Friday, November 22, 2024

‘என் உயிர்த் தோழன்’ படத்தில் உதவி இயக்குநர் பாபு ஹீரோவானது எப்படி..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘தாவணிக் கனவுகள்’ படத்தில் ஒரு காட்சி வரும்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராகப் பணியாற்றும் பாக்யராஜ், ஒரு நடிகரிடம் ஒரு காட்சியில் எப்படி வசனம் பேச வேண்டும்.. நடிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார்.

இதைத் தூரத்தில் இருந்து பார்க்கும் பாரதிராஜா அந்த நடிகரைவிடவும் வசனத்தையும், நடிப்பையும் சொல்லிக் கொடுக்கும் பாக்யராஜே, அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான நபர் என்று நினைத்து பாக்யராஜையே ஹீரோவாக்குவார்.

இந்தக் காட்சியில் இருக்கும் கதை உண்மையாகவே தமிழ் சினிமாவில் அதுவும் அவருடைய இயக்கத்திலேயே உருவான ஒரு படத்தில் நடந்திருக்கிறது.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜவின் இயக்கத்தில் 1990-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘என் உயிர்த் தோழன்’.

அப்போதைய அரசியல் கட்சிகளின் போக்கையும், கட்சிப் பதவிகளைப் பயன்படுத்தி அப்பாவி தொண்டர்களை, கட்சித் தலைவர்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறார்கள் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்த திரைப்படம் இது.

தமிழ்ச் சினிமாவின் அரசியல் பேசிய திரைப்படங்களின் பட்டியலில், இந்தப் படமும் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர் பாபு. ஆனால் படத்தின் துவக்கத்தில் இவர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. படத்தின் துவக்கத்தில் இருந்து ஸ்கிரிப்ட் எழுதி முடித்து ஷூட்டிங்கிற்குப் போகும்வரையிலும் பாபு நடிப்புக்கே வரவில்லை. அவர் அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். மெட்ராஸ் தமிழை மிகக் கச்சிதமாகப் பேசுவார்.

இந்தப் படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தவர் ராஜா சந்திரசேகர் என்பவர். இவர் பாரதிராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர், கவிஞர், எழுத்தாளர். இவருக்கு மெட்ராஸ் பாஷை தெரியாததால் அதைச் சொல்லிக் கொடுக்கும்படி பாபுவிடம் சொன்னார் பாரதிராஜா.

இதனால் தினமும் அந்த மெட்ராஸ் பாஷையை ராஜா சந்திரசேகருக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் பாபு. அதை சில நாட்கள் கூர்ந்து கவனித்த பாரதிராஜாவுக்கு பாபு அந்த வசனங்களை சொல்லிக் கொடுத்தவிதம், பேசிய விதம்.. அப்போது அவரது முகத்தில் தெரிந்த நடிப்பு, பாவனைகள்.. எல்லாம் ராஜா சந்திரசேகரைவிடவும், பாபுவே இந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமானவர் என்பதைக் காட்டியது.

உடனேயே ராஜா சந்திரசேகருக்குப் பதிலாக பாபுவையே அந்தப் படத்திற்கு கதாநாயகனாக்கினார் பாரதிராஜா. இதனால் பெரிதும் மனத்தாங்கல் பட்ட ராஜா சந்திரசேகர் அப்போதே பாரதிராஜாவிடமிருந்து விலகிவிட்டாராம்.

ஆனாலும், பாரதிராஜாவின் தேர்வு சோடை போகாது என்பதை போல படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார் பாபு.

இதேபோல்தான் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் கே.பாக்யராஜ் வசனங்களை சொல்லிக் கொடுக்கும்விதம்.. ஒரு கிராமத்து வாத்தியார் எப்படி நடந்து கொள்வார் என்று அவர் நடித்துக் காட்டியவிதமெல்லாம் பாரதிராஜாவை பெரிதும் கவர்ந்ததால் கே.பாக்யராஜையே ஹீரோவாக்கினார்.

சிறந்த இயக்குநர்களால் மட்டுமே நல்ல நடிகர்களை அடையாளம் காட்ட முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும்.

- Advertisement -

Read more

Local News