ஜெயலலிதா சமாதியில் கங்கனா ரணாவத் அஞ்சலி..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகியுள்ள ‘தலைவி’ படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனியும், சசிகலாவாக மதுபாலாவும் நடித்துள்ளனர். மேலும் பூர்ணா, மற்றும் தமிழ்த் திரையுலகத்தின் முக்கிய நடிகர், நடிகைகள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

விப்ரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் இந்த வாரம் வெளியாகவிருப்பதை முன்னிட்டு படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருக்கும நடிகை கங்கனா ரணாவத் இன்று காலை செல்வி ஜெயலலிதாவின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கூடவே கலைஞர் சமாதியில் மலர் வளையம் வைக்கவும் தவறவில்லை.

இந்த நிகழ்ச்சியின்போது படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் படக் குழுவினர் அனைவரும் அவருடன் சென்றிருந்தனர்.