“இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயாரான திருமதி.மணிமேகலையின் திடீர் மறைவினால் ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது…” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதனும், இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் பணியாற்றுகிறார்கள்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதனை எங்கு படமாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது படக் குழு.
இதுவரை முடிக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என்று ஏற்கெனவே படக் குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மே 9-ம் தேதியன்று, படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
இதைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக் குழுவினர் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வெங்கட் பிரபுவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். இதே நேரத்தில் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீட்டையும் ஒத்தி வைத்துள்ளதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது #மாநாடு படத்தின் first single நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயாரின் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னொரு தேதியில் first sigle வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம். கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே..” என்று குறிப்பிட்டுள்ளார்.