நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் 2-ம் பாகம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் வசூலை முறியடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னட திரைப்படமான ‘கே.ஜி.எஃப்.-2’ தற்போது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகும்.
இந்தப் படத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு நாளை மறுதினம் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
‘கே.ஜி.எஃப்.’ படத்தின் முதல் பாகம் கன்னட சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றதைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வட இந்தியாவில் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தில் பாலிவுட்டின் மிகப் பெரிய நடிகர்களான சஞ்சய் தத், ரவீணா டாண்டன் ஆகியோரை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். இதற்கேற்றபடி படத்திற்கான வியாபாரமும் மிகப் பெரிய அளவுக்கு நடந்துள்ளது.
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக சொல்லப்படும் இப்படத்திற்கு உலக அளவில் 400 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடகாவில் படத்தின் வினியோக உரிமை 150 கோடி ரூபாயாவது இருக்கும் என்கிறார்கள். அங்குள்ள 900 தியேட்டர்களில் 550 தியேட்டர்களில் ‘கே.ஜி.எஃப்.-2’ வெளியாகிறதாம்.
தெலுங்கு பட உரிமை 78 கோடிக்கும், தமிழ் பட உரிமை 40 கோடிக்கும், ஹிந்தி பட உரிமை 100 கோடிக்கும், வெளிநாடு உரிமை 75 கோடிக்கும் விற்பனையாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக இப்படத்தின் ஒட்டு மொத்த தியேட்டர் விநியோக உரிமை 443 கோடியைத் தொட்டுவிட்டது என்கிறது இந்தியத் திரையுலக வட்டாரம். .
இந்தப் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்துக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 100 கோடியில் தயாரான இந்தப் படத்தினால் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மிகப் பெரிய லாபம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
வரும் ஏப்ரல் 14, 15, 16, 17 ஆகிய நான்கு நாட்களும் இந்தியா முழுவதும் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதால் இந்தக் ‘கே.ஜி.எப்.-2’ படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முன் பதிவிலும் பெரும்பாலான தியேட்டர்களில் 4 நாட்களும் ஹவுஸ்புல்லாகிவிட்டது.
இதன் மூலமாக சமீபத்தில் வெளியாகி மிகக் குறுகிய காலத்தில் 1000 கோடி வசூலைத் தொட்டுவிட்டு ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் வசூலை இந்த ‘கே.ஜி.எப்.-2’ படம் எளிதில் முறியடிக்க வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.