“வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை

பண்டிகை நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்” என்று சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் பேரரசு பேசும்போது,தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது. தெலுங்கு படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.

நாம் மொழி பார்த்து படம் பார்ப்பதில்லை. இந்த வருடம் பொங்கலுக்கு பீஸ்ட்’ படம் வெளியான அதே சமயத்தில்தான், ‘கே.ஜி.எப்.-2’ படமும் வெளியானது. அந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு ஏற்கனவே கிடைத்த வெற்றியால் ‘பீஸ்ட்’ படத்திற்கு போலவே, கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்திற்கும் அதிகமான தியேட்டர்கள ஒதுக்கப்பட்டது.

இதேபோலத்தான் பொன்னியின் செல்வன்’ வெளியான சமயத்தில் கன்னடத்திலிருந்து வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் இங்கே வரவேற்பை பெற்றதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன.

நாம்தான் திராவிடம் என்கிற பாசத்துடன் அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை தமிழர்களாக மட்டும்தான் பார்க்கிறார்கள். ‘வாரிசு’ படத்தை தயாரித்தவரும், இயக்கியவரும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள்தான். ஹீரோ மட்டும்தான் தமிழ். அதனால் ஹீரோவை கார்னர் பண்றாங்க.

இப்போது அவர்கள் கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறை நம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. இதை சாதாரண பிரச்சினையாக கடந்து போக முடியாது. இது நமது மானப் பிரச்சனை.

தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் சரிசமமான முடிவெடுக்க வேண்டிய தென்னிந்திய வர்த்தக சபை இதில் தலையிடவேண்டும். மவுனமாக இருப்பது தப்பாக போய்விடும். அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கமும் குரல் கொடுக்க வேண்டும்.

‘வாரிசு’ படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அடுத்து இங்கே வேறு எந்த மொழி படமும் ரிலீஸ் ஆகாத அளவுக்கு பிரச்சனை பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது நம் ரோஷத்தையும், உணர்வையும் தூண்டி விடக்கூடிய ஒரு விஷயம்..” என்றார்.