சிறந்த ஒளிப்பதிவுக்காகவும், சிறந்த இயக்கத்திற்காகவும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள பாலு மகேந்திரா, “எனது நாற்பதாண்டு கால சினிமா பயணத்தில் நான் நினைத்த மாதிரி மூன்று படங்களைத்தான் என்னால் உருவாக்க முடிந்தது…” என்று சொல்லியிருக்கிறார்.
“விருதுகளைப் பொருத்தவரைக்கும் கலைஞர்களுக்கு அவைகள் ஒரு அங்கீகாரம். அவ்வளவுதான். அதனால்தான் அந்த விருதுகள் குறித்து நான் என்றும் கவலைப்படுவதில்லை. என்னுடைய ‘ஜுலி கணபதி’ திரைப்படம் விருதுக்கு அனுப்பப்படவே இல்லை. அது குறித்து நான் கவலைப்பட்டதேயில்லை” என்று கூறி இருக்கிறார் அவர்.
ஆரம்ப காலம் முதலே தனது கதைகளுக்கான நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரே தவிர நடிகர்களுக்காக பாலு மகேந்திரா கதை எழுதியதே இல்லை.

அதே போன்று தமிழ்ப் படங்களில் இடம் பெறும் பாடல் காட்சிகளிலும் எப்போதும் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. “எந்த ஊரிலாவது நமது படங்களில் வருவதுபோல காதலர்கள் ஒரே மாதிரி ஸ்டெப் போட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்களா…? அவர்கள் போதாதென்று ஒரே மாதிரி உடையணிந்த முப்பது, நாற்பது பெண்கள் வேறு கூடவே ஆடுவார்கள்..” என்று தமிழ்ப் படப் பாடல் காட்சிகள் குறித்து விமர்சனம் செய்துள்ள பாலு மகேந்திரா கோபிச்செட்டிப்பாளையத்தில் ஆரம்பித்து சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சிகளைத் தொடரும் அபத்தத்தில் தனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை என்று பல முறை தெரிவித்திருக்கிறார்.
பாலுமகேந்திராவுக்கு மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருவருமே பிடித்தமான நடிகர்கள். மம்முட்டியுடன் ‘யாத்ரா’ படத்தில் பணியாற்றிய அவர் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற விரும்பினார். அதற்கான பேச்சுவார்த்தைகூட நடந்தது. ஆனால் அது கை கூடவில்லை.
தமிழ் நடிகர்களில் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். ‘ஒரு அனாயாசமான கலைஞன்’ என்று கமலைக் குறிப்பிடும் பாலு மகேந்திராவிற்கு மிக நெருக்கடியான ஒரு நேரத்தில் கமல் கை கொடுத்தார்.

‘மறுபடியும்’ படம் முடிந்தவுடன் உச்சக்கட்ட பண நெருக்கடியில் இருந்தார் பாலு மகேந்திரா. பலரிடம் கேட்டும் பணம் கிடைக்கவில்லை. இறுதியாக கமலிடம் கேட்கலாம் என்று அவரைத் தேடிப் போனார்.
உலக சினிமா தொடங்கி எல்லா விஷயங்களையும் பேசிய கமல்ஹாசனிடம் தான் அவரைப் பார்க்க வந்தது எதற்காக என்ற விஷயத்தை பாலு மகேந்திராவால் சொல்ல முடியவில்லை. தனது பிரச்னை பற்றி கமல்ஹாசனிடம் பேச வாய்ப்பே கிடைக்காத நிலையில் பெரும் ஏமாற்றத்துடன் பாலுமகேந்திரா கிளம்பியபோது “ஒரு நிமிடம் இருங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளே சென்ற கமல்ஹாசன் திரும்பியபோது அவரது கையில் ஒரு பெரிய கவர் இருந்தது. கமல்ஹாசனிடம் பாலு மகேந்திரா கேட்க நினைத்த தொகையைவிட பல மடங்கு அதிகமான தொகையை அவரிடம் தந்த கமல்ஹாசன் “எனது ராஜ்கமல் நிறுவனத்துக்கு நீங்க ஒரு படம் பண்ணித் தரணும். அதுக்கான முன் பணம்தான் இது…” என்று சொன்னார். அப்படி உருவான திரைப்படம்தான் ‘சதி லீலாவதி’.
“உதவி பெறுகிறோம் என்ற எண்ணம் எனக்குள் வராதபடி மிகவும் கவுரமாக என்னை கமல் நடத்தினார்” என்று அந்த நிகழ்வைப் பற்றி மிகுந்த நெகிழ்ச்சியுடன் பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.
இளையராஜாவையும், அவரது இசையையும் மிகவும் நேசிக்கும் பாலு மகேந்திரா, அவரைத் தவிர வேறு யாரையும் எனது படத்தில் பயன்படுத்த மாட்டேன் என்று சூளுரைத்தவர்.

“மணிரத்னம், பாலசந்தர் எல்லாம் இளையராஜாவைவிட்டு ரஹ்மானுக்கு மாறிய பிறகும் நீங்கள் மட்டும் ஏன் மாறவில்லை… ரஹ்மானின் இசையில் உங்களுக்கு உடன்பாடில்லையா…?” என்ற கேள்விக்கு பாலுமகேந்திரா சொன்ன பதில் முக்கியமானது.
“எனக்கு இளையராஜாவை இப்போதும் பிடிக்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதனை இப்போதும் பிடிக்கிறது. அதேபோல்தான் சலீல் சௌத்ரி. எனக்கு இது போதும்…” என்று பதிலளித்திருந்தார் அவர்.
ரஹ்மானைப் பற்றிய கேள்விக்கு அப்படி பதில் சொன்ன பாலு மகேந்திராதான் ‘ரோஜா’ திரைப்படத்தில் ரகுமானுக்கு தேசிய விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர் என்பது மிகச் சிலரே அறிந்த ஒரு செய்தி.
தேசிய விருதுக்கான போட்டியில் ‘ரோஜா’ படம் கலந்து கொண்டபோது அந்தத் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் பாலுமகேந்திரா. அந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான பிரிவில் இரண்டு பேர் சமமாக ஓட்டு வாங்கினார்கள். ஒருவர் இளையராஜா, இன்னொருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
தேர்வுக் குழுவின் தலைவர் என்ற முறையில் பாலுமகேந்திராவுக்கு இரண்டு ஓட்டுகள். இருவரும் சம ஓட்டு வாங்கிய நிலையில் பாலுமகேந்திரா யாருக்கு ஓட்டளிக்கிறாரோ அவருக்குத்தான் தேசிய விருது கிடைக்கும்.
“இரண்டுமே சிறந்த இசை. ஆனால், நான் யாருக்கு ஓட்டளிப்பது..? இளையராஜா ஒரு லெஜென்ட். அவருக்கு சரிசமமாக வந்து நிற்கிறான் ஒரு 22 வயது பையன். அவன் இனி எவ்வளவோ விருது வாங்கலாம். ஆஸ்கர்கூட வாங்கலாம். ஆனால் முதல் படத்துக்கு கிடைக்கிற அங்கீகாரம் தனியானது அல்லவா…? ஆகவே, நான் ரஹ்மானுக்கு ஓட்டளித்தேன்.
சென்னை வந்ததும் அதனை இளையராஜாவிடம் சொன்னேன்… அவர் எனது கையைப் பற்றி குலுக்கியபடி ’சரியாக செய்தீங்க’ என்று என்னைப் பாராட்டினார்…” என்று அந்தச் சம்பவம் பற்றி கூறியிருக்கிறார் பாலு மகேந்திரா.

பாலுமகேந்திராவின் சீடர்களான பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம் ஆகிய பலரும் தமிழ்ப் பட உலகம் பெருமைப்படுகின்ற அளவிலே பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்தவர்கள். இதில் பாலு மகேந்திராவின் முக்கியமான சீடரான பாலாவிற்கும், அவருக்கும் இருந்த உறவு மிக வித்தியாசமான உறவு.
பாலாவை பாலுமகேந்திராவிடம் சேர்த்துவிட்டவர் கவிஞர் அறிவுமதி. அப்போது அறிவுமதியும் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தினமும் தன்னோடு பாலாவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வார் அறிவுமதி. படப்பிடிப்பிற்கு போனவுடன் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார் பாலா.
இப்படியே மாதங்கள் பல கடந்ததற்குப் பின், ஒரு நாள் பாலு மகேந்திராவின் வீட்டுக்கு பாலாவை நேரடியாக அழைத்துச் சென்ற அறிவுமதி, “இவனை உங்ககிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்த்துக்கணும்” என்று சொன்னபோது அவரை ஏற இறங்க பார்த்த பாலுமகேந்திரா “இதுக்கு முன்னாடி யாருகிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தே..?” என்று கேட்க, பாலா சொன்ன பதில்தான் நகைச்சுவையின் உச்சம். “உங்ககிட்டதான்…!” என்று பதிலளித்தார் பாலா.

பாலு மகேந்திராவுக்கே தெரியாமல் ஐந்து படங்கள் அவரிடம் அசிஸ்டென்டாக வேலை பார்த்த பாலாவை பின்னர் படிப்படியாக, படம் படமாக வளர்த்து இணை இயக்குநர் ஆக்கினார் அவர்.
தனது வாழ்நாளில் ஒரு எஸ்டேட் வாங்க வேண்டும் என்றோ… ஒரு பென்ஸ் கார் வாங்கிவிட வேண்டும் என்றோ… வங்கிக் கணக்கில் இரண்டு மூன்று கோடிகளை சேர்த்துவிட வேண்டும் என்றோ பாலு மகேந்திரா ஆசைப்பட்டதில்லை. தனது எண்ணத்தில் இருந்த இரண்டு மூன்று கதைகளை படமாக்கிவிட வேண்டும் என்று மட்டுமே அவர் ஆசைப்பட்டார்.
“நாம் இரானியப் படங்களையும், கொரிய, ஜப்பானியப் படங்களையும் பார்த்து வாய் திறந்து வியப்பதைப் போல, இரானியர்களும், கொரியர்களும், ஜப்பானியர்களும் வியந்து பார்க்கின்ற அளவில் தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்” என்று அவர் பெரிதும் விரும்பினர்.

வட இந்தியாவில் பால்கே விருது வழங்குவது போல் தமிழ்நாட்டில், தமிழ் சினிமாவின் பிதாமகன் நடராஜ முதலியார் பெயரில் விருது வழங்கப்பட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
பழைய சினிமா படங்களைப் பாதுகாக்கவும் பல அரிய படங்களின் இழப்பை தவிர்க்கவும் ஒரு ஆவண காப்பகம் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.
அந்த அவரது ஆசைகள் நிறைவேறும் முன்னரே இயற்கை, ஈவு இரக்கமின்றி அந்த இணையில்லாத கலைஞனை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது .