தமிழ்த் திரையுலகின் பிரபலமான புகைப்பட கலைஞரான ஸ்டில்ஸ் ரவி தன்னை திரையுலகத்தில் மதித்த, அவமதித்த நடிகர், நடிகைகளைப் பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் பேசும்போது, “என்கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. எல்லாரும் ஒரே மாதிரி போட்டோக்களை எடுக்கும்போது நான் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா மாத்தி எடுக்கணும்ன்னு நினைப்பேன். இதனாலேயே 1980-களில் எனக்கு தமிழ்த் திரையுலகத்தில் நல்ல பெயர் இருந்தது.
என்னுடைய துவக்கக் காலத்தில் பல திரையுலகப் பிரபலங்கள் என் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்கள். நடிகர் சிவக்குமார், நடிகை ஸ்ரீப்ரியா இதில் முக்கியமானவர்கள். ஸ்ரீப்ரியாதான் ரஜினி நாயகனாக நடித்த முதல் படமான ‘பைரவி’ படத்தில் என்னை ஸ்டில் போட்டோகிராபர் பணிக்கு சிபாரிசு செய்தார். அந்தப் படத்தின் டைட்டிலில்தான் என்னுடைய பெயர் முதன்முதலாக வெளிவந்தது.
சிவக்குமார் ஸார் தொடர்ந்து பல படங்களுக்கு எனக்கு சிபாரிசு செய்து வேலை வாங்கிக் கொடுத்தார். ‘அன்னக்கிளி’ செல்வராஜ் சுபா சுந்தரம் போட்டோ ஸ்டூடியோவுக்கு தினமும் வந்து போவார். அப்போது அங்கேயிருந்த என்னிடம் நிறைய பேசுவார். என்னை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.
அவர் ‘காமதேனு’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தில் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் ஹீரோவாக நடித்தார். அந்தப் படத்தின் விளம்பரத்தில் என்னைக் கேட்காமலேயே என் பெயரைப் போட்டுவிட்டு அதைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார். எனக்கு அது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
நான் புகைப்படங்கள் எடுக்கும்போது பலரும் அதை வரவேற்பார்கள். நான் விரும்புவரையிலும் அவர்கள் போஸ் கொடுப்பார்கள். இதில் எம்.ஜி.ஆர்.தான் பெஸ்ட். எத்தனை ஸ்டில்ஸ் என்றாலும் அசராமல் போஸ் கொடுப்பார்.
1980-களில் பழைய நடிகர், நடிகைகள் அனைவரையுமே நான் புகைப்படம் எடுத்திருக்கிறேன். நடிகை ஜெயசித்ராவுடன் மட்டுமே எனக்கு கசப்பான அனுபவம் கிடைத்து. அவரிடத்தில் எப்போது புகைப்படம் எடுக்கப் போனாலும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..என்று சொல்லி நம்மைக் காக்க வைத்துவிட்டு, பக்கத்தில் யாரிடமாவது ஏதாவது பேசிக் கொண்டேயிருப்பார். அதன் பின்புதான் போஸ் கொடுப்பார். இவர் ஒருவரிடம் மட்டும்தான் எனக்கு இந்த கசப்பான அனுபவம் கிடைத்தது..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.