Friday, April 12, 2024

நடுவன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த ‘நடுவன்’ படத்தை Banner Cue Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Lucky Chhajer தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் பரத் கதையின் நாயகனாகவும், அபர்ணா வினோத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தில் நடித்திருந்த கோகுல் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், யோக் ஜேபி, ‘அருவி’ பாலா, தசரதி குரு, ‘ராஜா ராணி’ கார்த்திக், சுரேஷ் ராஜூ, மது, குழந்தை நட்சத்திரமான ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – யுவா, இசை – தரண், பாடல்கள், கார்க்கி, டாக்டர் பர்ன், ‘மிர்ச்சி’ விஜய், படத் தொகுப்பு – சன்னி சவரவ், கலை இயக்கம் – வி.சசிகுமார், இணை தயாரிப்பு – மது, தயாரிப்பாளர் – LUCKY CHHAJER.

‘இனிது இனிது’, ‘இசக்கி’, ‘மாலை நேரத்து மயக்கம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் நடிகர் ஷராங்க் என்னும் ஷரண் குமார், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

கொடைக்கானலில் பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்தும் சேர்ந்து தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். கோகுல் ஆனந்த், ஒரு முழு நேர குடிகாரர் என்பதால், பரத்துதான் அங்கு அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து வருகிறார். பரத்துக்கு மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள். 

பரத்தின் மனைவி அபர்ணா வினோத்தும், நண்பன் கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். இந்த விவகாரம் பரத் வீட்டில் தங்கி வேலை பார்க்கும், உறவுக்கார இளைஞரான அருவி’ பாலாவுக்கு தெரிந்துவிடுகிறது. இதையடுத்து அவரை கோகுல் ஆனந்த் மிரட்டி வைக்கிறார். இறுதியில் கள்ளக் காதல் விவகாரத்தை பரத்திடம் பாலா சொன்னாரா..? இல்லையா…? குடும்பம் என்னவானது.. என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தேயிலை தொழிற்சாலை முதலாளியாக பரத் நடித்திருக்கிறார். கம்பெனியே கதி என கிடக்கும் நிர்வாகி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். பரத்தின் மனைவியாக, நடித்துள்ள அபர்ணா வினோத் கணவனிடமிருந்து காதலையும், அன்பையும் எதிர்பார்க்கும் ஒரு மனைவியாக தனது கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். பரத்தின் நண்பராக நடித்துள்ள கோகுல் ஆனந்த், குடிகாரர், கள்ளக் காதலர் என வில்லன் வேடத்திற்கு பொருந்தி இருக்கிறார்.

அருவி பாலாவுக்கு ஒரு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அவருடைய வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் தடுமாற்றம் இல்லாமல் நடித்திருக்கிறார். இவருடைய நண்பர்களாக நடித்தவர்களும் ஓகே ரகம்தான்.

திரில்லர் படங்களுக்குப் பின்னணி இசைதான் பக்கபலமாக இருக்கும். ஆனால் இப்படத்தில் அது சரிவர அமையாதது பின்னடைவு. தரணின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை.

ஒளிப்பதிவாளர் யுவாவின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் அழகை கண்முன் கொண்டு வந்திருக்கிறது.

இயக்குர் ஷாரங், கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ள விதம் அருமை. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, அபர்ணா, கோகுல் கள்ளக் காதல் விவகாரம் தெரிய வந்த பிறகுதான் வேகம் எடுக்கிறது.

ஆலையின் பாத்ரூமில் அருவி’ பாலாவை கோகுல் மிரட்டுகின்ற காட்சியில் இயக்குநர் தனது பணியைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஒரு பக்கம் கொள்ளையடிக்க வந்த டீம்.. இன்னொரு பக்கம் மனைவி, மகள் மாட்டிக் கொண்டது.. கள்ளக் காதலன் வீட்டுக்கு வெளியில் சிக்குவது என்று அர்த்த ராத்திரியில் நடக்கும் அந்த முக்கால் மணி நேர காட்சிகள்தான் படமே. இந்தப் பரபரப்பை படம் முழுக்கக் கொண்டு வந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

இங்கே பலரும் தங்கள் உண்மை முகங்களை மறைத்து வேறொரு முகத்தைக் காட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு பரபரப்பான திரில்லராக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில் இந்த ‘நடுவன்’ சோபிக்கவில்லை.

- Advertisement -

Read more

Local News