Thursday, July 7, 2022
Home Movie Review காத்து வாக்குல ரெண்டு காதல் - சினிமா விமர்சனம்

காத்து வாக்குல ரெண்டு காதல் – சினிமா விமர்சனம்

தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,  இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவுடன் மேலும் பல தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருக்கும் படம்தான் இந்தக் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, சண்டை பயிற்சி இயக்குநர் பணியை திலீப் சுப்பராயன் செய்துள்ளார்.

‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் நாயகனான விஜய் சேதுபதி பிறந்த உடனேயே அவரது அப்பா இறந்து விடுகிறார். அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார். அம்மாவைப் பார்க்கப் போனால், அவரது உடல் மேலும், மோசம் அடைவதாக நர்ஸ்களே சொல்லிவிடுவதால், அம்மாவை பார்ப்பதையே விட்டுவிடுகிறார் வி.சே.

இது மட்டுமா..? இவர் ஐஸ்கிரீம் வாங்கப் போனால் தீர்ந்துவிடும். மழை பெய்யும்போது, இவர் வெளியே போனால், அந்த மழைகூட நின்று விடும். மழையில்லையே என்று நினைத்து படியிறங்கினால் மழை வெளுத்து வாங்கும். தனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாமே ஏறுக்கு மாறாகவே நடக்கிறது என்று யோசித்து, யோசித்து தான் ஒரு ‘அன் லக்கி கய்’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ‘ராம்போ’ என்ற விஜய் சேதுபதி.

தற்போது வாழ்வியலுக்காக காலையில் ஆட்டோ ஓட்டுகிறார். இரவானால் பப்பில் பவுன்சராக வேலை செய்கிறார் வி.சே. காலையில் ஆட்டோ ஓட்டும்போது ‘கண்மணி’ என்னும் நயன்தாராவுடன் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இது ஒரு பக்கம் காதலாகிறது.

இன்னொரு பக்கம் இரவில் பப்பில் மது அருந்த வரும் ‘கத்திஜா’ என்ற சமந்தாவுடன் ‘பேபி’, ‘பேபி’ என்று பேசிப் பேசியே கவிழ்க்கிறார் விஜய் சேதுபதி. இப்போது இந்த இரண்டு பெண்களுமே விஜய் சேதுபதி தனக்குத்தான் என்று சொல்லும்போது “நான் உங்க ரெண்டு பேரையுமே கட்டிக்கிறனே..?” என்கிறார் விஜய் சேதுபதி.

இதற்கு இந்தக் காதலிகள் ஒத்துக் கொண்டார்களா..? இல்லையா..? விஜய் சேதுபதி கடைசியில் யாரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதுதான் இந்தக் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் திரைக்கதை.

விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் ‘ராம்போ’ என்னும் பெயருக்கு ‘ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹோந்திரன்’ என்பதுதான் விளக்கமாம்..!

ஏற்கெனவே இரண்டு மனைவிகளுக்கிடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் கணவர்கள் என்ற கதை, திரைக்கதையில் கருப்பு-வெள்ளை காலத்தில் இருந்தே பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்குமான வித்தியாசம் இரண்டு காதலிகளுக்கும் தெரிந்தே நாயகன் இருவரையும் காதலிப்பதுதான்..!

விஜய் சேதுபதிக்கு கிடைத்திருக்கும் வசதி, வாய்ப்பு என்னவென்றால் அலட்டிக் கொள்ளாமல்.. கஷ்டப்படாமல் நடிக்கும் திறமை அவருக்கு வாய்த்திருப்பதுதான்.

வெறுமனே முக பாவனைகள், பாடி லாங்குவேஜ்லேயே தனது நடிப்பைக் காண்பித்துவிட்டு காட்சிகளிலிருந்து கடந்து போகிறார் விஜய் சேதுபதி.

தனது காதலை வெளிப்படுத்த ரொம்பவும் கஷ்டப்படாமல், தன் கண்களாலேயே காதலைக் கடத்தியிருக்கிறார் வி.சே.

கண்மணி’யான நயன்தாராவும், கத்திஜாவான சமந்தாவும் திரைக்கதையில் சரிக்கு சமமான காட்சிகளில் வலம் வருகிறார்கள். 

சமந்தா சமர்த்தாக குறைவான துணிகளோடும், நயன்தாரா தனது வருங்கால கணவர்தான் இயக்குநர் என்பதால் கொஞ்சம் போர்த்திக் கொண்டும் வலம் வந்திருக்கிறார்கள்.

குடும்பப் பெண்ணாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா. மாடர்ன் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார் சமந்தா. பல காட்சிகளில் அனாயசமாக நயன்தாராவை நடிப்பில் ஓவர் டேக் செய்திருக்கிறார் சமந்தா.

கண்மணி கங்குலி’யான நயன்தாரா உடல் இழைத்துப் போய் பார்ப்பதற்கே பாவமாய் தெரிகிறார். ஸ்பெஷல் சைல்ட் தம்பி மற்றும் ஒரு தங்கையை வளர்க்கும் அவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் வி.சே.வுடனான காதலில் விழுக, இவருக்கு ஒரு லாஜிக்கான காரணத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

“என்னை பெரிய ரவுடிகள்கிட்ட கூட்டிட்டு போக முடியுமா..?” என்று தன் வீட்டிற்கு வந்து தொல்லை பண்ணும் கடன்காரர்களை துரத்த நயன்தாரா, வி.சே.விடம் ஐடியா கேட்கும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.

இரண்டு காதல் மேட்டர் லீக் ஆனவுடன் சமந்தாவை நயன் கத்திமா’ என்று செல்லமாக அழைப்பதும், பதிலுக்கு நயன்தாராவை சமந்தா அக்கா’ என்று அழைக்க முயற்சிப்பதும் சிச்சுவேஷன் காமெடியில் அரங்கத்தை சிரிக்க வைக்கிறது.

படத்தில் சமந்தாவோடு நயன்தாரா சரி சமமாக போட்டி போட்டு நடித்தாலும் நயன்தாரா வயதிலும், உடலிலும் சீனியராகி விட்டார் என்பது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. அதனால்தான் சமந்தா, நயனை “அக்கா” என்று அழைப்பது போன்ற காட்சியை இயக்குநர் விக்னேஷ் சிவன் வைத்தார்போலும்..!

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரின் காம்பினேஷன் சீன்களில் மூன்று பேருமே போட்டி போட்டு நகைச்சுவை வசனங்களால் நடித்துத் தப்பித்திருக்கிறார்கள். ஆனால் “என்னையும் பண்ணிட்டான்..” என்று சமந்தா சொல்லும் வசனமெல்லாம் ரொம்பவே டூ மச்..!

‘மெய்யா, பொய்யா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வி.சே.வுக்கு Dissociative identity disorder’ என்னும் மனச் சிதைவு நோய் இருப்பதாகச் சொல்லி நடிகர் பிரபு அடிக்கும் கூத்துகள் சிரிப்பலையை எழுப்புகிறது. “ஆறிப் போன இட்லிக்கு எதுக்குடா ஹாட் பேக்கு?” என்பது போன்ற வசனங்களும் சிரிக்க வைத்திருக்கின்றன.

சத்யா‘ படத்தின் ’வளையோசை கல கல’ பாடல் காட்சி மற்றும் டைட்டானிக்’ படத்தின் காட்சிகளை பொருத்தமான இடத்தில் பயன்படுத்தி தியேட்டருக்கு வரும் காதலர்களை குஷிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

படம் நெடுகிலும் சின்னச் சின்னப் பாத்திரங்கள்கூட டைமிங்காக நகைச்சுவைப் பொடியைத் தூவிச் செல்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லியின் உடல் முழுக்கப் பெட்ரோலை ஊற்றிவிட்டு, தீக்குச்சியையும் கொளுத்திவிட்டு, விஜய் சேதுபதி பற்றிய உண்மைகளை நயன்தாராவும் சமந்தாவும் விசாரிக்கும்போது, “பெட்ரோல் விக்கிற விலைக்கு அந்தக் காசை என்கிட்ட கொடுத்துட்டு சும்மா விசாரிச்சிருந்தாலே சோல்லியிருப்பேனே..” என்று சொல்லும் வசனத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது.

அனிருத்தின் இசை வழக்கம்போல.. பாடல் வரிகள் யாருக்குமே கேட்கக் கூடாது என்பது போலவே இசையை அடித்துத் துவைத்துக் காயப் போட்டிருக்கிறார். ரொமாண்டிக் காட்சிகளில் மட்டும் அவரது இசை கொஞ்சம் காதலைக் கனிய வைக்கும்விதமாக ஒலிக்கிறது.

எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கலர்புல். ஆரம்பக் காட்சிகளில் கிராமத்தின் இயற்கை எழில் சூழ்ந்த வயல், அருவி, ஆற்றங்கரை, பயிர்கள் சூழ்ந்திருக்கும் வயக்காட்டு காட்சிகளை வெகு நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்கள்.

நயன்தாரா மற்றும் சமந்தாவை போட்டி போட்டுக் கொண்டு அழகாகக் காட்டியிருக்கிறார்கள். இதேபோல் விஜய் சேதுபதியையும் ஸ்மார்ட்டாக காட்ட முயற்சித்திருப்பது தெரிகிறது. பாடல் காட்சிகளில் இசையின் ஆட்டத்திற்கேற்ப ஒளிப்பதிவாளரும் உடன் ஆடியிருக்கிறார்.

போரடிக்காதவகையில் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு செய்திருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் முடிவுவரை எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாதவகையில் அனைத்து காட்சிகளையும் அளவாக தொகுத்திருக்கிறார்.

ஆனால் விஜய் சேதுபதியைவிட்டால் காதலிக்க வேறு ஆண்களே இல்லாததுபோல் இந்த இரண்டு நாயகிகளும் அவரை அடைவதற்காக செய்யும் திருவிளையாடல்கள்’ பலவும் குடும்பத்துடன் வந்திருக்கும் ரசிகர்களை நெளிய வைத்திருக்கிறது.

”இட்லி, தோசை, ரஜினி கமல் என எனக்கு இரண்டும் பிடிக்கும். அதுபோல உங்க ரெண்டு பேரையும் பிடிச்சிருக்கு” என்று விஜய் சேதுபதி பேசும் வசனமும் கொஞ்சம் ஓவராகத்தான் உள்ளது. இட்லி, தோசையும் பெண்களும் ஒன்று’ என்று ஒப்பீட்டின் மூலம், பெண்ணியப் போராளிகளின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இதேபோல் நயனும், சமந்தாவும் பேசிக் கொள்ளும் பாதாம்’, ‘பிஸ்தா’ போன்ற இரட்டை அர்த்த வசனங்களும் முகத்தை சுழிக்க வைக்கின்றன. இவைகளை நீக்கியிருக்கலாம்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரியை, சரிசமமாக திரைக்கதையில் பயன்படுத்தியிருப்பதும், திரைக்கதை மற்றும் சிறப்பான இயக்கம் என்று பலவுமே இந்தப் படத்திற்கு பலமாக இருக்கிறது.

“எதுவுமே கிடைக்காமல் துரதிருஷ்டசாலியாக இருக்கும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் எல்லாமே டபுளாக கிடைத்தால் எப்படி இருக்கும்?” என்று யோசித்து கதை எழுதியிருந்தாலும், இந்த ஒப்பீட்டை சொல்வதற்கு விக்னேஷ் சிவனுக்கு காதல்தான் கிடைத்ததா என்கிற கேள்வியும் எழுகிறது.

முதல் பாதியிலேயே முழு படமும் முடிந்துவிடுவது போல் திரைக்கதை அமைத்து, இடைவேளை காட்சியில் அதை சட்டென்று மாற்றியமைத்துக் காட்டுவது இயக்குநரின் எழுத்துத் திறமையைக் காட்டுகிறது. இரு தாரத் தடைச் சட்டம் பாயுமே என்ற பிரச்னையை படத்தின் கிளைமேக்ஸில் லாவகமாகக் கையாண்டு தப்பித்திருக்கிறார் இயக்குநர்.

விஜய் சேதுபதியின் துரதிர்ஷ்டம் தொடர்பான காட்சிகள் மூட நம்பிக்கையை வளர்ப்பது போலவும், அவரது குடும்பத்தில் இனிமேல் யாருக்குமே கல்யாணமாகாது என்று சொல்வதெல்லாம் அர்த்தமற்ற கற்பனையின் உச்சக்கட்டம்..!

இப்போது இருக்கின்ற இளைய தலைமுறையினருக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க முடியாவிட்டாலும்கூட பரவாயில்லை.. கெட்டதை கொடுத்து அதை அவர்களது மனதில் பதிய வைக்காதீர்கள் என்று சொல்ல வைக்கிறது இந்தப் படம்..!

நகைச்சுவையோடு சொல்லியிருந்தாலும் கெட்ட விஷயங்கள்தான் முதலில் இளைஞர்கள் மனதில் பதியும். பின்பு அவைகளை அழிப்பதென்பது மிகுந்த சிரமமான காரியம்.. இந்தப் பட இயக்குநர் இதை மனதில் வைத்து அடுத்தப் படத்தை எடுத்தால் நல்லது..!

RATING : 3 / 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

போலீஸ் கான்ஸ்டபிள்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் விஷாலின் ‘லத்தி’ படம்

ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் ‘லத்தி’. இந்தப் படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார். மேலும் முதல்...

“கீர்த்தி ஷெட்டியிடம் மீரா ஜாஸ்மினின் சாயல் இருக்கு” – இயக்குநர் லிங்குசாமி பேச்சு

இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும்  அதிரடி திரைப்படம் ‘தி வாரியர்’. Srinivaasaa Silver Screen சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்துரி இந்தப் படத்தைத்...

‘கேசினோ’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் வாணி போஜன் நடிக்கும் ‘கேசினோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்..! மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media...

கிராமத்துப் பின்னணியில் தயாராகும் ‘மூத்தகுடி’ படம்

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து அந்நிறுவனத்தினர் தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கின்றனர்.