Friday, April 12, 2024

எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர். சுட்டாரா..? – ராதாரவி எழுப்பும் பகீர் கேள்வி…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா, ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆரை கடந்த 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அவரது நந்தம்பாக்கம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தார்.

அப்போது ‘எம்.ஜி.ஆரை. சுட்ட எம்.ஆர்.ராதா தானும் சுட்டுக் கொண்டார்’ என்று இதுநாள்வரையிலும் பல்வேறு பத்திரிகைகளிலும், செய்தித் தளங்களிலும் வரலாறுகள் பதிவாகியுள்ளன.

ஆனால் இதனை எம்.ஆர்.ராதாவின் மகனும், நடிகருமான ராதாரவி மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “ஒருவர் இறந்துவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் உண்மைக்குப் புறம்பாகப் பேசக் கூடாது. மூன்று நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட அந்த விஷயத்தில் ஏதோ அனைவரும் உடனிருந்து பார்த்ததுபோல இப்போதும் பேசிக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது. அன்றைய தினம் உண்மையில் நடந்ததே வேறு.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தை தயாரிப்பாளர் வாசு தயாரித்து வந்தார். இவர் என் எப்பாவுக்கு மிக நெருங்கிய நண்பர். இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டி வாசு என் அப்பாவிடம் கடன் உதவி கேட்டபோது, எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு எதிரேயிருந்த எங்களது தோட்டத்தை ஒரு சேட்டிடம் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று வாசுவிடம் கொடுத்திருந்தார் எங்கப்பா.

அந்தப் படத்திற்கு ஏனோ எம்.ஜி.ஆர். சரிவர கால்ஷீட் கொடுக்கவில்லை. படமும் இழுத்துக் கொண்டே போனது. அந்தப் பணம் வெளியானால்தான் எங்கப்பா கொடுத்த கடன் தொகையான ஒரு லட்சம் ரூபாய் திரும்பவும் எங்களது கைக்கு வரும் நிலைமை.

ஆனால் எம்.ஜி.ஆரோ இந்தப் படத்தின் ஷூட்டிங் பற்றிக் கவலைப்படாமல் இருந்தார். இதனால் எங்கப்பாவுக்கு எம்.ஜி.ஆர். மீது கோபம் வந்தது. ‘எம்.ஜி.ஆரை சுடப் போகிறேன்’ என்று எங்கப்பா கோபத்துடன் ஒரு சிலரிடம் சொல்லியிருக்கிறார். இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம், “எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகலாம். வா” என்று அழைத்திருக்கிறார் எங்கப்பா. அவர் பயந்துபோய் ஓடிவிட்டார். இதேபோல் வேறு சிலரிடமும் சொல்லியிருக்கிறார்.

இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்கும் எட்டியிருந்தது. அப்போது வாசு எம்.ஜி.ஆருக்கு போன் செய்து தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டார். எம்.ஜி.ஆரும் அவரை வரச் சொன்னார். “உடன் ராதா அண்ணனும் வர்றார்” என்று வாசு சொல்ல.. “அவரையும் கூட்டிட்டு வாங்க. ஆனால் அவர்கிட்ட துப்பாக்கி இருக்கு. அதை வாங்கிப் பத்திரமா அங்கேயே வைச்சிட்டு வாங்க…” என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

அன்றைய தினம் எம்.ஆர்.ராதா, நடிகை ராதிகாவின் தாயாருடன் இருந்திருக்கிறார். அவர்களது வீட்டில் இருந்துதான் அவரும் வாசுவும் எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாவரம் தோட்டத்திற்குக் கிளம்பியிருக்கிறார்கள். எம்.ஆர்.ராதா கொஞ்சம் குடித்திருந்ததும் உண்மை. அப்போது தன்னுடைய துப்பாக்கியை வாசுவுக்கே தெரியாமல் தனது இடுப்பு வேட்டியில் சொருகி வைத்திருந்தார் எம்.ஆர்.ராதா.

அங்கே போனவுடன் பலவித பிரச்சினைகள் அவர்களிடையே பேசப்பட்டிருக்கிறது. கால்ஷீட் பிரச்சினை.. “படம் முடிந்தால்தான் எனக்குப் பணம் கிடைக்கும் சூழல் இருக்கிறது…” என்று எங்கப்பாவும் எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆரோ “அந்தப் பணத்தை நான் உங்களுக்குக் கொடுக்குறேன்…” என்றெல்லாம் எங்கப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.

திடீரென்று கோபமாகி எங்கப்பா பேசப் போக.. பதிலுக்கு எம்.ஜி.ஆரும் கோபமாகப் பேசியிருக்கிறார். இந்த நேரத்தில்தான் திடீரென்று துப்பாக்கி வெடித்திருக்கிறது. எம்.ஜி.ஆரின் மீதும் குண்டுகள் பாய்ந்திருக்கிறது. அவர் ரத்தம் வடிந்த நிலையில் வாசலுக்கு ஓடியிருக்கிறார்.

எங்கப்பா அங்கேயே விழுந்திருக்கிறார். அவரது கழுத்திலும் வலது கன்னத்தின் மேல் பகுதியிலும் குண்டு பாய்ந்திருந்தது. எம்.ஜி.ஆரை காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு போயிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து எங்கப்பாவை வேலூர் நாராயணன் தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார்.

ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் காரை நிறுத்தி ரத்தம் வடிய, வடிய.. ஸ்டேஷனுக்குள் போன எங்கப்பா “எம்.ஜி.ஆர். என்னைச் சுட்டார். நானும் பதிலுக்கு அவரைச் சுட்டேன்…” என்று புகார் சொல்லியிருக்கிறார். அதன்படி புகாரும் பதிவு செய்யப்பட்டது.

இதன் பின்பு அப்பா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு உயிர் தப்பினார். இதேபோல் எம்.ஜி.ஆரும் உயிர் தப்பினார். எங்கப்பா எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்ய நினைத்திருந்தால் அவரது தலை வெடித்திருக்கும். மிக அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டால் தலை சிதறிவிடும். இந்த உண்மை அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் இங்கே என் அப்பாவுக்கு அதெல்லாம் ஆகவில்லை. அவரது உடலில் குண்டுகள் பாய்ந்திருந்தது. அவ்வளவுதான்.

ஆக.. இந்த 2 குண்டுகள் எப்படி எங்கப்பா மீது பாய்ந்தது..? யார் சுட்டது..? எதிரில் இருப்பவர் யாரோ ஒருவர் சுட்டிருக்க வேண்டுமல்லவா..? அது யார்..? இதைத்தான் எங்களது தரப்பு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் கேள்வியாகக் கேட்டார். இந்த சந்தேகத்தினால்தான் உச்சநீதிமன்றம் எங்கப்பாவுக்கு “இதுவரையிலும் அனுபவித்த தண்டனையே போதும். அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்” என்று உத்தரவிட்டது.

எம்.ஜி.ஆரின் உடலில் பாய்ந்திருந்த குண்டுகள் எங்கப்பாவின் துப்பாக்கியில் இருந்து சென்றதுதான். நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எங்கப்பாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டுகளின் நம்பர் என்ன..? அது எந்தத் துப்பாக்கியில் இருந்து வெளியேறியது என்று நீதிமன்றத்தில் நாங்கள் கேட்டபோது அரசுத் தரப்பு அதற்கு பதிலே அளிக்கவில்லை.

எங்கப்பா நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் “எம்.ஜி.ஆர். என்னைச் சுட்டார். நானும் பதிலுக்கு சுட்டேன்…” என்றுதான் கூறினார். அப்போது இருந்த தி.மு.க. அரசு எம்.ஜி.ஆரை காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுட்டதை மறைத்துவிட்டு எம்.ஆர்.ராதா மட்டுமே சுட்டதாக கதை எழுதிவிட்டது. இதுதான் நடந்த உண்மை.

இந்த உண்மையறியாமல் பலரும் இப்போது என் அப்பா மட்டும்தான் எம்.ஜி.ஆரை சுட்டார் என்று எழுதுவது சரியல்ல..” என்று குமுறித் தள்ளியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News