மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிஸியாக நடித்து வந்தார். 2019ஆம் ஆண்டு, அவர் இயக்குநராக மாறி, மோகன்லாலை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துச் ‘லூசிபர்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை உருவாக்கினார். அதன் வெற்றியை தொடர்ந்து, அவர் ‘ப்ரோ டாடி’ என்ற படத்தையும் மோகன்லாலை வைத்து இயக்கினார். தற்போது, ‘லூசிபர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது.
‘லூசிபர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு பிரித்விராஜுக்கு கிடைத்தது. ஆனால், அவருடைய பரபரப்பான வேலைப்பளுவின் காரணமாக, அந்த வாய்ப்பை அவர் ஏற்க முடியாமல் போனார்.சமீபத்தில், ‘எம்புரான்’ படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்தின் வீட்டில் சென்று அவருக்கு காட்டி, அவரது வாழ்த்துகளை பெற்றுவிட்டு வந்துள்ளார். மேலும், ஒரு சமீபத்திய பேட்டியில், ‘லூசிபர்’ படத்தில் மோகன்லால் காரிலிருந்து இறங்கி நடக்கும் அறிமுகக் காட்சி குறித்து ஓர் ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய தமிழக முதல்வர், போயஸ் கார்டன் சாலை பகுதியில் முதல்வரின் கார் செல்வதற்காக, ரஜினிகாந்தின் காரை போலீசார் நிறுத்தியுள்ளனர். சிறிது நேரம் கழித்து, ரஜினிகாந்த் மனஅழுத்தமடைந்து, நேரடியாக காரிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினார். அவரை பார்த்த மக்கள் திரண்டுவிட்டதாக அந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
“இந்த தகவலை நான் செய்தித்தாளில் படித்திருக்கிறேன். அதிலிருந்துதான் எனக்கு ‘லூசிபர்’ படத்தின் ஓப்பனிங் காட்சி குறித்த கான்செப்ட் வந்தது. அந்த காட்சியில், போலீசார் மோகன்லாலின் காரை செல்ல விடாமல் நிறுத்துவார்கள். ஆனால், மோகன்லால் நிதானமாக, ‘கார் போகக்கூடாது.. ஆனால், நான் நடந்து செல்லலாம், அல்லவா?’ என்று கூறிவிட்டு, காரிலிருந்து இறங்கி நடந்து செல்வார். இப்படித்தான் அந்த காட்சியை உருவாக்கினேன்” என்று பிரித்விராஜ் பகிர்ந்துள்ளார்.