மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.
‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகனான இயக்குநர் அமீர் பேசும்போது, “இந்தப் படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள். இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப் பிரச்சினையை பற்றியது அல்ல.
சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கிட்டேதான் இருக்கணும்.
நான் எப்போதும் கதையின் நாயகனாகத்தான் இருப்பேன். சினிமா என்பது இயக்குநரின் மீடியம். நாயகர்களால்தான் சினிமா என்கிற பிம்பத்தை நான் உடைக்க விரும்புகிறேன். அதேசமயம் ஒரு ரசிகனாக நடிகர்களை கொண்டாடுவோம்.
‘பான் இந்தியா’ கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ‘ரோஜா’, ‘பம்பாய்’ ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ‘ஷோலே’, ‘ஹம் ஆப் கே’ போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. ‘கிழக்கு சீமையிலே’, ‘பருத்தி வீரன்’, ‘சுப்பிரமணியபுரம்’ படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்தான்…” என்றார்.