கலகத் தலைவன்- சினிமா விமர்சனம்

கார்ப்பரேட் ரகசியங்களை வெளியில் விற்கும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படம்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி திரைக்கதை இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த ‘கலகத் தலைவன்’ படம் எப்படி இருக்கிறது?..

வஜ்ரா என்றொரு லாரி உற்பத்தி செய்யும் கம்பெனியின் சென்னை ப்ராஞ்சில் வேலை செய்கிறார் உதய்நிதி. மற்றவர்களுக்கு உதவும் சுபாவம் கொண்ட உதயநிதிக்கு, நிதி அகர்வாலின் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு காதலாக மாறும் தருணம்வரை செல்கிறது.

இன்னொரு புறம் வஜ்ரா கம்பெனியின் பல சீக்ரெட் விசயங்களை சிலர் வெளியில் போட்டி கம்பெனிக்கு விற்கிறார்கள் என்ற விசயம் வஜ்ரா மேனேஜ்மெண்ட்க்கு தெரிய வருகிறது. அவர்கள் மெகா வில்லன் ஆரவ்விடம் கம்பெனி ரகசியங்களை திருடுபவர்களைப் பிடிக்கச் சொல்கிறார்கள்.

ஆரவ் தனது கொடூரமான விசாரணைகளை நடத்துகிறார். அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் பலரையும் ரத்தம் தெறிக்க தெறிக்க விசாரிக்கிறார். அவரின் விசாரணை வளையத்திற்குள் கலையரசன் மாட்டுகிறார். அடுத்ததாக அதில் மாட்ட இருப்பவர் உதய்நிதி ஸ்டாலின் என்ற சூழல் வருகிறது. அச்சூழலை உதய்ணா எப்படிச் சமாளித்தார்? வஜ்ரா கம்பெனியின் ரகசியங்கள் யாவை? அதை வெளி கம்பெனிக்கு விற்க வேண்டிய காரணம் என்ன? என பல கேள்விகளுக்குப் படம் பதிலளிக்கிறது

அலட்டிக் கொள்ளாத அமைதியான நடிப்பால் உதயநிதி ஸ்டாலின் ஈர்க்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்கூட சைலண்ட் காட்டியே ஸ்கோர் செய்கிறார். இப்படத்தில் ஆச்சர்யப்படுத்தியது நடிகர் ஆரவ்வின் நடிப்புதான். வில்லன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது முகபாவங்களும் உடல்மொழியும் நல்ல வில்லனுக்கான சமிக்‌ஞயை காட்டுகிறது. வாழ்த்துகள் ராசா. அடுத்ததாக நிதி அகர்வால். காதல் காட்சிகள், எமோஷ்னல் காட்சிகள் இரண்டிலுமே நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். கலையரசனுக்கு பெரிதாக வெளி இல்லாவிட்டாலும் கிடைத்திருக்கும் சிறு வாய்ப்பையும் சரியாகவே பயன்படுத்தியுள்ளார்

இப்படத்திற்கு இசை அமைத்து ஒரு ரீ.என்ட்ரி கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. பாடல்களும் கேட்கும் வகையில் இருக்கிறது. முதலில் ஒரு ரீலுக்கு மட்டும் நிறைய வாசித்துத் தள்ளிவிட்டார். காதெங்கும் ஒரே சவுண்ட்ஸ். ஒளிப்பதிவில் இப்படம் கூடுதல் அழகோடு மிளிர்கிறது. திருச்சி ரெயில்நிலைய காட்சிகளை மிக அழகாக எடுத்திருக்கிறார் கேமராமேன். படத்தில் அந்த ரயில்வே ஸ்டேசன் சீக்வென்ஸ் தீப்பொறி பறக்கும் திக் திக் நிமிடங்கள். அந்த சீக்வென்ஸ் மற்ற எல்லாவற்றையும் விட நன்றாக வொர்க்காகியுள்ளது. எடிட்டர் பின் பாதியில் கொஞ்சம் கத்தரியைப் போட்டிருக்கலாம்

வந்த கதையோ,நொந்த கதையோ எந்த கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியான திரைக்கதையாக்கினால் படம் பக்கா மெட்டிரியல் ஆகிவிடும். அந்தத் திரைக்கதை வித்தை இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றாக கைவந்துள்ளது. காதல் காட்சிகள் மட்டும் படத்தின் வேகத்திற்கு கொஞ்சம் தடை போடுகிறது. அவற்றை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம்.

ஆனாலும் இந்த ‘கலகத் தலைவன்’ உலகப் லிட்டிக்ஸ் பேசி அழகுத் தலைவனாக மிளிர்கிறான். மிகக் குறைவான குறைகளே படத்தில் இருப்பதால் நிச்சயமாக இந்தப் படம் உங்களை ஏமாற்றாது.

RATING : 4 / 5