Friday, April 12, 2024

முதல் நீ முடிவும் நீ – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காதலும், காதல் சார்ந்த கதையும்தான் இந்த ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம். புறம் சார்ந்த இழப்புகளைவிட அகம் சார்ந்த இழப்புகள்தான் மிகப் பெரியது. ரொம்பவும் கொடியது என்பதை படம் போகிற போக்கில் அழகாகச் சொல்லிச் செல்கிறது.

நாயகன் கிஷன் தாஸ், நாயகி அமிர்தா, இன்னொரு நாயகி புர்வா ரகுநாத், நாயகனின் நண்பர்கள் ஹரிஷ், சரண் குமார், ரகுல் கண்ணன், மஞ்சுநாத் ஆகியோர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படித்துக் கொண்டிருக்கும்போதே நாயகன் கிஷன் தாஸுக்கும், அமிர்தாவிற்கும் லவ்ஸ். இவர்களுக்கு இடையில் புகுந்து ஒரு சம்பவத்தை நிகழ்த்தி விடுகிறார் இன்னொரு நாயகியான புர்வா ரகுநாத். அவர் செய்யும்  ஒரு சம்வத்தால் கிஷன் தாஸும், அமிர்தாவும் பிரிந்து விடுகிறார்கள்.

நாயகன் கிஷன் தாஸுக்கு பள்ளிக்கூடம் படிக்கும்போதே தானொரு இசை அமைப்பாளராக வரவேண்டும் என்பது கனவு. காதலை இழந்த அவர் தன் கனவை எப்படி எட்டினார்..? பிரிந்த காதலர்களும், நண்பர்களும் பல வருடம் கழித்து ஒரு ரீ யூனியனில் சேரும்போது என்னென்ன நடக்கிறது? என்பதுதான் இந்த ‘முதல் நீ முடிவும் நீ‘ படத்தின் கதை.

இந்தப் படத்தின் முதல் ப்ளஸ்  படத்தில் நடித்துள்ள அனைவரின் நடிப்பும்தான். நாயகன் கிஷன் தாஸ் தன் கேரக்டரை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார். இரு காலகட்டத்திற்கு ஏற்ப தன் உடல் மொழி, குரல் இரண்டிலும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.

அவருக்கு இணையாக மிக இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார் நாயகி அமிர்தா. அவர் எமோஷ்னல் காட்சிகளில் பல முன்னணி நடிகைகளுக்கு சவாலாக இருக்கிறார். சைனிஸ் என்ற கேரக்டரில் வரும் ஹரிஷ் மிகப் பிரமாதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரை இனி பல படங்களில் காணலாம்.

இன்னொரு நாயகியாக வரும் புருவா ரகுநாத் போல்டான கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். அவரின் திமிர்த்தனமான பேச்சும், செய்கையும் ரசிக்க வைக்கின்றன அவருக்கு ஒரு எமோஷ்னல் காட்சியும் இருக்கிறது. அந்தக் காட்சியிலும் அவர் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

மேலும், படத்தில் அனைவருமே மிகச் சிறந்த நடிப்பை வழங்கி ஒரு பள்ளி வாழ்க்கையை நம் கண்முன் காட்டுகிறார்கள். இவர்களிடம் இருந்து இப்படியான தேர்ந்த நடிப்பை வாங்கியதிலே தன் திறமையை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் தர்புகா சிவா.

படத்தில் டெக்னிக்கல் விசயங்களிலும் குறையில்லை. இசையை தர்புகா சிவாதான் அமைத்துள்ளார். மிகச் சிறந்த பாடல் ஒன்று க்ளைமாக்ஸில் இடம் பெறுகிறது. மேலும் பின்னணி இசையிலும் நல்ல மெச்சூட் இருக்கிறது.

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவில் 99-ஆம் காலகட்டத்தின் டோன் நன்றாகவே தெரிகிறது. ஸ்ரீஜித் சாரங் படத் தொகுப்பு செய்துள்ளார். பல இடங்களில் ஷார்ப். முன் பாதி, பின் பாதி இரண்டிலும் இன்னும் கவனம் எடுத்து 10 நிமிடங்களை குறைத்திருக்கலாம். 

வாசுதேவனின் கலை இயக்கம் பல இடங்களில் அட சொல்ல வைக்கிறது. பெரிய அளவில் செட் போடுவதற்கு பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை என்பது மட்டும் சில இடங்களில் தெரிகிறது. தாமரை, கீர்த்தி, கபீர் வாசுகி ஆகியோரின் பாடல் வரிகள் அருமை.

படத்தின் துவக்கம் முதல் முடிவுவரை காதலே படத்தின் மையமாக இருப்பதால் இளைஞர்களுக்கு சோர்வளிக்காத படமாக இது இருக்கும். மேலும் பெரியவர்களுக்கு ஒருசில இடங்களில் அலுப்புத் தட்டலாம்.

காலத்தை மாற்றி அமைத்து சரியான வாழ்வை வாழ்வதற்கான சூழல் இந்த உலகில் யாருக்குமே கிடைக்காது. ஒருவேளை அப்படி கிடைத்தால் எப்படி இருக்கும்? என்ற புனைவை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்திருக்கின்றன.

இந்தப் படத்தில் அந்த விசயத்தை லைட்டாக மட்டும் பயன்படுத்தி இருப்பதால் ஓ.கே. மொத்த கதையும் அப்படியே இருந்தால் சரியாக இருந்திருக்காது.

ஒரு சில தேக்கங்கள் படத்தில் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும் ஓட்டி ஓட்டி பார்க்க வேண்டிய சூழலை கொடுக்காத வகையில் இந்த ஓடிடி படம் இருப்பதால் வீட்டில் ரிலாக்ஸாக இப்படத்தை ஜீ-5-ல் பார்க்கலாம்.

RATING : 3 / 5

- Advertisement -

Read more

Local News