் சுவாமிமலைக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்த பிறகு, திருச்சியில் இருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டார். கோவிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று அர்ச்சனை செய்தார்.பின், நிருபர்களிடம் பேசிய பவன் கல்யாண், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அறுபடை வீடுகளுக்கும் சென்று முருகப்பெருமானை தரிசிக்க விரும்பினேன். அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. சுவாமிமலை, திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டேன். இன்னும் நான்கு கோவில்களுக்குச் சென்று வழிபட உள்ளேன்.


தமிழ்நாட்டிற்கும், தேசத்திற்கும் நல்லது நிகழ வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறேன். அரசியலில் சேர்ந்த பிறகு கோவில்களுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. முருகப்பெருமானை தரிசிக்க கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவருக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டு அரசியலுக்கு யார் வந்தாலும் சரி, மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது ஆவல் என தெரிவித்தார்.பவர் ஸ்டார் பவன் கல்யாண் தமிழகத்தில் மட்டுமல்லாமல், தெலுங்கு மாநிலங்களிலும் முன்னணி நடிகராக இருக்கிறார். ‘அக்கட அம்மாயி இக்கட அப்பா’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, வெளியீட்டுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.