கிராமத்து கதைகளில் கிரைம் கலந்த திரைக்கதையோடு ஒரு படம் பார்த்து வெகுநாட்களாகிவிட்டது. அந்தக் குறையை ஓரளவு தீர்த்திருக்கிறது ‘கருப்பங்காட்டு வலசு’ திரைப்படம். முழுக்க, முழுக்க மண் மனம் மாறாமல் படத்தினை எடுத்திருக்கிறார்கள்.
‘கருப்பங்காட்டு வலசு’ என்ற ஊரில் மொத்தமே 300 பேர் தான் வசிக்கிறார்கள். நாகரீகத்தின் சாயல் அறவே படாத அந்த ஊரில் நிறைய அடிப்படைப் பிரச்சனைகள் இருக்கின்றன. ஊரில் அவ்வப்போது திருட்டும் நிறைய நடக்கும்.
அதைத் தீர்த்து வைக்க ஊர் நாட்டாமையின் மகளான காந்திமதி என்னும் நீலிமா இசை முனைகிறார். அவர் டைவர்ஸ் ஆனவர் என்பது பின் கதை.
படத்தின் நாயகன் கரகாட்டம் ஆடுபவர். அவருக்குத் துணையாக அவரின் அக்கா மகள் கூடவே இருக்கிறார். இருவருக்கும் பக்கா கெமிஸ்ட்ரி.
வேறோர் திசையில் சாதிவெறி பிடித்த ஒரு அப்பா மகன். அவர்களுக்கு ஒரு மகள். அந்தப் பெண்ணுக்கு காந்திமதி வீட்டில் வேலை செய்யும் இளைஞன் மீது காதல். இப்படி ஒரு ஊருக்குள்ளேயே பல பிரிவுகளாக கதைப் பயணிக்கிறது.
முதல் பாதியில் நாம் என்னப்பா இது என்ற சோர்வடையும் நேரத்தில் இடியென வருகிறது ஒரு ட்விஸ்ட். படத்தில் இரு பெண்கள், இரு ஆண்கள் என நான்கு பேர் இறக்கிறார்கள். இவர்கள் எப்படி இறந்தார்கள்..? யார் இவர்களைக் கொன்றார்கள்..? என்பதற்கான விடைதான் மொத்தப் படமும்.
முழுக்க முழுக்கப் படம் லைவாக இருக்கிறது. அதற்கான காரணம் படத்தின் லொக்கேசன். ஒரு நிஜ கிராமத்தை அப்படியே அதன் அழகியல் மாறாமல் பயன்படுத்தி இருக்கிறார்கள். வசனங்களில் கிராமத்தின் உயிர்ப்பு அப்படியே இருக்கிறது. இதற்காகவே இயக்குநர் செல்வேந்திரனைப் பாராட்டலாம்.
ஹீரோ எபினேஷர் தேவராஜ் நன்றாக நடித்திருந்தாலும் இன்னும் அவர் புகுந்து விளையாடி இருக்கலாம். அதற்கான இடம் படத்தில் நிறையவே இருந்தது. இனி அடுத்தடுத்தப் படங்களில் அதைச் செய்வார் என எதிர்பார்க்கலாம்.
நாயகி நீலிமா இசை அவரின் கேரக்டரை உள்வாங்கி சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். க்ளைமாக்ஸில் அவரது கேரக்டர் பகீர் அனுபவத்தை தருகிறது.
போலீஸாக வரும் ஜார்ஜ் விஜய் நெல்சன் தான் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார். மேலும் படத்தின் ஏனைய கேரக்டர்களில் மாரி செல்லத்துரை, அரியா, கெளரி சங்கர், ஜிதேஷ் டேனி ஆகியோர் நடித்துள்ளனர். யாரையும் பெரிதாக குறை சொல்ல முடியாது.
பின்னணி இசையில் இன்னும்கூட உயிர்ப்பு இருந்திருக்கலாம். ஒரு கிராமத்துக் கதையை கையில் எடுத்திருக்கும் பட்சத்தில் இசை அமைப்பாளர்கள் ஆதித்யா, சூர்யா அதற்காக உயிரை உருக்கி உழைத்திருக்க வேண்டாமா..?
கேமராமேன் நிறைய சிங்கிள் ஷாட்களை முயற்சித்திருக்கிறார். நல்ல விசயம்தான். ஆனால் சிங்கிள் ஷாட்களுக்கானத் தேவைகள் படத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. ஆனாலும், ஒளிப்பதிவில் ஒரு பேராற்றல் தெரிகிறது.
படத்திற்குள் நிறைய கேள்விகள் எல்லாக் கேரக்டர்களுக்கும் எழுந்து முடிவில் விடை கேட்பது போல… படம் முடியும்போது நமக்கும் முழுமையான விடை கிடைத்திருக்கலாம். இதில், இயக்குநர் சற்று தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
மொத்தக் கதைக் களமும் ஒரு கிராமத்திற்குள்ளே சுருங்கி விட்டதால் திரைக்கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்திருக்கலாம். நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும்.. ஒரு மண் வாசனையை வீசும் படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என்று ஏங்குபவர்களை, இந்தப் படம் நிச்சயமாக ஏமாற்றாது.