Friday, April 12, 2024

“என் மகன் அவனாகவே சினிமாவைக் கற்றுக் கொண்டான்” – சொல்கிறார் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனது மகனான அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜனுக்கு தான் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை என்றும், அவனே உதவி இயக்குநராகப் படங்களில் பணியாற்றி சினிமா இயக்கத்தைக் கற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளார் தமிழ்ச் சினிமாவின் மூத்த இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜன்.

பயணங்கள் முடிவதில்லை’, ‘குங்குமச் சிமிழ்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘நான் பாடும் பாடல்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘தழுவாத கைகள்’, ‘ராஜாதி ராஜா’, ‘திருமதி பழனிச்சாமி’, ‘என் ஆச மச்சான்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன்.

இவரது மகன் தீபக் சுந்தர்ராஜன். இவர்தான் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் ‘அனபெல் சேதுபதி’ படத்தின் இயக்குநராவார்.

இந்த ‘அனபெல் சேதுபதி’ படம் உலகமெங்கும் வரும் செப்டம்பர் 17 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் சுந்தர்ராஜனும், அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய,  தீபக் சுந்தர்ராஜனும் இணைந்து பத்திரிக்கையாளர் இன்று மாலை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் R சுந்தர்ராஜன் பேசும்போது, “நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. எனது ஆரம்ப கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிக்கையாளர்கள் பலர் இங்கு வந்துள்ளனர். எனது திரைப் பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள், என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு இந்தப் படத்தின் கதை எதுவும் தெரியாது. இந்தப் படம் பற்றியும் எதுவும் தெரியாது,  அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விசயத்தில் நான் தலையிடவில்லை.

அவன் சினிமாவிற்குள்தான் போக வேண்டும் என்று கேட்டபோது ஏ.எல்.விஜய்யிடம் சேர்த்துவிட்டேன். அவரிடத்தில்தான் இயக்குதலை அவன் கற்றுக் கொண்டான். நான் எதையும் அவனுக்குச் சொல்லித் தரவில்லை.

தயாரிப்பாளர் டபுள் பாஸிட்டிவ் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக எனக்கு போன் செய்து சொன்னார். அதைக் கேட்டபோது சந்தோஷமாக இருந்தது.

நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை. அதனால் எனக்கு கடைசி படம்வரையிலும் ஒவ்வொரு படத்திலும் ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் என் மகனிடம் அது இல்லை.

இங்கு வந்து பாடல்கள், டிரெய்லரையெல்லாம் பார்த்தபோது அவனிடம் முதல் படம் என்ற தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்…” என்று கேட்டுக் கொண்டார். 

- Advertisement -

Read more

Local News