Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

வைரமுத்துவுக்கு பாடல் எழுத வாய்ப்பளிக்காததால் இசையமைக்க மறுத்த இளையராஜா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கவிஞர் வைரமுத்துவுக்கும், இசைஞானி இளையராஜாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை. இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் வைரமுத்துவோடு இணைந்து பணியாற்ற இளையராஜா இப்போதுவரையிலும் மறுத்தே வந்திருக்கிறார்.

ஆனால், இதே இளையராஜா முன்பு ஒரு காலகட்டத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது இசையில் வைரமுத்துவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தரவில்லை என்பதற்காகவே… அந்தத் தயாரிப்பாளரின் அடுத்தப் படத்துக்கு இசை அமைக்க மறுத்த சம்பவங்களும் நடந்திருக்கிறது.

அதில் ஒன்றுதான் இது..!

தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி ஒரு முக்கியமான தயாரிப்பாளர். ‘மலையூர் மம்பட்டியான்’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘தர்மபத்தினி’, ‘சோலைக்குயில்’ போன்ற படங்களைத் தயாரித்தவர்.

இவருடைய தயாரிப்பில் வெளியான ‘சோலைக்குயில்’ படத்திற்கு இசையமைக்க இளையராஜா மறுத்துவிட்டாராம். “அதற்குக் காரணம் வைரமுத்துதான்” என்கிறார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.

பிரபல தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யூடியுப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டியளித்தபோது அழகன் தமிழ்மணி இதைக் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசும்போது, “தர்மபத்தினி’ படத்தைத் தயாரித்தபோது படத்திற்கு இசையமைத்த இளையராஜா கம்போஸிங்கிற்காக வி.ஜி.பி.யில் ரூம் போடச் சொன்னார். நானும் போட்டுக் கொடுத்தேன். அங்கே சென்றிருந்தபோது வைரமுத்துவை பாடல் எழுத அழைத்து வரும்படி சொன்னார் இளையராஜா. ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன்.

வைரமுத்து அப்போது ‘ஒரு படத்தில் அனைத்து பாடல்களையும் தானே எழுதுவேன்’ என்று சொல்லுவார். அது எனக்குப் பிடிக்காது. “அடிப்படையில் நான் ஒரு கம்யூனிஸ்ட். அனைவருக்கும் சமமாக வாய்ப்பளிக்க வேண்டும். என்னிடமே நான்கைந்து கவிஞர்கள் இப்போது வாய்ப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..” என்று இளையராஜாவிடம் சொன்னேன்.

ஆனால் இளையராஜாவோ “நான் ஏற்கெனவே வைரமுத்துகிட்ட பேசிட்டனே..?” என்றார். “இல்லங்க.. அவர் வேண்டாம்.. வேற ஆளை சொல்லுங்க..” என்று நான் தீர்மானமாக மறுத்துவிட்டேன்.

இது பற்றிக் கேள்விப்பட்ட வைரமுத்து என்னிடம் போனில் பேசி “என்ன விஷயம்..?” என்று கேட்டார். “உங்களுடைய அனைத்து பாடல்களையும் நானே எழுதுவேன் என்ற கொள்கை எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு பாடலென்றால் எனக்கு ஓகே…” என்றேன். அவர் “வேண்டாம்…” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

வைரமுத்து இல்லையென்றான பின்பு யோசித்த இளையராஜா “கண்மணி சுப்புவை கூப்பிடுங்க. அவரும் கவிஞர் மாதிரியே எழுதுவாரு.. ரொம்ப நாளா பாட்டு எழுதணும்னு கேட்டுக்கிட்டிருந்தாரு…” என்றார்.

அப்போது அந்தப் படத்திலும் கண்மணி சுப்பு இணை இயக்குநராகப் பணியாற்றியதாலும், இளையராஜாவிடம் ‘தர்மபத்தினி’ கதையைச் சொன்னவரே அவர்தான் என்பதாலும் நானும் சரியென்று சொல்லி கண்மணி சுப்புவை வரவழைத்து பாட்டெழுத வைத்தேன். அந்தப் பாடல்தான் ‘நான் தேடும் செவ்வந்திப் பூ’ பாடல்.

இந்தப் பாடலை இளையராஜாவே பாடினார். ஆனால், நான் “எஸ்.பி.பி.தான் பாட வேண்டும்…” என்றேன். “ஏன் நான் பாடினால் மக்கள் கேட்க மாட்டார்களா..?” என்றார் இளையராஜா. அதற்குப் பிறகு நான் அது குறித்து வற்புறுத்தவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். அந்த ஒரு பாடல் அந்தக் காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.

இந்தப் படத்திற்குப் பிறகு நான் தயாரித்த ‘சோலைக் குயில்’ படத்திற்கும் இசையமைக்க இளையராஜாவிடம் போய்க் கேட்டேன். அப்போது அவர், “இப்ப நிறைய படங்கள் கைல இருக்கு. வேண்ணா ஒரு ஆறு மாசம் வெயிட் பண்ணுங்க. அப்புறம் பார்க்கலாம்…” என்றார்.

அப்போது அவருக்கும் வைரமுத்துவுக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. அதனால் வைரமுத்துவினால்தான் இந்தப் படத்திற்கு அவர் மறுக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் யாரிடமும் கை கட்டி நின்றவனில்லை. கெஞ்சிக் கூத்தாடுபவனில்லை. அதுதான் என் இயல்பான சுபாவம். ஆகவே.. நானும் ‘சரி’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அந்த ‘சோலைக் குயில்’ படத்துக்கு இளையராஜாவிடம் அப்போது கீ போர்டு வாசித்துக் கொண்டிருந்த முராரி என்பவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினேன்..” என்றார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.

- Advertisement -

Read more

Local News