Friday, April 12, 2024

முன்னா – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீதில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராமு முத்துச்செல்வன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தின் இயக்குநருமான சங்கை குமரேசனே இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, ராஜாமணி, சண்முகம், வெங்கட்  ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாடல்கள் இசை – D.A.வசந்த், பின்னணி இசை – சுனில் லாசர், ஒளிப்பதிவு – ரவி, நடன  இயக்கம் – கென்னடி மாஸ்டர், படத் தொகுப்பு – பத்மராஜ், தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – சங்கை குமரேசன்.

தெருக்கோடி வாழ்க்கையில் கிடைக்கிற பணமே போதும் என்று மனசு சொல்லும். அதே மனசு நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது என்றுதான் சொல்லும், ஆனால், நிம்மதியும் இருக்காது என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த ‘முன்னா’ திரைப்படம்.

சாட்டையடித்து கலைக் கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிஷ்டவசமாக அந்த வாழ்க்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா…?

நாடோடி வாழ்கையில் கிடைத்த மகிழ்ச்சியும், மன நிம்மதியும் நாகரீக வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்ததா என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்த ‘முன்னா’ திரைப்படம்.

சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டு ஊர், ஊராக நாடோடிகளாகத் திரியும் ஒரு கலைக் கூத்தாடி குடும்பத்தைச் சேர்ந்தவர் படத்தின் நாயகனான சங்கை குமரேசன்.

மற்றவர்களெல்லாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகிறார்கள். வருகிறார்கள். பேசுகிறார்கள். நாம் மட்டும் ஏன் குனிந்த உடம்போடு, கையில் பாத்திரத்தை ஏந்த வேண்டும் என்பதை தனது சின்ன வயதிலேயே சிந்திக்கிறார் நாயகன்.

இதனாலேயே அப்பா வழியில் சாட்டையடிக்கும் வேலைக்குப் போகாமல் காது குடையும் வேலைக்குப் போகிறார். இப்போது வளர்ந்து வாலிபனான ஆன பின்பும் அதே வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார். இதனால் நாயகனின் அப்பா அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

அதே சமயம் நாயகனின் தங்கை உள்ளூர் மைனர் ஒருவரை அவனின் உண்மை முகம் தெரியாமல் காதலிக்கிறாள். அந்தக் காதலை தான் சேர்த்து வைப்பதாக நாயகனும் வாக்குறுதியளிக்கிறார்.

இந்த நேரத்தில் அந்த ஊரில் இருக்கும் தண்ணிப் பாம்பு என்ற குடிகாரருடன் நட்பாகப் பழகுகிறார் நாயகன். அவருடைய அறிவுறுத்தலால் ஒரு லாட்டரி சீட்டை வாங்க.. அந்த சீட்டுக்கு 2 கோடி ரூபாய் பரிசுப் பணம் கிடைக்கிறது.

“இதை வைத்து நாம் நிம்மதியாக வாழலாம். வாருங்கள்…” என்று தனது குடும்பத்தினரை அழைக்கிறார் நாயகன். ஆனால் நாயகனின் அப்பாவோ வர மறுக்கிறார். மகனை இறந்துவிட்டதாகவே நினைத்துக் கொள்வதாகச் சொல்லி அவரை விரட்டுகிறார்.

நாயகனும் கோபம் கொண்டு, “இனிமேல் நான் புதியவனாக இந்த நாகரிக உலகத்தில் வாழப் போகிறேன். நீங்கள் என்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்..” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

அவருடைய நண்பரான தண்ணி பாம்பின் ஏற்பாட்டின்பேரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறார். ஆனால் அதுவே அவருக்கு எமனாக மாறுகிறது. அது என்ன என்பதுதான் மீதிக் கதை.

இயக்குநரான சங்கை குமரேசனே நாயகன் கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருக்கிறார். அவரது வெகுளித்தனமான நடிப்புக்கேற்ற தோற்றம் அவருடைய கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

தனது சமூகத்தினர் இன்னும் எத்தனையாண்டுகள் இப்படியே இருப்பார்கள்..? நாங்களும் முன்னேற வேண்டாமா..? என்றெல்லாம் அவர் கேள்வியெழுப்பும் போதெல்லாம் அந்த வலியை தனது நடிப்பில் கொணர்ந்திருக்கிறார்.

இறுதியில் நாகரிகம்’ என்ற பெயரில் மனித மனமே இல்லாதவர்களும் இங்கே வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு கோபப்படும்விதத்தில் பாராட்ட வைக்கிறார். ஆனால், இவருக்கு மட்டும் அதிகப்படியான குளோஸப் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இதை மட்டும் குறைத்திருக்கலாம்.

அதே சமயம், சிரிப்பதும், பேசுவதும்போல் அழுகையும் ஒரு நடிப்புதான். அது யாருக்கு சிறந்து வருகிறதோ அவரே நடிகர். இந்தக் கோணத்தில் பார்த்தால் நடிகர் சங்கை குமரேசன் இன்னும் கொஞ்சம் முயற்சியெடு்த்து வந்து நடிக்க வேண்டும்.

ஆனால் இயக்குநர் மற்றவர்களை நன்கு நடிக்க வைத்திருக்கிறார். தன்னால் இயன்ற அளவுக்கு இயக்கமும் செய்திருக்கிறார். அதை மறுப்பதற்கில்லை. பாராட்டுகிறோம்.

நாயகனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த நியா கிருஷ்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த வயதுக்கே உரித்தான வெட்கம், சோகம், சிரிப்பு எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார். இவரைக் காதலிக்கும் மைனர் வேடத்தில் நடித்தவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

மேலும் இவரது அப்பாவாக நடித்திருக்கும் ராஜூ உருகி, உருகி தனது தொழிலை தெய்வச் செயல் லெவலுக்குக் கொண்டு போயிருக்கிறார். இவரது அம்மாவான சிந்து, வழமையான அப்பா சொல் மீறாத.. அதே நேரம் பிள்ளைகள் மேல் பாசம் கொண்டிருக்கும் அம்மாவாக நடித்திருக்கிறார்.

படத்தில் முக்கியக் கதாபாத்திரமே அந்தத் ‘தண்ணி பாம்பு’ கதாபாத்திரத்தில் நடித்தவர்தான். பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்றே உறுதியாகச் சொல்லலாம். மிகச் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர் ரவி கதைக்கும், பட்ஜெட்டுக்கும் தகுந்தாற்போல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பட்ஜெட்டுக்குள் பாடல் காட்சிகளை படமாக்கி, மொத்தப் படத்தையுமே அதே ஊரிலேயே சில லொகேஷன்களிலேயே முடித்திருக்கிறார்.

ஆனால், சினிமாவின் வழக்கமான டெக்னிக்கலான கேமிரா கோணங்களே இந்தப் படத்தில் இல்லை. அதற்கான வசதிகள் இந்தப் படத்தின் லொகேஷன்களில் கிடைத்திருந்தும், கோட்டை விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இசையமைப்பாளர் டி.ஏ.வசந்தின் இசையில் பாடல் வரிகள் அனைத்தும் புரிவதுபோலவே அமைந்துள்ளது. இசையும் பாடல் வரிகளைக் கேட்கும்விதத்தில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. இது போன்ற சின்னப் படங்களில் மட்டும் இப்போது பாடல்கள் சிறப்பாகவே வந்து கொண்டிருக்கின்றன.

நாடு முழுவதும் நாடோடிகளாக பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கலைக் கூத்தாடிகளின் துயர வாழ்க்கை இதில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இத்திரைப்படம் தவறான கதையைக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

வாழ்க்கையின் அடித்தட்டில் இருப்பவர்கள் காலம் முழுவதும் இப்படியே இருந்துவிடாமல், உயர் நிலைக்கு கண்டிப்பாக உயர வேண்டும். கல்வி, வீடு, குடும்பம், என்று மற்றவர்களைப் போலவே வாழ வேண்டும் என்ற நாயகனின் கனவு மிகச் சரியானதுதான்.

ஆனால், அந்த நாகரிக வாழ்க்கைக்குப் போனால் சீரழிந்துவிடுவாய் என்று அப்பா சொல்வதாக சொல்லி.. அதன்படியே கதையை முடித்திருப்பதுதான் ஏற்க முடியாதது.

நாகரிக உலகத்தில் 100-ல் ஒருவர் அப்படியிருப்பதால் அதுவே உண்மையாகிவிடுமா என்ன..? அந்தக் கலைக் கூத்தாடி குடும்பத்தின் தலைவர் தன் தொழிலைவிட மறுக்கும் முட்டாள்தனத்தைக் கண்டிக்கும் வசனங்களையே இங்கே காணவில்லை.

வீட்டுக்கு வீடு வந்து பிச்சை கேட்பதுபோல அரிசி வாங்கி அதில் சாப்பிடும் அந்தக் குடும்பம், அந்தத் தொழிலைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு போவதில் என்ன தவறு இருக்க முடியும்..?

அந்தத் தொழிலைவிடாமல் தொடர்வேன் என்று சொல்லும் அந்தத் தந்தையின் தவறை இந்தப் படத்தின் இயக்குநர் கண்டிக்கவே இல்லை. கடைசியில் அவர் சொன்னதுதான் சரி என்பதாகவே முடித்திருக்கிறார். இது நிச்சயமாக ஏற்க முடியாதது.

இந்த மக்களின் கலைத் தொழில், கலாச்சாரம், பழக்க வழக்கம் எல்லாத்தையும் மாற்ற வேண்டும் என்றில்லை. ஆனால், இவர்களது வாரிசுகள் அவர்களுக்குப் பிடித்தமான கல்வியைக் கற்று வேறு தொழில்கள் மூலமாக அவர்களும் இந்தப் பெரும் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டும். இதுதான் இப்போதைய நிலையில் சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் வழி.

இதை இப்படம் செய்யச் சொல்லவில்லை என்பதாலேயே இந்தப் படம் தவறான கருத்தைக் கொண்டிருக்கும் படம் என்று நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இயக்குநர் சங்கை குமரேசன் மீண்டும் ஒரு முறை தனது கருத்தை பரிசீலனை செய்வது நல்லது..!

Rating : 2 /5

- Advertisement -

Read more

Local News