Friday, April 12, 2024

மதில் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தப் படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளரான சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். 

இந்த ‘மதில்’ படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், திவ்யா துரைசாமி, ‘மைம்’ கோபி, ‘பிக்பாஸ்’ புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, எம்.தியாகராஜன் படத் தொகுப்பு செய்துள்ளார். வசனம் – எழிச்சூர் அரவிந்தன், கதை, திரைக்கதை, இயக்கம் – மித்ரன் ஆர்.ஜவஹர்.

ஜீ-5 ஓடிடி தளத்திற்காகத் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தின ஸ்பெஷலாக ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நமது பக்கத்து வீட்டில் அல்லது பக்கத்துத் தெருவில் நடக்கும் தினசரி சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்புதான் இத்திரைப்படம். தன் மனசாட்சியின் சொல்படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைக் குரல்தான் இந்த ‘மதில்’ திரைப்படம்.

ஆசை, ஆசையாய் கட்டிய வீட்டின் சுவற்றில் அரசியல் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டுவதைத் தட்டிக் கேட்கிறார்  குடும்பத் தலைவரான கே.எஸ்.ரவிக்குமார்.

இதனால் பலவித பிரச்சினைகள் அந்தக் குடும்பத்திற்கு எழுந்து கடைசியில் மொத்தக் குடும்பத்தின் நிம்மதியும் பறி போகிறது.. இதன் விளைவுகள் என்ன என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.

லட்சுமி காந்தன்’ என்ற கே.எஸ்.ரவிக்குமாருக்கு மகன், மருமகள், கல்யாணமாகாத மகள் என்று அளவான குடும்பம். அவருடைய மனைவி இறந்துவிட்டார். தனக்கென்று சொந்தமாக டிராமா குரூப் வைத்து நாடகங்களை நடத்தி வருகிறார்.

இந்த வயதில்தான் சிறுக சிறுக சேமித்த பணத்தில் ஆசை, ஆசையாக ஒரு வீட்டினைக் கட்டியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் வரவிருக்கிறது. இதையொட்டி ஆளும் கட்சியில் இருக்கும் அந்தத் தொகுதியின் முக்கியப் புள்ளியான ‘மைம்’ கோபி, தான் இந்தத் தேர்தலில் சீட்டைப் பிடிக்க அனைத்து வழிகளையும் செய்து வருகிறார்.

அதோடு தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்வதற்காக முன்கூட்டியே ஊருக்குள் இருக்கும் வீடுகளின் சுவர்களில் தனது கட்சியின் பெயரை எழுதி இடத்தைப் பிடித்து வைக்கச் சொல்கிறார் மைம்’ கோபி. இதேபோல் அந்தக் கட்சியினர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீட்டின் சுவற்றிலும் எழுதி வைக்கின்றனர்.

இதைக் கண்டு கோபப்படும் கே.எஸ்.ரவிக்குமார் அதனை அழிக்கிறார். இதனால், கோபப்படும் ‘மைம்’ கோபியின் ஆட்கள் சுவர் முழுவதும் அவர்களது கட்சியின் விளம்பரத்தை எழுதி வைக்கிறார்கள். இதனால் ஆத்திரப்படும் கே.எஸ்.ரவிக்குமார் பெயிண்டரை வரவழைத்து மொத்தத்தையும் அழிக்கிறார். அதோடு ‘மைம்’ கோபிக்கே போன் செய்து அவரைக் கண்டிக்கிறார் ரவிக்குமார்.

தான் ஆளும் கட்சியில் முக்கியப் புள்ளியாக இருந்தும் தன்னை மதிக்காமல் ஒருவன் பேசுவதா என்று கோபத்தின் உச்சிக்கே போகும் ‘மைம்’ கோபி, மின் வாரிய அலுவலகத்தில் சொல்லி ரவிக்குமாரின் வீட்டிற்கு மட்டும் மின் இணைப்பைத் துண்டிக்க வைக்கிறார். இதையும் ரவிக்குமார் தனது டிராமா டிரூப்பை வைத்து நாடகமாடி சரி செய்கிறார்.

இதனால் எதையாவது செய்து தனது அதிகாரத் திமிரைக் காட்ட நினைத்த ‘மைம்’ கோபி புல்டோசரை அனுப்பி ரவிக்குமாரின் வீட்டுச் சுவற்றை இடிக்க வைக்கிறார். இப்போது போலீஸுக்கு போயும் பலனில்லாமல் போகிறது ரவிக்குமாருக்கு.

ஆனாலும் எப்பாடுபட்டாவது ‘மைம்’ கோபியை தன்னிடம் சரணடைய வைக்கலாம் என்று ரவிக்குமார் திட்டம் போடுகிறார். இதேபோல் ரவிக்குமாரை தன்னைத் தேடி வரவைத்து மன்னிப்பு கேட்க வைக்க ‘மைம்’ கோபியும் திட்டம் இடுகிறார். இதில் யாருடைய திட்டம் பலித்தது..? இறுதியில் வெல்வது அரசியல் அராஜகமா..? அல்லது சாமானியனின் கூக்குரலா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

தனது சிறு வயதிலேயே யாராவது தன்னிடம் தவறாக நடந்து கொண்டு அதற்காக மன்னிப்புக் கேட்டால் அவர்களை சட்டென்று மன்னித்துவிடும் குணத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் லட்சுமிகாந்தன்’ என்னும் கதாபாத்திரத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அலட்சியமாகச் செய்திருக்கிறார்.

கோபமான முகம்.. ஓங்கி ஒலிக்கும் குரல்.. கண்டிப்பான அப்பா.. ஜனநாயகத்தை விரும்பும் வாக்காளன்.. நேர்மையை விரும்பும் ஒரு மனிதன், நாகரிக நடத்தையை எதிர்பார்க்கும் பண்பாளன் என்று பலதரப்பட்ட குணாதிசயங்களை தனக்குள் வைத்துக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் அதைத் தெளித்திருக்கிறார் ரவிக்குமார்.

சுவற்றில் இருக்கும் எழுத்துக்களைப் பார்த்து முதலில் கோபப்பட்டு… பின்பு சுவர் முழுக்க ஆக்கமிரப்பு செய்திருப்பதைப் பார்த்து ஆத்திரப்பட்டு.. தன் வீட்டுச் சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டு கொதித்தெழும் சாதாரண ஒரு பிரஜையின் உணர்வைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார் ரவிக்குமார்.

நேரில் சமாதானம் பேசப் போன இடத்தில் தன்னைத் தாக்கிய மைம்’ கோபியிடம் அந்த அதிர்ச்சி விலகாமல் அமைதியாய் பேசிவிட்டு வரும் காட்சியில் அமைதியாகவும் நடித்திருக்கிறார் ரவிக்குமார்.

அதே மைம்’ கோபியிடம் தனது வில்லத்தனத்தைக் காட்டத் தொடங்கியவுடன் போனில் தைரியமாக பேசி மன்னிப்பு கேட்க வரும்படி அழைக்கும்போது, ஒவ்வொரு ரசிகனுக்கும் அவரைப் பிடித்துப் போகிறது. ஏனெனில் இதுதான் ஜனநாயகமான வழி.

மருமகளுக்கு கவுண்ட்டர் அட்டாக் கொடுப்பது.. மகனின் மனைவி கோண்டுவைக் கிண்டல் செய்வது.. தனது நாடகக் குழுவை சமாளிப்பது.. மகளின் பாசத்தில் திளைப்பது.. என்று சகலத்திலும் லட்சுமி காந்தனே தெரிகிறார்.

இவருக்குப் பிறகு ‘மைம்’ கோபிதான் அழுத்தந்திருத்தமாய் வாழ்ந்திருக்கிறார். இவருடைய மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டே அவருடைய வசன உச்சரிப்புதான். பல்வேறு வகையான எமோஷன்களையும் ‘மைம்’ கோபி காண்பிக்கும்விதமே இவர் வித்தியாசமான ஒரு வில்லன் என்பதை காட்டுகிறார்.

இவரும், கட்சியின் தலைவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிக இயற்கையான வசனங்களும், நடிப்புமாக ஜொலிக்கிறார்கள் இருவரும்.

அமைதியே உருவான மகன்.. மாமனாரின் சுயத்தைப் புரிந்து கொள்ளாமல் ஹிந்தியிலேயே கணவரை வறுத்தெடுக்கும் மருமகள் என்று அவர்கள் ஒரு பக்கம் நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

மகளான திவ்யாவுக்கும் ஒரு தனி டிராக் வைத்திருக்கிறார்கள். மகளும் கொள்ளை அழகு. நாயகியாக நடிக்க வேண்டியவர். கிடைத்த வேடத்தில்.. கிடைத்த படத்தில் நடிப்பதற்காக இதில் தோன்றியிருக்கிறார் போலும். அழகும், நடிப்பும் நிரம்ப இருப்பதால் இவரை தமிழ்த் திரையுலகத்தினர் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பலாம்.

இந்தப் படத்திலேயே தேவையில்லாத ‘ஸ்டெப்னி’ என்று சொன்னால் அது ரவிக்குமாரின் டிராமா கோஷ்டிதான். அதிலும் மதுமிதாவின் கேரக்டர் ஸ்கெட்ச் தேவையே இல்லாதது. அது போன்று தாலி கட்டிக் கொள்ள அலைவதாக அவரது கேரக்டரை இந்த அளவுக்கு கீழே இழுத்திருக்க வேண்டாம்.

இதேபோல் இவர்கள் மின் வாரிய அலுவலகத்தில் செய்யும் அலப்பறை சகிக்க முடியாத துயரம். நாடகத் தன்மையுடன் அந்தப் படத்தின் கலரையே அந்த நொடியில் மாற்றிவிட்டது. இந்தக் காட்சிதான் படத்திற்கு ஒரு திருஷ்டி பொட்டாக அமைந்துவிட்டது. நீக்கியிருக்கலாம். அல்லது வேறுவிதமான திரைக்கதையை அமைத்திருக்கலாம்.

படத்தில் நடித்த மற்றவர்கள் அனைவருமே தங்களது பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள். அதிலும் மைம்’ கோபியின் சின்ன வீடாக வரும் அர்ச்சனாவின் ஆவேசப் பேச்சின்போது தெறிக்கவிடலாமா என்பதுபோலத்தான் தோன்றியது. பாராட்டுக்கள்.

பாலமுருகனின் ஒளிப்பதிவு கச்சிதம். இரவு நேரக் காட்சிகளை அவ்வளவு அழகாகப் படம் பிடித்திருக்கிறார். ரவிக்குமார்-மைம் கோபி சந்திப்பு காட்சி ஏற்படும் தாக்கத்திற்கு கேமிராமேனின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தனின் வசனங்கள் சில இடங்களில் நாடக மேடைகளில் ஒலிக்கும் இரட்டை அர்த்த வசனங்களாக அமைந்தது வருத்தமான விஷயம். அதேபோல் ஒன்றுமேயில்லாத வசனத்தையெல்லாம் நகைச்சுவை வரும் என்று நினைத்து பேச வைத்திருப்பதெல்லாம் வீணான செயல். அதே சமயம், பல வசனங்கள் இன்றைய யதார்த்த உலகத்தில் அரசியல்வாதிகளின் அனைத்துவகையான அராஜகங்களையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

படத்தின் போக்கை மாற்றியமைக்க அந்தத் தொகுதியின் இடைத்தேர்தலையே மையமாக வைத்து திரைக்கதையை மாற்றியிருந்தால், இதைவிடவும் மிக நெருக்கமாக படத்துடன் ஒன்றியிருக்கலாம். ஆனால், தேவையற்றவிதமாக டிராமா குழுவினரைப் பயன்படுத்திக் கொண்டு பேசியிருப்பது வீணான வேலையாகிவிட்டது.

அதோடு இத்திரைப்படம் முழுக்க, முழுக்க சீரியஸ் படமாகத்தான் உருவாகியிருக்க வேண்டும். இடையிடையே காமெடி டிராக்போல பிரேக்கை போட்டதால் படத்தின் தன்மையை நம்மால் முழுமையாக உணர முடியவில்லை.

இப்போதைய இந்திய சூழலில் ஒரு சாதாரண மனிதன்.. ஒரு அரசியல்வாதியின் அராஜகத்தைக் கண்டித்துத் தனித்து நின்று வெற்றி காண்பது என்பது சாத்தியமே இல்லாதது.

ஆனால், அப்படியொரு எதிர்ப்பினை எப்படி செய்தால் ஜெயிக்க முடியும் என்பதற்கு இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் ஒரு வழியும் சரியானதுதான் என்பதால் இயக்குநருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியல்வாதிகளுக்கு வகுப்பு, பொது மக்களுக்கு பொறுப்பு, களவாணித்தனத்துக்கு மறுப்பு, காவல்துறைக்கு சிறப்பு, ‘தனக்கென்ன’ என்பவர்களுக்கு படிப்பு, திறமையானவர்களின் நடிப்பு.. என்று மொத்தத்தில் இந்த ‘மதில்’ திரைப்படம் ஒரு தில்லான படைப்பு.

“என் சுவர்; என் உரிமை” என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம்.

Rating : 3 / 5

- Advertisement -

Read more

Local News