கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற மதராஸி திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “மதராஸி படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நான் இசையமைப்பாளர் அனிருத்துடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். வாழ்க்கையில் அன்பு மிகவும் முக்கியமானது. அதுபோலவே இந்தப் படமும் அன்பை மையமாகக் கொண்ட கதை” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “கல்லூரி நாட்களில் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களின் ஆதரவால்தான் இன்று நான் இந்த உயரத்தில் இருக்கிறேன்” எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அதன்பின் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாகப் பதிலளித்த அவர், “ஆக்ஷன் காட்சிகளில் உடலில் வலி ஏற்படும்; காதல் காட்சிகள் மனதில் வலியை ஏற்படுத்தும். ஆனாலும் எனக்கு மனதில் ஏற்படும் வலியே பிடிக்கும். அதனால் லவ் சீன்கள்தான் எனக்குப் பிடிக்கும்!” என்று சிரிப்பூட்டினார்.
அதேபோல், “ஒரு மாயாஜால ரிமோட் கிடைத்தால், மீண்டும் கல்லூரி நாட்களுக்கே திரும்பிப் போவேன். குறிப்பாக, பின் வரிசையில் உட்கார்ந்து நண்பர்களுடன் கிண்டல் செய்த அந்த இனிய நாட்களுக்கே திரும்பிச் செல்வேன்” என்று நினைவுகூர்ந்தார். மேலும், “எனக்குப் பிடித்த நடிகர் எப்போதுமே நம் தலைவர் ரஜினிகாந்த்தான். அவருடைய பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல!” என்று சூப்பர் ஸ்டாரின் பிரபல வசனத்தை மிமிக்ரி செய்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இயக்குனர்களில் யார் பிடித்தவர்கள் என்ற கேள்விக்கு, “ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. ஒவ்வொரு படைப்பாளியும் எனக்குப் பிடித்தவர்களே” எனத் தெரிவித்தார்.