Monday, June 21, 2021
Home Movie Review கர்ணன் - சினிமா விமர்சனம்

கர்ணன் – சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் இதுவரையிலும் பேசப்படாத அரிய மனிதர்களின் கதைகளைப் பற்றிப் பேசும் படங்களில் மிக முக்கியமானதொரு இடத்தை இந்தக் ‘கர்ணன்’ படம் பிடித்துள்ளது.

படம் 1997-ல் ஆரம்பித்து 2007-ல் முடிகிறது. அப்போதைய வ.உ.சிதம்பரனார் மாவட்டத்தில் இருக்கிறது ‘பொடியன்குளம்’ என்ற கிராமம். முழுக்க, முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இந்தக் கிராமம் முற்றிலும் அந்நியப்பட்டிருக்கிறது. பக்கத்து ஊரான மேலூரில் வசிக்கும் வேறொரு சமூகத்தினர் இவர்களை இகழ்ச்சி செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

பொடியன்குளம் கிராமத்தில் பஸ் ஸ்டாப்பிங்கே கிடையாது. அனைவரும் மேலூர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்துதான் பஸ் ஏற வேண்டும். மேல் சாதீ, கீழ் சாதி என்ற சாதியப் பிரிவினை இந்த மேலூர் சாதிக்கார மக்களிடத்தில் அதிகமாக இருப்பதால் இருவரிடையேயும் பகையுணர்வு உண்டு.

இந்தப் பொடியன்குளத்தைச் சேர்ந்தவர்தான் ‘கர்ணன்’ என்னும் தனுஷ், அம்மா, அப்பா, அக்கா என்ற குடும்பத்துடன் இருப்பவருக்கு உற்ற தோழர் அவரது தாத்தா வயதான ‘ஏமராஜா’ என்னும் லால்.

இந்தக் கிராமத்தில் இருக்கும் இள வயதுக்காரர்களெல்லாம் துடிப்புடன் நாமும் மனிதர்கள்தான் என்ற எண்ணத்தில் இருக்க.. ஊர்ப் பெரியவர்களோ சுற்றுப்பக்க கிராமங்களில் வசிக்கும் மேல் சாதீ மக்களிடையே பணிந்து போய்தான் பிழைப்பை நடத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

சாதி வெறிபிடித்த கண்ணபிரான் என்னும் ‘நட்டி’ நட்ராஜ், அந்த மாவட்டத்துக்கு காவல்துறை கண்காணிப்பாளராக வந்து சேர்கிறார். இந்த நேரத்தில் அந்த ஊரில் பஸ்ஸை நிறுத்த வேண்டும் என்பதற்காக நாயகன் கர்ணன் கோபத்தில் செய்யும் அடிதடி அந்த ஊருக்குள் போலீஸாரை கொண்டு வந்து சேர்க்கிறது.

ஊர்ப் பெரியவர்களை அடித்து உதைக்கிறார் நட்டி நட்ராஜ். இதைத் தட்டிக் கேட்கப் போன கர்ணன் கோபத்தில் போலீஸ் ஸ்டேஷனையே சூறையாடிவிடுகிறார். இதனால் கோபப்படும் மாவட்ட போலீஸ் மொத்தமும் அந்த ஊரையே சூறையாடுகிறது.

இதற்காக கர்ணனை கைது செய்யத் துடிக்கிறார் நட்டி நட்ராஜ். கர்ணன் சிக்கினாரா..? இல்லையா…? என்பதுதான் மீதிக் கதை..!

கர்ணனாக தனுஷ். மீண்டும் ஒரு தேசிய விருது ரெடி என்று சொல்லும் அளவுக்கு தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சாதாரணமான தோற்றத்தில் கட்டிய கைலியுடன் ஊருக்குள் திரியும் அவர் எப்போதும் தனக்குள் ஒரு கனன்று கொண்டிருக்கும் தீயுடன் திரிகிறார்.

“உன்னைய அடிச்சே கொன்னுருவேன்…” என்று தனுஷ் தனது அம்மா, அப்பா, அக்காள், தாத்தா லால், ஊர்ப் பெரியவர்கள், நண்பர்கள் என்று அனைவரிடமும் கோபப்படுகிறார். அந்த அளவுக்கு வீரமான இளைஞனாக இந்தக் கர்ணனைக் காட்டியிருக்கிறார்கள்.

சாதிய ரீதியாக, அடிமையாக தன்னை யார் நடத்தினாலும் எதிர்க் கேள்வி கேட்பேன் என்ற தைரியமான இளைஞர் கதாபாத்திரத்தை அநாயசமாக செய்திருக்கிறார் தனுஷ்.

தன் கிராமத்து மக்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக அவர் ஓங்கி குரல் கொடுப்பதும்.. அந்தக் குரலுக்கு ஊது குழல்கள் வராதபோது அந்த ஊர் மக்களுக்கு அவர்களின் அடிமைத்தனத்தைக் குத்திக் காட்டிப் பேசுவதுமாக இன்றைய இளைய தலைமுறையின் மனோபாவத்தைக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறார் தனுஷ்.

தனக்குக் கிடைத்த வேலையைக் கூட தனது இன மக்களுக்காக தியாகம் செய்துவிட்டு அவர்களுக்காக ஒரு கொலையையும் செய்துவிட்டு தண்டனையை அனுபவிக்கும் அந்தத் தியாக கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பின் மூலமாக மிக, மிக நியாயம் சேர்த்திருக்கிறார் தனுஷ்.

ஒரு பக்கம் தனது சமூகம் பற்றிய கவலை.. இன்னொரு பக்கம் தனது காதலியுடனான பிரச்சினை.. இரண்டையுமே சக களத்தில் சந்தித்து நொடியில் புன்னகை சிந்தும் அந்த நொடியில் அகாசய நடிகன்டா நீ என்ற பெயரை தனுஷ் எடுக்கிறார்.

அவருடைய தோற்றமும், உடல் வாகுவும் தனுஷுக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். இது போன்ற கேரக்டர்களை மிக அலட்சியமாகத் தட்டித் தூக்கிவிடும் வகையில் தனது உடல் மொழியையும் பல காட்சிகளில் கொடுத்திருக்கிறார் தனுஷ். முக்கியமாக பஸ்ஸை அடித்து, உடைக்கும் காட்சியில் அவரது ஒட்டு மொத்த உடலும் சேர்ந்தே நடித்திருக்கிறது.

‘நட்டி’ நட்ராஜின் இறுதி நிமிடத்தில் தனுஷ் பேசும் அந்தக் கொலைவெறி வசனம்தான் அவரது நடிப்பின் உச்சக்கட்டம் என்றே சொல்லலாம். வெல்டன் தனுஷ். நிச்சயமாக அடுத்த வருடமும் தேசிய விருது உங்களுக்குத்தான்..!

அடுத்து மனதில் நிற்கும் கதாபாத்திரத்தைச் செய்திருப்பவர் மலையாள நடிகர் லால். அவரின் தோற்றமே இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது எனலாம். ‘ஏமராஜா’ என்ற பெயரில் இவர் ஏற்றிருக்கும் அந்தக் கேரக்டருக்கு இவரைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

தனுஷூடன் வயது, வித்தியாசம் பார்க்காமல் பழகுவதும்.. பேருந்தில் இருந்து கீழே விழுந்த தனுஷை சமாதானம் செய்யப் போய் அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு உண்மையை ஒப்புக் கொள்ளும் காட்சியில் தனுஷையே மிஞ்சிவிட்டார் லால்.

மிக, மிக யதார்த்தமான கதாபாத்திரமாக இதனைப் படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். தனது இறந்து போன மனைவியை நினைத்து அந்தப் பாடல் காட்சியில் உருகும்போதும், தனுஷை வேலைக்குப் போய் சேரும்படி கெஞ்சிக் கூத்தாடி அனுப்பி வைக்கும்போதும் அவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்கத்தக்கதாக மாறிவிட்டது. இறுதியில் தன்னைத் தானே தியாகியாக்கிக் கொண்டு ஊர் மக்களைக் காப்பாற்றும் அந்தத் தருணத்தில் இந்தப் படத்தின் மறக்க முடியாத ஒரு கேரக்டராகவே மாறிவிட்டார் லால். வெல்டன் ஸார்..

காதலியான ரெஜிஷா விஜயனின் துறுதுறு ஆட்டமும், பேச்சும், ஓட்டமும் இளம் காதலிகளைக் காட்டினாலும் சரியாக நடிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர். தனது அண்ணனுக்காக நியாயம் கேட்கப் போய் காதலனை கோபிப்பதும், அதே காதலனிடம் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டு “என்னை மன்னிச்சுக்கோ” என்று சொல்லவிட்டு கட்டிப் பிடிப்பதும் காதல் கவிதையாய் தனது கண்களால் நம்மைக் கட்டிக் கொள்கிறார் ரெஜிஷா. பாடல் காட்சிகளில் இவரது குளோசப் ஷாட்டுகள்தான் திரையை ஆக்கமிரக்கின்றன.

மேலும் சாதி வெறி பிடித்த எஸ்.பி.யாக நட்டி’ நட்ராஜ் வெறுமனே வார்த்தைகளாலேயே அடுத்து நடக்கப் போவதைச் சொல்லிக் காட்டுகிறார். தனது அதிகாரத் திமிரைவிடவும் சாதித் திமிரை போலீஸ் ஸ்டேஷனில் காட்டும்விதத்தில் ‘அம்மாடி’ என்று பயமுறுத்தியிருக்கிறார்.

யோகிபாபுவுக்கு குணச்சித்திர வேடம் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக அவரை தனுஷ் அடிக்கப் போக.. அதே அடி அவரது வீட்டில் அவரது அக்காள் லஷ்மி பிரியா மூலமாகத் தனுஷூக்குக் கிடைப்பதும் சுவையான திரைக்கதை. இந்தக் காட்சியில் மொத்த நடிப்பையும் கொட்டியிருக்கிறார் லட்சுமி பிரியா. இந்த நல்ல நடிகைக்கு ஏன் ஒரு நல்ல வாய்ப்பு இதுவரையிலும் கிடைக்கவில்லை என்பது தெரியவில்லை.

நண்பனா வில்லனா என்பதையே கண்டறிய முடியாத பக்கா சகுனியாக அழகம் பெருமாள்.. ஊர்ப் பெரிசுகளாக ஜி.எம்.குமார், மற்றும் சண்முகராஜன் இருவரும் தங்களது அனுபவ நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். போலீஸிடம் அடி வாங்கிய பின்பு தங்களது தயக்கத்தை உடைத்து தனுஷூக்கு ஆதரவுக் கரம் நீட்டும்போது இருவரும் மிளிர்கிறார்கள்.

லாலின் மதினியாக நடித்தக் கிழவியின் சில நிமிட காட்சி படத்திலேயே ஒரு கவிதையாக படிந்திருக்கிறது. மேலும் கெளரி ஜி.கிஷன், குதிரையோட்டும் சிறுவன், சுபத்ராவின் மகனாக நடித்த சிறுவன், மற்றும் ஊர்க்கார மக்கள் என்று அனைவருமே மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இயக்கத்திற்குப் பிறகு பாராட்டுக்குரியது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவுதான். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் தனது கேமிராவின் ஆதிக்கத்தினால் காட்சியமைப்புகளை சிறப்பாகக் காட்டி திரையையும் ஜொலிக்க வைத்திருக்கிறார்.

இடைவேளை போர்ஷனில் அடுத்தடுத்து காட்டப்படும் காட்சிகளிடையே கேமிராவின் கோணங்களும், பல்வேறு காட்சிகளும், இதற்காகவே இசைக்கப்பட்ட இசைக் கோர்வையும் ஒரு சேர அப்போதே கை தட்டலை பெற்றுவிட்டது.

சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘மஞ்சணத்திப் புராணம்’, ‘தட்டான் தட்டான்’ என்ற மூன்று பாடல்களுமே ரிலீஸுக்கும் முன்பாக மெகா ஹிட்டடித்திருக்கின்றன.

‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலில் பல கிராமத்திய மனிதர்களின் முகங்களைக் காட்டி நம்மை ஈர்த்திருக்கிறார் இயக்குநர். அந்தப் பாடல் வரிகளை அவர்கள் அழுத்தமாகப் பாடும் காட்சி மனதை உருக்குகிறது.

இதைவிடவும் பின்னணி இசை அபாரம். இடைவேளை பிளாக்கிலும், இறுதிக் காட்சியிலும் அவர் காட்டியிருக்கும் பின்னணி இசை அந்தக் காட்சிகளை நமது மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிறது. பாராட்டுக்கள்..!

மேலும் இன்னொரு பாராட்டுக்குரியவர்.. கலை இயக்குநர் ராமலிங்கத்தின் கடும் உழைப்பு. 1996-களின் தூத்துக்குடி மாவட்ட கிராமத்தையும், போலீஸ் ஸ்டேஷனையும் அப்படியே வடிவமைத்து கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள். சண்டை காட்சிகளை வடிவமைத்தவரையும் பாராட்ட வேண்டும். ஆனால் நீளம்தான் அதிகம். அதைச் சற்றுக் குறைத்திருக்கலாம்.

படத்தின் வசனங்களில் அரசியலை வைப்பார்கள். ஆனால் அரசியலிலேயே வசனங்களைத் துவைத்து எடுத்திருப்பது இந்தப் படத்தில்தான். ‘எப்படியாவது பொழச்சுக்கணும்னு நாம நினைக்கறதாலதான், அவன் நம்மளை ஏறி மிதிக்கிறான்..” என்றும், “அவன் பஸ்ஸை அடிச்சதுக்காக அடிக்கலய்யா.. நான் நிமிந்து பார்த்ததுக்காக அடிச்சான்” என்று தனுஷிடம் ஊர்ப் பெரிசுகள் சொல்லி அழுவதும் இதயத்தைத் தொடும் வசனங்கள்..!

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது முதல் படமான பரியேறும் பெருமாள்’ படத்தில் இரு சாதியினரிடையே இருக்கும் முரண்பாடுகளை பேசியே தீர்த்துக் கொள்ளலாம் என்று மிக உயர்வான அறிவுரையை வழங்கியிருந்தார். அது இரு தரப்பினருக்குமே பிடித்திருந்தது.

இப்போது இந்தப் படத்தின் வாயிலாக நம் எதிரி எந்த ஆயுதத்தைக் கையில் எடுக்கிறானோ அதே ஆயுதத்தை நாமும் எடு்த்தாக வேண்டும் என்று போதித்திருக்கிறார். இரண்டாவது படத்திலேயே ஏன் இந்த முரண்பாடு என்று தெரியவில்லை. முதலில் சமாதானத்திற்கு யார் கொடியைப் பிடிப்பது என்பது பிரச்சினையல்ல. சமாதானமாகி போவதுதான் பிரச்சினை. ஒருவேளை நடந்த சம்பவத்தைப் படமாக்கியிருக்கிறேன். அதனால் என்று சொல்வாரோ என்னவோ..!

படத்தில் பல குறியீட்டுச் சம்பவங்களைத் தொகுத்தளித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

அனைத்து சாதியினரும் தங்களது குல வழக்கப்படி வணங்கும் தங்களது வீட்டில் இளம் வயதில் மரணமடையும் பெண் குழந்தைகளை தெய்வமாக வணங்குவது.. காலம்காலமாக நாட்டார் தெய்வ வழிபாடு என்பதை விதந்தோதியது. அது தொடர்பான சாமி ஏறுதல்’ என்ற வழிபாடு.. வருடத்திற்கு ஒரு முறை வீரனைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை என்று அந்தக் காலத்திய அவர்களது பழக்க வழக்கங்களையும் சேர்த்தே வழங்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முற்பாதியில் அடிக்கடி காண்பிக்கப்படும் கால் கட்டப்பட்ட கழுதை.. சிறுவன் ஓட்டி வரும் குதிரை.. போலீஸ் ஸ்டேஷனில் ஊர்ப் பெரியவர்களை அடித்து உதைக்கும்போது ஒரு பட்டுப்பூச்சி அடங்கி ஒடுங்குவது.. அதே போலீஸ் ஸ்டேஷனை தனுஷ் துவம்சம் செய்யும்போது சிரித்தபடி தென்படும் அம்பேத்கரின் புகைப்படம்.. பேருந்து நிற்காமல் செல்வதற்கு கண்டக்டர் சொல்லும் காரணம்.. தலையில்லாத சுவர் ஓவியம்.. அது பின்பு கடைசியில் ஏமராஜாவாக காட்சியளிப்பது கண் கொள்ளாக் காட்சி.. தலையில்லாத புத்தரின் சிலை, பெயரில் ஒளிந்திருக்கும் சாதி வெறி.. என்று படம் நெடுகிலும் குறியீடுகள் நிறையவே இருக்கின்றன.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய குறைகள் என்று பார்த்தால் அது கதாபாத்திரங்கள் பேசும் நெல்லை வட்டார மொழி. அதனை சட்டென்று புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. இரண்டு, படத்தின் வெகுவான நீளம். படத்தின் முற்பாதியில் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைக் கலாச்சாரத்தைச் சொல்வதாக நிறைய காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர். இதில் கொஞ்சம் கத்திரியை போட்டிருக்கலாம். இந்தக் குறையை இரண்டாம் பாகத்தில் நேர் செய்திருக்கிறார் இயக்குநர். அது ஒரே நேர்க்கோட்டில் கச்சிதமாகச் சென்று முடிகிறது.

ஒரு சமூகமாகக் கிளர்ந்தெழுந்து போராடினால்தான் வெற்றி பெற முடியும் என்பதை தமிழ்ச் சினிமாவின் வழக்கமான நாயக பிம்பத்திற்காக நாயகனை முன்னிறுத்தி கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

நமது உரிமைகளுக்காக யாரிடமும் வெறுமனே கெஞ்சி கொண்டிருந்தால் மட்டும் அது கிடைத்துவிடாது. தைரியமாக எதிர்த்துப் போராட வேண்டும். போராடினால் மட்டுமே அந்த உரிமை அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்பதைத்தான் இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

நிச்சயமாக இந்தக் ‘கர்ணன்’ பல விருதுகளுக்குத் தகுதியானவன்தான்.

Rank : 4.5 / 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..?

நடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும்...

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘இன் த நேம் ஆப் காட்’ Web Series

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி  சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை  ஏராளமான நட்சத்திரங்களை வைத்து...

சென்னை திரும்பிய தனுஷ் – கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.

Spotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…!

இன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.