முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் – சினிமா விமர்சனம்

சில நேரங்களில் மலையாள சினிமா ரசிகர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. சினிமாவை மொழிப் பாடமாக நினைத்தாலும், அல்லது மக்களுக்கான வாழ்க்கை பாடமாக நினைத்தாலும் சரி.. இரண்டிற்கும் பொருத்தமான திரைப்படங்களை அடிக்கடி வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

இந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘முகுந்தன் உன்னி அசோஸியேட்ஸ்’ என்ற மலையாளப் படம் இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. “குற்றவாளிகளாக யாரும் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்” என்பதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

M.Com., LLB படித்து ஒரு பெரிய சீனியர் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றி வருகிறார் 35 வயது நிரம்பிய வினீத் சீனிவாசன். இன்னமும் திருமணம் செய்ய முடியாமல் வயதான தாயாருடன் மத்திய தர குடும்ப வாழ்க்கையை வாழந்து வரும் வினீத்திற்கு தான் ஒரு மிகப் பெரிய வக்கீலாக வேண்டும். காசு, பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும். கல்யாணம் செய்ய வேண்டும் என்று நிறைய ஆசைகளும் உண்டு.

இதனால் தனக்கு ஒரு பெரிய கேஸ் கிடைத்தால் தனது வாழ்க்கையில் மாற்றம் வரும் என்று நம்பி தன் சீனியரின் வாடிக்கையாளரான தொகுதி எம்.எல்.ஏ.விடமே அவருடைய கேஸை தன்னிடம் கொடுக்கும்படி கேட்கிறார். இதனால் வேலையில் இருந்து துரத்தப்படுகிறார் வினீத்.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய அம்மாவுக்கு வீட்டிலேயே விபத்து ஏற்பட்டு காலில் கட்டு போட வேண்டி வருகிறது. இதற்காக மருத்துவமனைக்கு வந்தவருக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டுகிறார் இன்னொரு வழக்கறிஞரான சூரஜ் வெஞ்சாரமூடு.

விபத்தில் அடிபட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அனைவருக்கும் முந்திக் கொண்டு வக்காலத்தில் கையெழுத்தி வாங்கி தானே அவர்களுக்கு திடீர் வக்கீலாகி, விபத்தினால் ஏற்பட்ட காயத்திற்கு நஷ்ட ஈடு என்று சொல்லி இன்சூரன்ஸ் கம்பெனியிடம் நிறைய பணத்தை வாங்கி அதில் தனக்கென்று பீஸை எடுத்துக் கொண்டு, மீதத்தை நோயாளியிடம் தருவதுதான் சூரஜின் தலையாயத் தொண்டு.

இந்த வேலையைப் பார்த்த வினீத்திற்கு நாமும் இதுபோல் செய்தால் என்ன என்று தோன்றுகிறது. தன் நண்பனை பக்கத்தில் வைத்துக் கொண்டு அதே மருத்துவமனையில் சூரஜையும் முந்திக் கொண்டு இந்த இன்சூரன்ஸ் கிளெய்ம் தொழிலில் ஈடுபடுகிறார் வினீத்.

இதில் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறும் வினீத் ஒரு கட்டத்தில் சூரஜையே டேக் ஓவர் செய்து அவரை வெளியே அனுப்பிவிட்டு தனிக்காட்டு ராஜா போல் அந்தக் கல்லாரா பகுதியின் ஆஸ்தான இழப்பீட்டு வக்கீலாக மாறுகிறார்.

ஆனால் அவர் செய்த ஒரு தவறின் காரணமாக அவரது வக்கீல் தொழிலுக்கே ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் சூரஜூக்கும், இவருக்கும் இடையில் போட்டி, பொறாமை ஏற்பட்டு மோதலும் ஏற்படுகிறது. அதனால் வீனீத் எதிர் கொள்ளும் தடைகள் என்ன..? இதை மீறி அவரால் ஜெயிக்க முடிந்ததா..? என்பதுதான் மீதிப் படம்.

எப்படியாவது தனக்கென்று ஒரு வசதியான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என துடிக்கும் அந்த இளம் வழக்கறிஞர் கதாபாத்திரம் வினீத் சீனிவாசனுக்கு கச்சிதமாகப் பொருந்தி வருகிறது. குற்றம், குறை சொல்ல முடியாத ஒரு பக்கா வொயிட் காலர் கிரிமினலாக இந்தப் படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் வினீத்.

காட்சிக்கு காட்சி சாதாரணமான சிரிப்பலைகளை வந்து கொண்டேயிருக்கும் அளவுக்கு ஆக்சனிலும், உடல் மொழியிலும் காட்டியிருக்கிறார் வினீத். தனக்கு வரும் எதிர்ப்புகளை அவர் லாவகமாக கையாளும் இடங்களில் கை தட்டல்கள் பறக்கிறது.

தான் காதலிக்கப்படுவதை உணரும் தருணத்திலும், முதல் காதலை விலக்கும் நேரத்திலும் அந்த முடிவையெடுக்க அவர் எடுத்துக் கொள்ளும் நேரமும், அந்தக் காட்சிகளில் காட்டும் நடிப்பும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. கிளைமாக்ஸில் நாளைய போலீஸ் விசாரணையைத் தவிர்க்கும் பொருட்டு ஹனிமூனுக்குக் கிளம்பும் காட்சிகளிலும், அதன் பின்னான காட்சிகளிலும் திரைக்கதையின் உதவியால் தன் பிரச்சினையை தானே தீர்க்கும்விதத்தில் கை தட்டலைப் பெறுகிறார் வினீத்.

போட்டி வழக்கறிஞராக நடித்திருக்கும் சூரஜ் வெஞ்சாரமூடு இந்தப் படத்திலும் வழக்கம்போல தனது சீரியஸ் நடிப்பால் மிரட்டியிருக்கிறார். முதன்முதலாக வினீத்தை ஒரு வக்கீலாக அறியும் இடத்தில் அவர் காட்டும் முக பாவனையே தியேட்டரை அதிர வைக்கிறது.

சீனிவாசன், சுராஜ் இருவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளும், ஒருவரையொருவர் ஏமாற்றும் காட்சிகளிலும் ஒரு மெல்லிய நகைச்சுவை படம் நெடுகிலும் இழையோடிக் கொண்டே இருக்கிறது. இதில் சுராஜூக்கு ஏற்படும் முடிவு பரிதாபம்தான் என்றாலும், இறப்புக்குப் பின்பும் வினீத்தின் கண்களுக்கு மட்டுமே தெரிந்து அவரை பயமுறுத்தும் காட்சிகளெல்லாம் திரைக்கதையின் அட்டகாசமான உத்தி எனலாம்.

வினீத் சீனிவாசனின் நண்பனாக நடித்திருக்கும் நடிகர் சுதி கோப்பாவும் கச்சிதமாக நடித்துள்ளார். இவரும் தனி வக்கீலாக வாழ வேண்டி வினீத்திடம் வழி கேட்கும்போது வினீத் சொல்லும் பதிலும், செயலும் மிரட்டல்தான்.

காதலியான அர்ஷா, வினீத் செய்யும் முறைகேடுகளுக்கு ஐடியா கொடுக்கும் உத்தம காதலியாகி பின்பு மனைவியாகவும் ஆகிறார். நல்ல நடிப்பு. ஜாடிக்கேத்த மூடி போல வினீத் சீனிவாசன் போலவே அவர் ஐடியா கொடுக்கும் காட்சிகளெல்லாம் சிரிப்பையும் வரவழைத்து அவருக்கும் கை தட்டலைப் பெற்றுக் கொடுக்கின்றன. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போன்ற தோற்றத்தில் மருத்துவமனையின் ஓனரையே வேண்டாம் என்று உதறிவிட்டு வினீத்தைக் கை பிடிக்கும் அந்தச் சாமார்த்தியம்.. அழகு நடிப்பு.

தன்வி ராம் முதல் காதலியாக.. கொஞ்சம் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைக்கும் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவர்கள் தவிர இன்சூரன்ஸ் ஏஜென்ட், ஆஸ்பத்திரி டாக்டர், லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் பெண் இன்சூரன்ஸ் அதிகாரி, வினீத்தின் காதலியை வளைக்கப் பார்க்கும் இளம் டாக்டர் என்று பலரும் தங்களது எதார்த்தமான நடிப்பை வழங்கி ரசிக்க வைக்கின்றனர்.

விஸ்வாஜித்தின் ஒளிப்பதிவு கேரள தேசத்துக்கே உரிய அழகைக் காண்பித்துள்ளது. சிபி மேத்யூ அலெக்ஸின் பின்னணி இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி, ரசிகர்களை கொஞ்சம் பதட்டத்திலேயே படம் முழுக்க பயணிக்க வைத்திருக்கிறது.

விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்களிடம் இன்ஷூரன்ஸ் என்கிற விஷயத்தை தூண்டிலாகப் பயன்படுத்தி இவ்வளவு விஷயங்கள் நடக்கிறது என்பதை டீடெயிலாக விவரித்துள்ளார் இயக்குநர்.

வாகன விபத்து சட்டங்களைப் பற்றி மிகப் பெரிய அளவுக்கு ஆராய்ச்சி செய்துதான் இந்தத் திரைக்கதையை எழுதியுள்ளனர் போலும்.  படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை வினீத் தனக்குத்தானே பேசி கொள்ளும்விதமும், பிரச்சனைகளில் இருந்து அவர் சாதூர்யமாக வெளிவரும் விதமும் திரைக்கதையின் வித்தை என்றே சொல்லலாம்.  

வினீத்துக்கு ஒவ்வொரு முறையும் புதிய, புதிய பிரச்சனைகள் வரும்போது இதிலிருந்து இவர் எப்படி தப்பிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை நமக்குள் பரபரவென ஏற்படுத்துகிறது திரைக்கதையும், இயக்கமும். குறிப்பாக வினீத் பாம்பை வளர்த்து வருவது ஏன் என்று அப்போதைக்கு எந்தவித குறிப்பும் நம் மனதில் இல்லாமல்போய், கடைசியில் அதை தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்வது மிரட்டல் ரகம்.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி முன்னேற துவங்கிய பின்னர் அந்த இலக்கை எட்டிப் பிடிக்க வினீத் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதையும் விறுவிறுப்பு குறையாத திரைக்கதையில் சொல்லி நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஹீரோவான வினீத்தின் கதாபாத்திரம் யார் செத்தாலும் கவலையில்லை. நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று துடிக்கும் கொலைகார மனிதனாக இருப்பதால் அவரை நம்மால் ஹீரோவாக சொல்ல முடியாது. இது ஒன்றுதான் இந்தப் படத்தில் இருக்கும் கரும் புள்ளி..!

சிறப்பான திரைக்கதையும், இயக்கமும்தான் இந்தப் படத்தைக் கடைசிவரையிலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறது. தமிழில் எந்தப் புண்ணியவான் இந்தப் படத்தைக் எ(கெ)டுக்கப் போகிறாரோ… தெரியவில்லை…?

அதற்குள்ளாக தயவு செய்து மலையாளத்திலேயே பார்த்து விடுங்கள்..!

RATING : 3.5 / 5