வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. ஆர்யா நடித்துப் பாலா இயக்கிய “நான் கடவுள்”, ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த “பாஸ் என்கிற பாஸ்கரன்”, ஜெயம் ரவி நடித்த “நிமிர்ந்து நில்” உள்ளிட்ட படங்கள் இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் அடங்கும். இந்நிறுவனம் தயாரித்த படம் ‘எங் மங் சங்’ ஆகும்.

இந்தப் படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். மேலும், இயக்குநர் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், மாரிமுத்து, காளி வெங்கட், முனீஸ்காந்த் மற்றும் பாகுபலி பிரபாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொண்டிருக்க, இசையை அம்ரிஷ் அமைத்துள்ளார்.
சில சிக்கல்களால் இப்படத்தின் ரிலீஸ் தாமதமானது. இந்நிலையில், இந்தப் படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தை ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய எஸ்.ஜே.அர்ஜூன் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
17ம் நூற்றாண்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் ஆரம்பமாகும் இப்படம், பின்னர் 1980ம் ஆண்டை அடைவதாக அமைந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த குங்பூ கலை, இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் செல்லும் மூன்று இளைஞர்களால் கற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னர் அவர்கள் ‘எங் மங் சங்’ என்ற பெயருடன் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார்கள். பின்னர் அவர்கள் கற்ற கலைக்குப் பயன்பாடு என்னவாகிறது என்பதே இப்படத்தின் கதைக்களமாகும்.