Friday, April 12, 2024

லாபம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் எஸ்.பி ஜனநாதனனின் இறுதிப் படமாக லாபம் இருக்குமென்பது யாரும் எதிர்பாராத ஒன்று. பாட்டாளி வர்க்க இயக்குநருக்கு ஒரு நினைவஞ்சலி..!

லாபம்..! பெரு முதலாளிகளின் லாபத்தில் எளியவர்களின் உழைப்பும், இயலாமையும் இருக்கிறது. இதை கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது அல்லது உரிமை இருக்கிறது என்பதே மறைக்கப்படுகிறது என்பதை கம்யூனிச குரலில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன்.

பெருவயல் ஊரில் விவசாய சங்கத் தலைவராகும் விஜய் சேதுபதிக்கு எதிர்திசையில் நிற்கிறார் ஜெகபதி பாபு. விஜய் சேதுபதிக்கு விவசாயிகளை ஒன்றிணைத்து கூட்டு விவசாயம் செய்ய வேண்டும். அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வை உயர்த்த வேண்டும் என்பது லட்சியம்.

அதற்கு நேர் எதிராக விவசாய நிலங்களை வளைத்துப் போட்டு அதில் ஒரு தொழிற்சாலையைக் கொண்டு வரவேண்டும் என்பது ஜெகபதி பாபுவின் ப்ளான். 

ஜெகபதி பாபுவை விஜய் சேதுபதி வென்று எப்படி லட்சியத்தை அடைகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

தன்னை நம்பி ஒப்படைக்கும் கதாப்பாத்திரத்திற்கு 100% மரியாதை கொடுத்து அதை திறம்பட செய்வது விஜய்சேதுபதியின் வழக்கம். அதை லாபத்திலும் சரியாகச் செய்திருக்கிறார்.

வில்லனாக வரும் ஜெகபதி பாபு வெகுவாக ஈர்க்கிறார். முதலாளித்துவத்தின் கோர முகத்தை தன் நடிப்பில் காட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் அனைவருமே நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ஸ்ருதிஹாசன் நடனக் கலைஞராக வந்து நடனம் மட்டும் நன்றாக ஆடியிருக்கிறார். சமூகப் புரட்சிக்கு கலை ஒரு நல்ல வடிவம் என்பதை ஸ்ருதிஹாசன் கேரக்டரை வைத்து வடிவமைத்துள்ளார் இயக்குநர். அது ஓரளவு பயன்பட்டிருக்கிறது. சாய் தன்ஷிகாதான் படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளார். ஏனைய கதாப்பாத்திரங்கள் எல்லோருமே கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்கள்.

டி.இமான் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். பின்னணி இசை ஓரளவு பரவாயில்லை. ஒளிப்பதிவில் ராம்ஜி நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார். கேமரா கோணங்கள் எல்லாமே ரம்மியம். படத்தின் முன் பாதியில் கொஞ்சம் நீளத்தைக் குறைக்க எடிட்டர் முயற்சித்திருக்கலாம்.

திரைக்கதையில் ஆங்காங்கே சிறு தொய்வு தெரிந்தாலும் படம் பேச வரும் செய்தி மிக முக்கியமானது என்பதால் அவற்றை மன்னிக்கலாம்.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் என்ற பெயர்களும்.. அவர்களின் தத்துவங்களும் படித்தறிய கொஞ்சம் சிரமம் என்றாலும் அது மானுட வாழ்விற்கு அவசியம் தேவை. அதை நன்றாக உணர்ந்த எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் சிந்தனைகளை எளிமையாக புரிய வைத்துள்ளார்.

லாபம் சில சமரசங்களை ஏற்றுக் கொண்டு அவசியம் பார்க்க வேண்டிய படம்.

மதிப்பெண் : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News