‘வைகை புயல்’ வடிவேலுவுக்கு எதிராக தமிழ்த் திரையுலகத்தில் நீடித்து வந்த மறைமுக தடை நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டதால் நடிகர் வடிவேலு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.
’இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத் தயாரிப்பின்போது தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரிடம் வடிவேலுவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அந்தப் படத்திலிருந்து தடாலடியாக விலகினார் வடிவேலு.
இயக்குநர் ஷங்கர் இதனை தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கொண்டு செல்ல.. அங்கே பஞ்சாயத்துக்கு ஏற்பாடானது. ஆனால் வடிவேலு பஞ்சாயத்திற்கு வராமல் போனதால் அவர் மீது மறைமுகத் தடையை தயாரிப்பாளர் சங்கம் விதித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் நேற்றைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட்டது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை மூலமாக செய்தியை வெளியிட்டது.
இது குறித்து நடிகர் வடிவேலு இன்று அளித்த பேட்டியில், “எனக்கு எதிரான ரெட் கார்டை நீக்கியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எனக்கு நிச்சயமாக மறு பிறவிதான். எனக்கு நல்ல நேரம் பொறந்தாச்சு.
நான் மீண்டும் சினிமாவில் தோன்ற இருப்பதை நினைத்தால், முதன்முதலில் நான் நடிக்க வாய்ப்பு தேடியது போன்ற உணர்வைத் தருகிறது. இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது.
என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான். அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன். அவர் இனிமேல் சபாஷ்கரன் என்றழைக்கப்படுவார்.
நான் அடுத்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கவுள்ளேன். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் மாதம் முதல் நடிக்கவுள்ளேன். அதனைத் தொடர்ந்து 2 படங்களில் நாயகனாக நடித்துவிட்டு, பின்னர் காமெடியனாகவும் நடிக்கவுள்ளேன்.
நான் தமிழக முதல்வரைச் சந்தித்த பின்னர்தான் எனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. மீண்டும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்…” என்று கூறியுள்ளார் வடிவேலு.