‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழா நிகழ்வில் பேசிய சசிகுமார், “மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படம் வெற்றி பெற்றதையடுத்து, ‘இனி உங்களுடைய சம்பளம் அதிகரிக்குமா?’ என்று பலர் கேட்கிறார்கள். ஆனால் சம்பளம் அதிகரிக்காது. அதே சம்பளம்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இப்படிப் பட்ட வெற்றி கிடைத்துள்ளது. ஆனால் இதை நான் தனிப்பட்ட வெற்றியாக நினைக்கவில்லை. ‘சசிகுமார் வெற்றி பெற்றுவிட்டார்’, அல்லது ‘தயாரிப்பு நிறுவனம் வெற்றி பெற்றுவிட்டது’ என யாரும் நினைக்க வேண்டாம்.

இந்தப் படம் புதிய இயக்குநர்களுக்கும், தோல்வியடைந்த இயக்குநர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. நாம் தோல்வியடைந்தால், அதை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘ஆம், நான் தோல்வியடைந்தேன்’ என்று ஒப்புக்கொள்வதே முக்கியம். ஒவ்வொரு முறையும் என் தோல்வியை நானே ஏற்றுக்கொண்டேன்.
‘சுந்தர பாண்டியன்’ திரைப்படத்தில் நீங்கள் எப்படிப் பாராட்டினீர்களோ, அதேபோல் இந்தப் படத்தில் வரும் தர்மதாஸ் என்ற கதாபாத்திரத்தையும் அனைவரும் விரும்புவார்கள் என கூறப்பட்டது. உண்மையிலேயே, நான் திரையரங்கில் சென்று படம் பார்த்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு சிறந்த படத்தை வழங்கினால், மக்கள் குடும்பத்தோடு திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்,” என தெரிவித்தார்.