Friday, April 12, 2024

மாஸ்டர் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் நடக்கின்ற அதே மோதல்.. சண்டை.. வார்.. போர்.. இதுதான் இந்தப் படத்தின் கதையும்கூட..!

நாகர்கோவிலில் தனது குடும்ப எதிரிகளால் குடும்பமே நிர்மூலமாக்கப்பட்டு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான் ‘பவானி’ என்னும் பையன். அங்கேயும் தொடர்ந்து அவனுக்கு டார்ச்சர்கள் கொடுக்கப்பட, மனதளவில் சக்தி வாய்ந்த கெட்டவனாக உருவெடுக்கிறான்.

பையன் வாலிபனாகி வெளியே வந்தவுடன் ஊரில் இருக்கும் அனைத்துவித கொடூரங்களையும் செய்யத் தொடங்குகிறான். இவன் செய்யும் அனைத்துக் குற்றங்களுக்கும் ஊரில் இருக்கும் சின்னச் சின்னப் பையன்களைப் பொறுப்பாக்கி அவர்களை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்து டேக் டைவர்ஸன் பணியையும் செய்து வருகிறார் ‘பவானி’ என்னும் விஜய் சேதுபதி.

லோக்கல் போலீஸையும் கைக்குள் வைத்துக் கொண்டு ஊரில் நாட்டாமை செய்து வந்த பலரையும் போட்டுத் தள்ளி நாகர்கோவிலில் ‘பவானி’ மட்டுமே ராஜ்யம் செய்வதை ஊர்ஜிதப்படுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

இந்த நேரத்தில் சென்னையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் JD என்னும் ஜான் தரமராஜனான விஜய், அந்தக் கல்லூரியில் அனைத்து மாணவர்களின் அபிமானத்தைப் பெற்றவராக இருக்கிறார்.

கல்லூரி மாணவர் பேரவைக்குத் தேர்தல் நடத்தலாமா.. வேண்டாமா… என்று கல்லூரியின் முதல்வரும், மற்ற பேராசிரியர்களும் கலந்தாலோசிக்கும்போது “கண்டிப்பாகத் தேர்தலை நடத்த வேண்டும்..” என்று வாதிடுகிறார் விஜய்.

“ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு கலவரம் வந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு” என்கிறார் பிரின்சிபால். “அப்படியொன்று ஏற்பட்டால் நான் வேலையை ராஜினாமா செய்கிறேன்…” என்கிறார் விஜய்.

அவர் அமைதியாகத் தேர்தலை நடத்திக் கொடுத்தாலும் தேர்தலில் தோற்ற சாந்தனுவின் அப்பா அனுப்பி வைத்த அடியாட்கள் கல்லூரியில் ரகளையை நடத்த.. இதன் விளைவாக மூன்று மாதங்கள் கல்லூரியில் இருந்து வெளியேறுவதாகச் சொல்லி வெளியேறுகிறார் விஜய்.

அதே கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் நாயகியான மாளவிகா, விஜய்க்கே தெரியாமல் அவருக்கு நாகர்கோவில் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியர் பணியை வாங்கிக் கொடுக்கிறார். இந்த வேலையை வாங்கிக் கொடுத்ததே நாயகிதான் என்பது தெரியாமலேயே நாகர்கோவில் வருகிறார் விஜய்.

அங்கே சிறுவர் கூர்நோக்கு மையத்தில் இருக்கும் சின்னப் பசங்களை வைத்து கஞ்சா, அபின் என்று போதைப் பொருட்களை விற்று வருகிறார் விஜய் சேதுபதி. கூடுதலாக அவரது அடியாட்கள் செய்யும் கொலையை நாங்கள் செய்தோம் என்று சொல்லி கோர்ட்டில் ஆஜராக செட்டப் ஆட்களையும், இதே சீர்த்திருத்தப் பள்ளியில் இருந்து தேர்வு செய்கிறார் விஜய் சேதுபதி.

இந்தக் காலக்கட்டத்தில் நாகர்கோவிலுக்கு வந்து சேரும் விஜய் அங்கேயிருக்கும் சூழலை அறிந்து கொள்ளாமல் சதா குடியும், தூக்கமுமாக வாழ்க்கையைக் கழிக்கிறார். அவர்தான் தங்களைக் காப்பாற்றுவார் என்று காத்திருக்கும் இரண்டு சிறுவர்கள் விஜய் சேதுபதியால் கொல்லப்பட.. அந்த நேரத்தில்தான் விஜய் முழித்துக் கொள்கிறார்.

நிஜம் சுடுகிறது. அது சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி என்றாலும் அங்கே கிரிமினல்தனம்தான் சொல்லித் தரப்படுகிறது என்பதை இப்போதுதான் உணர்கிறார் விஜய்.

இதற்கடுத்து அந்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களை வைத்து கிரிமினல் சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் ‘பவானி’ என்னும் விஜய் சேதுபதி ஒழிக்க முற்படுகிறார் விஜய்.

விஜய்யின் மூவ்மெண்ட்டுகளை அறியும் விஜய் சேதுபதியும் பதிலுக்கு பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறார்.

இறுதியில் யார் ஜெயித்தார்கள்..? நீதி வென்றதா..? அல்லது தோற்றதா..? என்பதைத்தான் இந்த மூன்று மணி நேர திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

விஜய்யின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டே.. அவரது இளமையான தோற்றம்தான். இந்தப் படத்திலும் அதை அப்படியே மெயின்டெயின் செய்திருக்கிறார். தனது ரசிகர்களுக்காக படம் முழுவதும் அவர் செய்யும் ஸ்டைல் மேனரிசங்கள் தியேட்டரில் அவருக்குக் கை தட்டலை வாங்கித் தருகிறது.

நடிப்பதற்கு இரண்டு இடங்களில் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதிலும் உணர்ச்சிகரமாக, உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். பவானியின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி பள்ளியில் இருக்கும் சிறுவர்களிடத்தில் சொல்லிப் புரிய வைக்கின்ற காட்சியில் நடிப்பைக் காட்டியிருக்கிறார் விஜய்.  தன்னுடைய மாணவர்களை விரட்டிவிரட்டி கொலை செய்யும் காட்சிகள் லைவ்வாக போனில் கிடைக்கும்போதும் அவரது கதறலான நடிப்பை ரசிக்க முடிகிறது.

இடையிடையே நக்கல் அடித்தபடியேயும், கிண்டல் செய்தபடியும் அனைத்துவித ஸ்டைல்களையும் காட்டி அவரது ரசிகர்களைத் தூங்கவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதியுடன் நேருக்கு நேர் மோதும் காட்சியில் என்னதான் ஹீரோவுக்கான லுக்குடன் இருந்தாலும் விஜய் சேதுபதியின் மாஸான டயலாக் டெலிவரிக்கு முன்பு விஜய் காணாமல்போய்விட்டார் என்பதுதான் உண்மை.

வில்லன் ‘பவானி’யாக நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் மிக முக்கியமான படமாக இருக்கும். “உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள என்னைக் கொலை பண்ணிட்டு தப்பிச்சுப் போயிருங்க…” என்று ஒவ்வொரு கொலைக்கு முன்பாகவும் அவர் சொல்லும் வசனம், அவருடைய கேரக்டரை எங்கயோ கொண்டுபோய்விட்டது.

விஜய் சேதுபதியின் உடல் மொழி.. நடை, உடை, பாவனை.. மாஸான பேச்சு.. டயலாக் டெலிவரி எல்லாமும் சேர்ந்து ‘பவானி’யை பயங்கரமான வில்லனாக உருவாக்கியிருக்கிறது. எத்தனை திடமானவராக இருந்தும் யாரையும் நம்பாமல், தன்னை மட்டுமே நம்புவராக அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்திலேயே ஒரேயொரு காட்சியில் மட்டுமே வெடிச் சிரிப்பினை உதிர்க்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அது நெருப்புக் கோழி பற்றி தனது அடியாளுக்கு சொல்லும்போதுதான்..!

அன்பு, பண்பு, பாசம், நேசம், உறவு.. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னைப் பற்றியும், தனது தொழில் பற்றியுமே சிந்திக்கும் இந்த ‘பவானி’ தமிழ்ச் சினிமாவில் வில்லன்கள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்.

நாயகியான மாளவிகா மோகனனுக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் திரைக்கதையில் விஜய் நாகர்கோவில் வந்து சேர்வதற்கு பெரிய உதவியாக இருந்திருக்கிறார். இந்த ஒட்டுதல் திறமைக்காக இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால் விஜய்-மாளவிகா ஜோடிக்கான டூயட் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தந்திருக்கிறது.

ஆண்ட்ரியா சத்தியமாக இந்தப் படம் பற்றி இனிமேல் வெளியில் பேசவே மாட்டார் எனலாம். அந்த அளவுக்கு அவரது கேரக்டர் வீணடிக்கப்பட்டிருக்கிறது. நாகர்கோவிலில் நடைபெறும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் அவரைப் பயன்படுத்தியது நகைச்சுவையாகிவிட்டது.

பாராட்டுக்குரிய நடிப்பினைத் தந்திருப்பவர்கள் அந்தத் தூக்கில் தொங்கும் சிறுவர்களும், தன் கதையைக் கூறி கடைசிவரையிலும் விஜய்யுடன் இருக்கும் சிறுவனும்தான்..!

அர்ஜூன் தாஸுக்கு இரவல் குரல் கொடுத்தவர் யார் என்று தெரியவில்லை. அந்த உருவத்திற்கும், தோற்றத்திற்கும் பொருத்தமே இல்லாத குரல்.

மற்றபடி கெளரி ஜி.கிஷன், சாந்தனு, நாசர் மற்றும் பல நடிகர்களும் வந்து போயிருக்கிறார்கள். கமர்ஷியல் திரைப்படத்தில் இதெல்லாம் சகஜம்தானே.. தவிர்க்க முடியாதது.

என்னதான் கமர்ஷியல் திரைப்படம்தான் என்றாலும் படம் எடுக்கும் தற்போதைய வருடம் 2021 என்பதால் அதற்குப் பொருத்தமானதாக இருந்திருக்க வேண்டாமா..?

கல்லூரியில் ஏன் விஜய்யை மாணவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்பதற்கு எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை. அதனாலேயே விஜய் கேரக்டருடன் நம்மால் ஒன்ற முடியவில்லை. பிறகு அவருடைய அதீத குடிப் பழக்கத்திற்கு அவர் அடிக்கடி சொல்லும் பல கதைகள் நம்பகத்தன்மையில்லாமல் போக அவர் மீது சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது.

சிறுவர் கூர்நோக்கு மையத்தில் இருக்கும் சீர்த்திருத்தப் பள்ளியின் ஆசிரியர் வார்டன்களையே அடித்து நொறுக்குகிறார் என்பதிலேயே இந்தப் படத்தின் இயக்குநர் மீது பலவித கோபதாபங்கள் எழுகிறது. இந்த அளவுக்கா லாஜிக் எல்லையை மீறுவது..?

அனைத்துவித சமூக விரோதச் செயல்களையும் செய்யட்டும்.. அந்த ஊரில் ஒரு நல்ல போலீஸ் அதிகாரிகூடவா இல்லை.? அல்லது போலீஸே விஜய் இருக்கும் பக்கமே வரவில்லையா..?

ஹோட்டலில், டீக்கடையில், மருந்து கடையில் என்று சகட்டுமேனிக்கு பலரையும் வெளுத்து வாங்கும் விஜய்யை காவல்துறை தேடி வரவில்லை என்பது கமர்ஷியல் ஹீரோவுக்காக இயக்குநர் செய்து கொண்ட சமரசம் போலத் தோன்றுகிறது.

“18 வயதைத் தாண்டியவர்களும் மையத்தில் இருக்கிறார்கள்…” என்றாலே போதுமே.. இதை வைத்தே அழகாக ஸ்கிரீன்பிளே செய்து அவர்களை வெளியேற்றியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு மறுபடியும் நாயகனையும், வில்லனையும் சந்திக்க வைக்க ஒரு திரைக்கதையை எழுதி நேரத்தை வீணாக்கியிருக்கிறார் இயக்குநர்.

அதேபோல் படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். இது அநியாயமானது. தயவு தாட்சண்யமே இல்லாமல் 45 நிமிட காட்சிகளை இயக்குநர் வெட்டித் தள்ளலாம். அப்படி கதைக்குத் தேவையில்லாத காட்சிகள் நிறையவே படத்தில் இருக்கின்றன. அவைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் படம் மிகவும் கிரிப்பாகத்தான் இருக்கும். ரசிக்கவும் முடியும்.

ஒளிப்பதிவாளர் சத்யன்-சூர்யன் இரவு நேரக் காட்சிகளை அழகாகப் படமாக்கியிருக்கிறார். பகல் நேர காட்சிகள் அனைத்துமே டல் மூடில் தெரிந்தது ஏன் தெரியவில்லை. குறிப்பாகக் கல்லூரி காட்சிகள். எதுவும் தெளிவாக இல்லையே..? ஏனுங்கோ ஸார்..?

அனிருத்தின் இசை இந்தக் காலத்திய இளசுகளுக்குப் பிடிப்பதுபோல டிரம்ஸ்களை போட்டுத் தாளித்திருக்கிறார். பாடல்களில் ‘வாத்தி’யும், ‘குட்டி ஸ்டோரி’யும் பட வெளியீ்டடுக்கு முன்பேயே ஹிட்டடித்துவிட்டதால் படத்திலும் ரசிக்க முடிகிறது. ஆனால் எதுவும் மனதில் நிற்கவில்லை.

படத் தொகுப்புப் பணியினைச் செய்திருக்கும் பிலமோன் ராஜ் கொஞ்சம் மனம் வைத்து பலவற்றைக் குறைத்திருந்தால் இன்னும் கூடுதலாகவே இந்தப் படத்தை ரசித்திருக்கலாம்.

விஜய்க்கு இது போன்ற மாஸ் படங்கள் தேவைதான். ஆனால் அது முந்தைய படங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல இருக்க வேண்டும். அப்போதுதான் அது பேசப்படும் பொருளாக இருக்கும்.

சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிகள், சிறுவர் கூர்நோக்கு மையம் ஆகியவற்றின் கதைகள்.. இவைகளில் சேர்க்கப்படும் சிறார்கள்.. அன்றாட அலுவல்கள்.. வழக்கமான அரசியல் விளையாட்டு.. அரசுகளின் பாராமுகம்.. லஞ்சம், ஊழல் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆனால் இந்த மாஸ்டர் எதில் மாஸ்டர் என்பதை மட்டும் அவர் சொல்லவேயில்லை.

மீண்டும் ஒரு லோகேஷ் கனகராஜை வேறொரு தளத்தில் பார்க்க விரும்புகிறோம்..!

- Advertisement -

Read more

Local News