Friday, April 12, 2024

“எனக்குள் இருந்த இயக்குநரை வெளிக்கொணர்ந்தவர் இயக்குநர் விஜய்தான்”-ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரசிகர்கள் விரும்பும் வகையில் பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசமான வெற்றிப் படங்களை வழங்கி முன்னணி OTT தளமாக ஜீ-5 வளர்ந்து வருகிறது.

‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ ‘மதில்’  ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம் ‘ என ஒரே நேரத்தில் விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும்வகையில் தரமான வெற்றிப் படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது ஜீ-5 நிறுவனம்.

தற்போது தனது அடுத்த வெளியீடாக சித்திரைச் செவ்வானம்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.

A.L.அழகப்பன் மற்றும் P.மங்கையர்க்கரசி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் முன்னணி இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், பிரவீன்.K.L. படத் தொகுப்பாளராகவும்,  ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் K.G.வெங்கடேஷ் இருவரும் பணி புரிந்துள்ளனர். பிரபல இயக்குநர் விஜய் இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார்.

இந்தச் ‘சித்திரைச் செவ்வானம்’ படத்தை  பிரபல சண்டை பயிற்சி இயக்குநரான ‘ஸ்டண்ட் சில்வா’ இயக்கியுள்ளார்.  இது இவர் இயக்கும் முதல் படமாகும்.இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதனையொட்டி படக் குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினரை சந்தித்தனர்.

இந்த விழாவில் இயக்குநர் சில்வா மாஸ்டர்  பேசும்போது, “என் சின்ன வயதிலிருந்தே, என்னை இங்கிருப்பவர்கள்தான் என் கை பிடித்து அழைத்து சென்றிருக்கிறார்கள். நான் இயக்குநர் ஆக வேண்டும் என என்னைவிட வெறியாக இருந்தவர் விஜய்தான். தெரியாத ஆட்களுக்கே உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர்.  ‘தலைவா’ படத்திலிருந்தே எனக்குள் இயக்குநர் இருக்கிறார் என்று ஊக்கம் தந்து, என்னை இயக்குநர் ஆக்கும்வரை உடன் நின்றவர் விஜய்தான்.

படம் பார்த்து கண் கலங்கி, என்னால்கூட இப்படி செய்திருக்க முடியாது என பாராட்டினார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை பார்த்து நல்ல கதையென்று ஆதரவு தந்த ஜீ-5 நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் அண்ணனாக, அப்பாவாக உடன் நின்று தன் சொந்தப் படம் போல் செய்து தந்தார் சமுத்திரகனி அண்ணன். அவரால்தான் இந்தப் படம் முழுமையாக வந்துள்ளது.

பூஜாவை விஜய் சார்தான், பார்க்க சொன்னார். அவரைப் பார்த்தவுடன் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. கடகடவென்று பேசிக் கொண்டே இருப்பார். கலைராணி மேடத்திடம் பயிற்சி எடுத்து கொண்டு வந்து நடித்தார். அவரிடமிருந்து இன்புட் எடுத்து, சில காட்சிகளை எடுத்திருக்கிறோம். நன்றாக நடித்திருக்கிறார்.

ரீமா கலிங்கல் திரைக்கதையைக் கேட்டார்.  ஒவ்வொரு காட்சிக்கும், முன்னதாகவே தயாராகி வந்தார். திரைக்கதையில் சின்ன மாற்றம் செய்தாலும் கேட்பார். அப்போதுதான் அவரே சொந்த தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார் என தெரியும்.  மிக மிக நன்றாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடிப்பால் சில காட்சிகளில் அழ வைத்து விட்டார்கள். மானசிக்கு 8 வயதுதான். ஆனால், கிளிசரின் போடாமலே அவளுக்கு அழுகை வருகிறது. சொல்லும் நேரத்தில் சிரிக்கிறாள். அவள் மிகப் பெரிய உயரத்தை தொடுவாள்.

தமிழில் பேசி, பாட்டெழுதி இசையமைக்கும் திறமை சாமிடம் இருக்கிறது. அவரது இசை அட்டகாசமாக வந்திருக்கிறது. என்னுடன் இணைந்து இப்படத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி.  படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்…” என்றார்.‘சித்திரைச் செவ்வானம்’ திரைப்படம் வரும் டிசம்பர் 3-ம் தேதியன்று நேரடியாக ஜீ-5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News