Friday, April 12, 2024

மாமனிதன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சீனு ராமசாமியின் பிரத்யேக ஸ்டைலில் குடும்ப படமாக இந்த ‘மாமனிதன்’ படம் உருவாகியுள்ளது.

தென்மேற்கு பருவக் காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இயக்குநர் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

ராதாகிருஷ்ணன்’ என்ற விஜய் சேதுபதி தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் ஆட்டோ டிரைவாக இருக்கிறார். மனைவி சாவித்திரி’ என்ற காயத்ரியுடனும், மகன், மகளுடன் வசதி குறைந்த வாழ்க்கை என்றாலும் நிம்மதியாக இருக்கிறார்.

அந்த நிம்மதிக்கு பங்கம் விளைவிப்பதற்காகவே ஒரு நாள் ரியல் எஸ்டேட் அதிபர் என்ற போர்வையில் ஷாஜி அந்த ஊருக்குள் வருகிறார். வந்த வேகத்தில் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி, அதை பிளாட் போட்டு விற்பனை செய்யத் துவங்குகிறார்.

விஜய் சேதுபதி வாழ்க்கையில் மேலும் முன்னேற விரும்புகிறார். இதனால் ஊருக்குள் தனக்கிருக்கும் நல்ல பெயரைப் பயன்படுத்தி ஊர் மக்களிடம் ஷாஜியின் இடத்தைப் பற்றிச் சொல்லி அந்த இடத்தை வாங்குவதற்கு புரோக்கர் வேலையை செய்கிறார் விஜய் சேதுபதி.

முன் பணமாக பல லட்சங்களைப் பெற்றுக் கொண்ட ஷாஜி, பத்திரப் பதிவுக்கு முதல் நாள் ஊரைவிட்டே பணத்துடன் ஓடி விடுகிறார். பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் விஜய் சேதுபதியைத் தேடுகிறார்கள்.

அவர்கள் கைகளிலும், போலீஸிடமும் மாட்டிக் கொள்ளாமல் ஷாஜியைத் தேடிக் கண்டுபிடித்து பணத்தைப் பெற்று வந்து பிரச்சினையை முடிக்க விஜய் சேதுபதி நினைக்கிறார். இதற்காக ஷாஜியின் சொந்த ஊரான கேரளாவின் ஆழப்புழாவுக்கு வருகிறார் விஜய் சேதுபதி.

அங்கே ஷாஜி இன்னும் வராததால் அவர் வரும்வரையிலும் காத்திருந்து ஆளைப் பிடிக்க நினைத்து அங்கேயே ஒரு வேலை பார்க்கத் துவங்குகிறார் விஜய் சேதுபதி. இங்கே பண்ணைப்புரத்தில் அவரது மனைவி மகள், மகனுடன் சோத்துக்கே கஷ்டப்படுகிறார். இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

விஜய் சேதுபதி ஒரு அப்பாவியான கிராமத்து இளைஞனை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார். நேர்மையாக இருக்க வேண்டும், பாசமாகப் பேச வேண்டும்.. அன்பாகப் பழக வேண்டும். மனிதர்களை மனிதர்களாகப் பாவிக்க வேண்டும் என்று படிக்காத மேதை’யாக படம் முழுவதும் தன் நடிப்பால் ஆக்கிரமித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

ஆட்டோவில் வி்ட்டுச் சென்ற நகைகளைத் திருப்பிக் கொடுக்க அவர் படும் பாடும், காயத்ரியை பார்த்தவுடன் உள்ளுக்குள் லைட் எரிவதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமலேயே நாகரீகத்தைப் பேணுவதும். காயத்ரியின் அண்ணன் தன்னைத் தவறாகப் பேசியதைக் கண்டு கோபமடைந்து அடிக்கப் பாய்வதும், காயத்ரியை வீடு தேடிச் சென்று தன்னுடன் வரும்படி அழைப்பதுமாய் முதல் பாதியிலேயே நம் நெஞ்சாங்கூட்டில் அமர்ந்துவிட்டார் விஜய் சேதுபதி.

ஷாஜியின் அம்மாவுடன் பக்குவமாக தன் கதையைச் சொல்வதும்.. தன் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள சூப்பர்வைஸருடன் இனிமையாகப் பேசுவதும், ஜூவல் மேரியின் மகள் மீது அவர் கொள்ளும் பாசமும் இன்னொரு பக்கம் விஜய் சேதுபதியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை உயர்வாக்கிவிட்டது.

அழியப் போகும் உடலுடன் திரும்பி சந்திக்கும் ஷாஜியிடம் “நீ செஞ்சது தப்புண்ணே” என்று சொல்லும் அந்தக் காட்சியிலும், “என் பிள்ளைகளுக்கு இப்போது புண்ணியத்தை சேர்க்குறேன்” என்று சொல்லுமிடத்திலும் விஜய் சேதுபதி ‘மாமனிதனாக’ உயர்ர்ந்துவிடுகிறார்.

சிறந்த இயக்குநர்கள் கைகளில் சிறந்த நடிகர்கள் கிடைத்தால் அவர்களுக்கே தெரியாத நடிப்பெல்லாம் வெளியில் வரும் என்பார்கள். அது இங்கே விஜய் சேதுபதிக்கு அவருடைய குருநாதரான சீனு ராமசாமியால் கிடைத்திருக்கிறது. பாராட்டுக்கள் இருவருக்கும்..!

குரு சோமசுந்தரம் ஒரு இஸ்லாமிய நண்பராக மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகவும், நட்புக்கு இலக்கணமாகவும் வாழ்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி பற்றி அவருடைய மனைவி, மகனிடம் பேசும் அந்த ஒரு காட்சியிலேயே மனதை நெகிழ வைத்திருக்கிறார் குரு சோமசுந்தரம்.

நாயகியான காயத்ரி தன் வயதைத் தாண்டிய கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார். “இதெல்லாம் தப்பு மாமா…” என்று துவக்கத்திலேயே விஜய் சேதுபதியை தடுப்பதும், குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் விஜய் சேதுபதியிடம், “இன்னிக்கு வீட்டுக்கு வெளியிலேயே தூங்கு” என்று சொல்லி முகத்தில் அடித்தாற்போல் சொல்லி கதவைச் சாத்தும் சராசரி மனைவியாக தன் கேரக்டருக்கு சிறப்பு செய்திருக்கிறார் காயத்ரி.

கேரளாவில் வயதுக்கு வந்த மகளோடு டீக்கடை நடத்தும் ஜூவல் மேரியின் அம்மா என்கிற பொறுப்பும், அவரது மகள் அனைகாவின் அந்த வயதுக்குரிய பிரச்சினைகளையும் ஒரு காட்சியிலேயே காண்பித்து அசர வைக்கிறார் இயக்குநர். ஜூவல் மேரியின் பல குளோஸப் காட்சிகள் “யார் இந்த அம்மணி..?” என்று ரசிகர்களை தியேட்டரிலேயே கூகிளாண்டவரை தேட வைத்திருக்கிறது.

மலையாளத்தின் மாபெரும் நடிகையான கே.பி.ஏ.சி.லலிதா தனது கடைசி படத்தில் உயிரைவிடுவதுபோலவே நடித்திருப்பது சாலப் பொருத்தமாகிவிட்டது. தனது மகன் செய்யும் தவறுகளை ஒத்துக் கொள்வதுபோல அவர் பேசும் பேச்சு “அடப் பாவமே” என்று நம்மையே சொல்ல வைக்கிறது.

விஜய் சேதுபதியின் மகளாக நடித்துள்ள மானஷ்வி வரும் காட்சிகளிலெல்லாம் குட்டிக் கவிதைபோல இருக்கிறது. சரவண சக்தி, இன்ஸ்பெக்டராக நடித்த தங்கவேலு, கேரளாவில் சூப்பர்வைஸராக நடித்தவர் என்று அனைத்து கதாபாத்திரங்களுமே தங்களது இருப்பை நிலை நாட்டியிருக்கிறார்கள். நல்லவர்போல் நடித்து கள்ளத்தனம் செய்யும் ஷாஜியின் நடிப்பும், கேரக்டர் ஸ்கெட்ச்சும் எதிர்பாராதது. அதேபோல் அவரது முடிவும்தான்..!

இது சீனு ராமசாமியின் படம்தான் என்று சொல்தற்கு படத்தில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கிராமத்து மனிதர்களின் எளிய பேச்சுக்கள்.. கதாபாத்திரங்களின் குண நலன்கள்.. நல்ல போலீஸை காட்டியிருப்பது.. படிப்பு, படிப்பு என்று படம் முழுவதும் அனைத்து ரீல்களிலும் பிள்ளைகளுக்கு படிப்புதான் முக்கியம் என்பதை உணர்த்தியிருப்பது என்று இது தனது படம்தான் என்று சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பானது. பண்ணைப்புரத்தை அக்குவேறு, ஆணிவேறாக காண்பித்திருக்கிறார். கிராமத்தின் ஏரியல் ஷாட்கள் முதல், வைட் ஷாட்கள், இரவு நேரக் காட்சிகள், கேரளாவின் ஆலப்புழையின் படகு வீடுகள்.. அந்த அழகு பிரதேசம், காசியின் சாம்ராஜ்யம், இரவு நேர பிரயாகை நதிக் கரையோர கொண்டாட்டங்கள், காவி துறவிகளின் கடவுள் வணக்கங்கள் என்று படம் முழுவதும் ஒளிப்பதிவாளர் தனித்தே தெரிகிறார்.

இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் பாடல்களைவிடவும் பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியிருப்பது போல தெரிகிறது. சீனு ராமசாமி எடுத்துக் கொடுத்திருக்கும் மாண்டேஜ் காட்சிகளுக்கேற்ப இசையையும், பாடல்களையும் பொருத்தியிருக்கும் இசைஞானிக்கு நமது பாராட்டுக்கள். பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்..!

படத்தின் துவக்கத்தில் வரும் முதல் 20 நிமிடக் காட்சிகளே இந்தப் படத்தின் தன்மையைக் காட்டிவிட்டது. மகளிடம் தனது கதையைச் சொல்வதாக துவங்கும் இந்தப் படம் கடைசியாக “மகளைப் பார்க்கப் போகிறேன்” என்று சொல்லி முடிப்பதிலும் ஒரு கவிதைத்தனம்தான் தெரிகிறது.

என்னதான் பிரச்சினையென்றாலும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து ஓடிய மனிதனை எப்படி மாமனிதனாக ஏற்பது என்கிற கேள்வி பலரிடத்திலும் உள்ளது.

பிரச்சனைக்குப் பயந்து ஊரை விட்டு ஓடிய ஒருவன் சம்பாதிப்பதும், அதைக் குடும்பத்திற்கு அனுப்புவதும் மட்டுமே ஒருவனை மாமனிதன் ஆக்கிவிடுவதில்லை. சிலுவையைச் சுமந்தவர், சிலுவையைத் தந்தவரின் காலில் விழும் அடிமைத்தனம்போல கிளைமாக்ஸ் காட்சி இருப்பதென்னவோ உண்மைதான்.

ஆனால், இதற்கான காரண, காரியங்களை இறுதிக் காட்சியில் தன்னால் முடிந்த அளவுக்கு நியாயப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். “இப்படியொரு கேரக்டர் கொண்ட ஒரு மனிதனின் கதை இது…” என்று சொல்லாமல் சொல்லி ஒரு சிறுகதையை நிறைவு செய்வதை போல படத்திற்கு முடிவுரை எழுதியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால் உண்மையில் விஜய் சேதுபதியைவிடவும் இந்தக் குடும்பத்திற்காக அதிகம் கஷ்டப்பட்டிருப்பது நாயகி காயத்ரிதான் என்பது தெள்ளத் தெளிவு.. “மாமனுஷி’ என்று சொல்ல வேண்டிய இடத்தில் ‘மாமனிதன்’ என்று சொல்லிவிட்டாரே இயக்குநர்..?” என்கிற கோபமும் திரை ரசிகர்களுக்கு ள்ளது.

இருப்பினும் பிள்ளைகளை வளர்க்கப் பெற்றவர்கள் படும் பாடுகளையும், படிப்பின் அவசியத்தையும், மதம் தாண்டிய நட்பின் ஆழத்தையும் மிக அழகாக கிராமத்து வாசனையோடு தூவிச் சென்றிருக்கும் இந்தப் படம் அனைவரும் அவசியம் காண வேண்டிய படம்.

மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 4 / 5

- Advertisement -

Read more

Local News