1994-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி வெளியான தமிழ்த் திரைப்படம் ‘மே மாதம்’. ஜி.வி. பிலிம்ஸ் சார்பில் மறைந்த தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஷ்வரன் தயாரித்த இந்தப் படத்தை ‘வீனஸ்’ பாலு என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் வினீத், சோனாலி குல்கர்னி, மனோரமா நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘மார்கழி பூவே’, ‘மெட்ராஸ் ரோட்டுல’, ‘மின்னலே’ ஆகிய பாடல்களும், பாடல் காட்சிகளும் இன்றைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிற்கின்றன.
உண்மையில் இந்தப் படத்தில் நடிப்பதற்காக முதலில் அழைக்கப்பட்டவர்கள் ‘தல’ அஜீத்தும், நடிகை குஷ்புவும்தான் என்பது ஒரு சுவையான செய்தி. இந்தச் செய்தியை சொன்னதே இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ‘வீனஸ்’ பாலுதான்.
இது பற்றி அவர் சமீபத்தில் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

அவர் இது பற்றிப் பேசும்போது, “நான் ‘நாயகன்’ படத்தில் இருந்து ‘தளபதி’ படம்வரையிலும் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.
மணிரத்னமும், ஜீ.வி.யும் எனது உறவினர்கள் என்பதால் நான் ஒரு கதையை தயார் செய்து அதை ஜீ.வி.யிடம் சொன்னேன். ஜீ.வி. அதை உடனடியாக ஒத்துக் கொண்டார்.
இந்தப் படத்தில் முதலில் நடிப்பதற்காக எங்கள் மனதில் இருந்தது அஜீத்துதான். அப்போதுதான் அவர் திரையுலகத்தில் முகம் தெரிந்த ஒருவராக வந்த புதிது.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஸாரும், நானும் அஜீத்தை எங்களது அலுவலகத்திற்கு வரவழைத்து ஒரு சின்ன ஆடிஷன் டெஸ்ட் எடுத்தோம். அந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை அவரிடத்தில் கொடுத்து அதற்கான வசன உச்சரிப்பு, நடிப்பு இரண்டையும் பார்த்தோம். ஓகே.. என்றுதான் அஜீத்திடம் சொல்லியனுப்பினோம்.

அப்புறம் நானும் பி.சி.ஸாரும் பேசிப் பார்த்ததில் இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு அஜீத் பொருத்தமாக இல்லாததுபோல் எங்களுக்குத் தோன்றியது. அதனால் அடுத்து வினீத்தை அழைத்து டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். இப்போது எங்களுக்கு முழு திருப்தியாக இருந்ததால் அவரையே புக் செய்துவிட்டோம். பட்.. அஜீத்தை மிஸ் செய்த வருத்தம் இப்போதுவரையிலும் எனக்கு உள்ளது.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை ரெடி செய்தவுடன் நான் முதலில் போய் கதை சொன்னது குஷ்பூ மேடத்திடம்தான். ஏனெனில், அவர்தான் இதில் நாயகியாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அவரும் முழுக் கதையையும் கேட்டுவிட்டு டபுள் ஓகே சொல்லிவிட்டார்.

பின்பு யோசித்துப் பார்த்ததில் குஷ்பூவைவிடவும் சின்ன வயதுப் பெண் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்குமே என்றெண்ணி அதையும் கைவிட்டோம். அதற்குப் பிறகுதான் சோனாலியைத் தேடிப் பிடித்தோம். அவர் அப்போதுதான் ராஜீவ் மேனன் இயக்கியிருந்த ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்துதான் அவரைத் தேர்வு செய்தோம்..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் ‘வீனஸ்’ பாலன்.
அஜீத், குஷ்பூ காம்பினேஷனில் ஒரு படம்..! எப்படியிருந்திருக்கும்…?
மிஸ்ஸாயிருச்சே..?!!